Wednesday, August 1, 2007

சார்ல்ஸ்டன் தேயிலை தோட்டம்

விடியலுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும்போதே, காபி.... டீ..... சாயா...... என்று ஜன்னலோரத்தில் கூவ துவங்கிவிட்டது, ரயில் நிலைய டீ காபி விற்பனையளர்கள் கூட்டம். சத்தம் கேட்டு அரைத் தூக்கத்திலிருந்து விழித்து,, பல் துலக்கவும் மறந்து போய், அவசரமாய் சில்லரையை தேடி, ஒரு கப் சூடான டீ வாங்கி உறிஞ்சியதும் தான் ஆனந்தமான காலை பொழுதை துவங்கிய திருப்தி சில பயணிகளுக்கு. டீ கடைக்கு போய் ரேடியோ கேட்டுக்கொண்டே அந்த "தண்ணி" டீயை குடித்தால் ஒரு தனி சுகம் தான். அலுவலக பணியாளர்களாயினும், தினக்கூலி வாங்குபவர்கள் ஆயினும் “டீ பிரேக்” எடுப்பது நம் நாட்டில் மட்டுமன்றி எல்லா இடங்களிலும் ஒரு பொழுது போக்கு இடைவெளி. சூடான சீதோஷணம், தாராளமான மழை, நீர் வழிந்தோடக்கூடிய நிலச்சரிவுகள் - இவை தேயிலை செடிகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. "அமெரிக்கன் கிலாசிக் டீ" தயாரிக்கும் "சார்ல்ஸ்டன் டீ பிலான்டேஷன்" மட்டுமே அமெரிக்காவின் (வட அமெரிக்காவின்) ஒரே ஒரு தேயிலை தோட்டம். இச்செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான தட்பவெப்ப நிலைகள் இங்குதான் ஓரளவுக்கு திருப்திகரமாக உள்ளன.

M.U.S.C-ல் தேயிலை தோட்டம் சுற்றிப்பார்க்க அழைத்து செல்கிறார்கள் என்றதும் - ஆகா என்று விடுமுறை நாள் ஆனாலும் விடியலிலே எழுந்து தயாராகி, தோசை சுட்டு பொட்டலம் கட்டிக்கொண்டு, எங்கள் பிள்ளைகளை இடுப்பிலும், வயிற்றிலுமாக சுமந்துகொண்டு, மூச்சு வாங்க கிளம்பிவிட்டோம். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அத்தேயிலைத் தோட்டத்தில் நல்ல மழை வரும் போல் கருமேகம் சூழ்ந்திருக்க, சில்லென்ற காற்று வீச, டவுன் டவ்ன் நெரிசலின்றி மனதிற்கு இதமாக இருந்தது. சொகுசு பேருந்து ஒன்று பார்வையாளர்களை வசதியாக அமர்த்திக்கொண்டு சுற்றிக்காட்ட கிளம்பியது. புகைப்படங்கள் எடுக்கவும், அந்த 127 ஏக்கர் பரந்த தோட்டத்தைப் பற்றிய வர்னனைகளைக் கூறவும், பேருந்தை, ஓட்டுனர் பல இடங்களிள் நிறுத்தினார். வாட்மலாவ் தீவில், மேபேங் நெடுங்சாலையில் உள்ள இத்தோட்டம் 1915 முதல் பாழடைந்து கிடந்தது. 1960ல் தாமஸ் லிப்டன் கம்பெனி இதை வாங்கி 1987 வரை பராமரித்து வந்தது. 1987ல் மேக் ப்ளமிங் மற்றும் வில்லியம் கால் ஆகிய இருவரும் இதை வாங்கி 2003 வரை நடத்தி வந்தனர். 2003ல் பிக்கெலாவ் என்பவருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இன்று பார்வையாளர்களுக்காக பேருந்து, தொழிற்சாலை பற்றிய வர்னனைகள் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பலவித தேயிலை செடிகள், வெவ்வேறு வளர்ச்சி பருவங்களில் உள்ள செடிகள், நீர் பாசனம் மற்றும் அறுவடை முறைகள் ஆகியவற்றை பேருந்தில் இருந்தபடியே கண்டுகளித்தோம். ஊர் சுற்றிப்பார்த்த களைப்பில் நல்ல பசி. மனைவி சுட்ட தோசை கூட அமிர்தமாய் உள்ளிறங்கியது. வழக்கம் போல அன்றும் முகத்தை சுளிக்காமல், மிகச் சுவைத்து சாப்பிட்டது எங்கள் சிறு வண்டு (இல்லை, வாண்டு!). தேயிலை பதப்படுத்துதல், காயவைத்து, பொடியாக்கி, பின்னர் சலித்து பொட்டலமாக்கப்படும் முறைகளை கண்ணாடி அறைக்குள்ளிருந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டோம். பின்னர் அங்கிருந்த பரிசுப்பொருள் விற்பனைக் கடையில் அனைவருக்கும் இனிப்பற்ற மற்றும் இனிப்பு கலந்த தேயிலை பானம் அருந்துவதற்கு அளிக்கப்பட்டது. தேயிலைக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேயிலையில் உள்ள திரியோனின் என்ற அமினோஅமிலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காச நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதுடன், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தேயிலையில் உள்ள பாலிபீனால்கள் கட்டுப்படுத்துகின்றன. தற்போது, "கிரீன் டீ (green tea)" க்கு பல நற்குணங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் தெரிந்துகொண்ட திருப்தியில் வெளியே வரும்போது அனைவருக்கும் ஒரு ஜோல்னாப் பையில் ஒரு தேயிலைப் பொட்டலமும், சார்ல்ஸ்டன் டீ பிளான்டேஷன் பற்றிய DVD-ம் இலவசமாக வழங்கப்பட்டது. கரும்பசுமையான அத்தோட்டத்தின் அழகை எங்கள் கேமராவுக்குள் ஓரளவுக்கு கைப்பற்றிக் கொண்டு திருப்தியாய் வீடு திரும்பினோம். போய் வந்த களைப்பிற்கு ஏலக்காய், கிராம்பு, லவங்கம், இஞ்சி, மிளகு எல்லாம் தட்டிப்போட்டு ஒரு கப் சூடான டீ குடித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்????

மாயோன், ராதை.

Sunday, July 29, 2007

மதம்

வணக்கம்,
நன்பர்களே எப்படி இருக்கிறீர்கள், இது என் முதல் பதிவு/முயற்சி.

மனித நேயத்தை வற்புறுத்தாத
எந்த மதத்தையும்,
நான் மதிப்பதில்லை.

-சிட்டிலிங்கி