Sunday, July 29, 2007

மதம்

வணக்கம்,
நன்பர்களே எப்படி இருக்கிறீர்கள், இது என் முதல் பதிவு/முயற்சி.

மனித நேயத்தை வற்புறுத்தாத
எந்த மதத்தையும்,
நான் மதிப்பதில்லை.

-சிட்டிலிங்கி

Friday, July 27, 2007

முல்லை நடவரசு - ஒரு தூண்டுகோல்


அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, FeTNA திருவிழாவில் பங்கேற்ற பின்னர், கடந்த 22ம் தேதி எங்கள் தமிழ்ச் சங்கத்தின் கோடை விழாவில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தார் திரு முல்லை நடவரசு. கோடைவிழாவுக்குப் பின் எங்களோடு தங்கியிருந்த முல்லை நடவரசு அவர்களுடன் நாங்கள் கழித்த மூன்று மாலை நேரங்களைப் பற்றிய பதிவு இது.

ஒரு சிறிய நகரத்தில் சிறிய தமிழ்ச்சங்கத்தின் இளைஞர்கள் நாங்கள். எங்களுக்கோ கவிதை, பட்டிமன்றம் , இலக்கியம் எல்லாமே எங்கேயோ எப்போதோ கேட்ட ஞாபகம்தான். எங்களுக்கெல்லாம் கவிதை எழுதவோ அல்லது பட்டிமன்றத்தில் பேசவோ தெரியாது ( அல்லது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம் ). ஞாயிற்றுக்கிழமை முல்லை அவர்களின் பேச்சைக் கேட்டுக் களித்திருந்தோம் . அடுத்த நாள் பார்த்தால் தமிழ்ச்சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாகத் தகவல். அது ஒரு பட்டிமன்றப் பட்டறை என்று சொன்னார்கள் . பட்டறை என்றால் workshop என்று சொன்னார்கள். அதில் முல்லை ஒரு இரண்டு மணி நேரங்களுக்கு வகுப்பு எடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இந்த வகுப்பு சுவையாகவும், அன்பாகவும் இருந்தது . பட்டி மன்றத்தில் எப்படிப் பேசவேண்டும், எப்படி அதற்காகத் தயாரிக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களையெல்லாம் சொல்லித் தந்தார் . நாங்கள் குறிப்பெடுத்துக் கொண்டோம். நாங்களே ஒரு பட்டிமன்றத்தில் பேசுவதற்கும் தலைப்பு ஏற்பாடு செய்துவிட்டோம் . "இளைஞர்களிடம் சமூகப்பொறுப்பு அதிகமாக இருப்பது சொந்த மண்ணிலா , வந்த மண்ணிலா ?" என்பதுதான் தலைப்பு. நாங்களே இரு அணிகளைப் பிரித்துக் கொண்டு தயாரிக்க ஆரம்பித்தோம். முல்லையின் பாடங்கள் உதவியாக இருந்தன .


அடுத்த நாள் மாலையைக் கவிதை மாலையாக ஆக்கிவிட்டோம். அதில் முல்லை எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து சில கவிதைகளை வாசிப்பதாகவும் மற்றும் வருகின்ற நண்பர்கள் தாங்கள் எழுதிய ( அல்லது எழுத முயற்சித்த) கவிதைகளைக் கொண்டுவந்து வாசிப்பதாகவும் ஏற்பாடு . சூரிய வார்ப்புக்கள் என்ற தனது கவிதைத் தொகுப்பிலிருந்து (கண்ணதாசன் அதற்கு வாழ்த்துரை எழுதியிருக்கிறார் ) சில கவிதைகளை வாசித்துக் காட்டினார். அவற்றுள் விறகுக்காரி என்ற கவிதையைத் தான் விரும்புவதாகவும் அதை எழுதிய பின்புலத்தையும் எங்களுக்குச் சொன்னார் . நம் நண்பர்களில் சிலர் கவிதை தெரியாது என்று சொல்லிவிட்டு வெளுத்து வாங்கினார்கள். எங்களுக்கும் கவிதை வரும் என்பது அன்றுதான் தெரிந்தது . எங்களை ஊக்குவிப்பதற்காக அடுத்த நாள் "நாளை " என்ற தலைப்பில் சில கவிதைகளை எழுதிக்கொண்டு வரச்சொன்னார் முல்லை. சரி என்று அனைவரும் விடைபெற அன்றைய கவிதை மாலை நிறைவுற்றது.


அடுத்த நாள் எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சியும் கலக்கமும் கலந்த உணர்வாக இருந்தது. ஏனென்றால் அன்றைக்குத்தான் பட்டிமன்றம், கவிதை வாசிப்பு மற்றும் முல்லையுடன் நாங்கள் கழிக்கும் கடைசி மாலை. அது எங்கள் Isle of Palms கடற்கரையில் நடந்தது . இரவுணவையும் அங்கேயே எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம். அழகுக் கடற்கரை, சுடரும் நிலவு, ஆடும் அலைகள், வீசும் காற்று, கடற்கரை மணலில் விளையாடும் பிள்ளைகள் என்று அந்தச் சூழல் இனிமையாக இருந்தது.


ஆளுக்குக் கொஞ்சம் சுண்டலுக்குப் பின் முல்லையின் தலைமையில் கவிதைகள் வாசிக்கப்பட்டன. சில உடனடிக் கவிதைகளும் எழுந்தன . பிறகு ஒரு எளிமையான, சுவையான உண்டிக்குப் பின் பட்டிமன்றம் ஆரம்பமாகியது. அப்போது மாலைச் சூரியன் மறைந்துவிட்டிருந்தான் . பேசுபவர்களுக்கு நேரம் முடிந்து மணியடிக்க நடுவர் முல்லையிடம் மணி இல்லை . அதனால் ஒரு கைவிளக்கை அடித்து சைகை காட்டிக்கொண்டிருந்தார். இரு அணிகளும் பலமாக வாதிட்டன . ஒரே ஆரவாரமும் , ஆவேசமும், கிண்டலும், கைத் தட்டலுமாகக் கும்மாளம் நடந்தது. நடுவரின் தீர்ப்பும் வந்தது. வெற்றி தோல்வி எங்களுக்கு முக்கியமாகப் படவில்லை. வாதங்களில் வைக்கப்பட்ட கருத்துக்களைச் சுற்றியே எண்ணங்கள் அலைந்தன.


மொத்தத்தில் முத்தான நாட்கள். முல்லை நடவரசு அவர்கள் இங்கு வரும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு (FeTNA) எங்கள் அன்பான நன்றி. மேலும் எங்களுக்கு முன் நிகழ்ச்சிகள் நடத்தி அவரை எங்களூருக்குச் சிறப்பாக வழியனுப்பிய நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்துக்கும், எங்களுக்குப் பின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து அவரை வரவழைத்துக் கொண்ட ஹ்யூஸ்டன் பாரதி கலை மன்றத்துக்கும் எங்கள் நன்றி (குறிப்பாக பாரதி கலைமன்றம் எங்களிருவருக்கிடையேயான பயணச்செலவை ஏற்றுக்கொண்டு ஒரு இளைய தமிழ்ச் சங்கத்தை அன்புடன் நடத்தியதற்கு:))

எங்களுக்குள் இருந்த தமிழார்வச் சுடரைத் தூண்டிவிட்டுச் சென்றிருக்கும் முல்லை நடவரசு அவர்களை நாங்கள் நன்றியுடன் நினைத்துக்கொள்வோம். அவருக்கு அன்புடன் நாங்கள் கொடுத்திருக்கும் பரிசு ஒரு வலைப்பதிவு: முல்லை நடவரசின் தமிழ்ச் சோலை (http://nadavarasu.blogspot.com). இதன் மூலம் அவர் எங்கிருந்தாலும் எங்களோடு பேசிக்கொண்டிருப்பார்!

Saturday, July 21, 2007

சார்லஸ் டவுனி லேன்டிங் - ஒரு வராலாற்று சிறப்பு மிக்க இடம்.

ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கு எப்போது வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்பதற்கு பல கதைகள் உண்டு. இது எங்க ஊரு கதை. அமெரிக்காவுல எந்த ஊருக்கு போனாலும் மண் நிறத்தில்(Brown colour) ஒரு பலகை மாட்டி வைத்து இருப்பார்கள், இது வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரம் (Historic city) என்பதற்கான அடையாளம். எங்கள் ஊரிலும் ஒரு பலகை மாட்டி வைத்து இருக்கிறார்கள்,வரலாறு என்னவென்றால்?
1670 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொன்னு கிடைத்தாலும், கிடைக்காத புதன் கிழமை சுமார் 148 ஆங்கிலேயர்கள் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உட்பட சார்லஸ் டவுனி லேன்டிங்கில், அல்பி மாரேலல் (Albemarle pointe) என்னும் இடத்தில் வந்து இறங்கினார்கள் (இப்பொழுதும் இந்த இடத்தை காணலாம்). வந்தவர்கள் மிக விரைவிலேயே வீடு கட்டி அங்கேயே ஒரு சிறு சமூகத்தை (Colony) உருவாக்கினார்கள். தங்களுக்கு தேவையான உணவையும் அங்கேயே தயாரித்து கொண்டணர், பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளைச் சுற்றிலும் மரத்தினாலான வேலியை அமைத்துக் கொண்டனர். இதுதான் வெள்ளைகாரர்கள் கரோலினாவந்த கதை, பிறகு இங்கிருந்து கரோலினாவின் மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்னமும் இங்கு ஆங்கிலேயர், சிவப்பு இனத்தினர் மற்றும் கருப்பு இன மக்களைப்பற்றியும் அவர்கள் பண்பாடு, வியாபாரம் மற்றும் கலை ஆகியவற்றை பற்றியும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.சரி இப்ப இங்க என்ன இருக்கின்றதுன்னா? குழந்தைகள் கண்டு மகிழ ஒரு சிறு மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு கரோலினா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.
அழகான சிறு குளங்களும் அதில் பறக்கின்ற கொக்குகளும் மிக அழகான காட்சி (அமர்ந்து பார்க்க ஆங்காங்க இருக்கைகள் உள்ளது). நடந்து செல்லும் நடை பாதையின் இருபுறங்களில் பசுமையான மரங்கள் உள்ளன.
80 ஏக்கர் நிலப்பரப்பில், ஆயிரக்கனக்கான அசாலியஸ்(Azaleas), கெமிலியாஸ்(Chamellias) மற்றும் ஓக் (live oak) மரங்களும் உள்ளன. இங்குள்ள தகவல் தொடர்பு மையத்திலேயே ஒரு சிறு அருங்காட்சியகமும் உள்ளது.
இங்கு குழந்தைகள் கொண்டு செல்வதற்கான தள்ளு வண்டி இலவசம், ஆனால் நமக்கு $5 நுழைவுக் கட்டணம். இந்த இடத்தை பற்றி நான் மேலும் சொல்வதை விட நீங்களே மாயோனின் புகைப்படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
முகவரி: 1500 Old Towne Rd, Charleston.

எழுதியவர்: இன்பம், இனியாழ்.
டம் : மாயோன், ராதை.

Wednesday, July 18, 2007

சார்லஸ்டன் கப்பல் திருவிழா

ஒரு நாள் எங்க ஊர்ல கப்பல் திருவிழா நடந்துச்சு. அப்படின்னா என்னவா? பெரிய பெரிய பாய்மரக் கப்பல்கள் எல்லாம் வரும். நிறைய நாடுகளிலிருந்தும் வரும். ஒரு நாள் நம்ம பருவாச்சியான் போய் ஒரு நாலஞ்சு கப்பலைப் பிடிச்சுக்கிட்டு வந்தாரு.



நல்லா உத்துப் பாருங்க. ஒன்னு இந்தியாவோடது. தரங்கிணி. தரங்கம் அப்படின்னா அலை. தரங்கம்பாடின்னு ஒரு ஊர் ஞாபகம் வருதா? அலை பாடும் ஊர்.



சார்லஸ்டன் துறைமுகம் இந்த நாட்டுக்கு ரொம்பப் பழசு. அந்தக் காலத்துல அமெரிக்காவுக்கு வாற கப்பல் எல்லாம் இங்கதான் வருமாம். இந்த பைரேட்ஸ் கதையெல்லாம் இங்க சொல்லிக்குவாங்க. நிறைய இடங்கள்ள அன்னாசிப் பழம் சிலை வச்சிருப்பாங்க. ஏன்னா அது நட்புக்கு அடையாளமாம். அந்தக் காலத்தில ஆப்பிரிக்காவிலேருந்து வாறவங்க நட்பைக் காட்டுறதுக்கு அன்னாசி கொண்டு வந்தாங்களாம். ஆமாங்க, நாங்க எல்லாரும் ரொம்ப நட்பானவங்க. எங்க ஊரு நிறைய தரம் நட்பான நகரம்னு பேர் வாங்கியிருக்கு. அட, சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன். பருவாச்சியான் எடுத்த கப்பலைப் பாத்தீங்களா, அதுக்கப்புறம் இதெல்லாம் நம்ம ஊரு சின்னப் படகுகள். மெரினாவுல நிக்கும்.

இதான் சிடி மெரினாவுல சூரியன் மறையுறது. எங்க ஊருல சூரியன் நல்லாதான் இருக்கு!

படங்கள்: பருவாச்சியான்

எழுதியவர்: பனையேறி

Monday, July 2, 2007

சைப்ரஸ் பூந்தோட்டம்

ஒரு அழகான தோட்டம், இல்லை இல்லை, மிகவும் அழகான தோட்டம் நம்ம சார்லஸ்டன்க்கு மிக அருகிலேயே உள்ளது. என்ன நுழைவு கட்டணம் $10 செலுத்த வேண்டும். பிறகு உள்ளே படகு சவாரி செய்யலாம், மீன் காட்சியகம், வண்ணத்துப் பூச்சி கூடம், முதலை, ஆமை வீடு மற்றும் அழகிய பூந்தோட்டம் என எல்லாம் பார்க்கலாம். இந்த இடம் முன்பு சைப்ரஸ் மரங்கள் அடர்ந்த நெல் பயிரிடும் தோட்டமாக இருந்தது. பிறகு தான் அழகிய சைப்ரஸ் பூந்தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

வண்ணத்துப் பூச்சி கூடம்: இங்கு சார்லஸ்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பல விதமான வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவகையில் இங்கு பல்வேறு விதமான வண்ணத்துப் பூச்சிகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். வண்ணம் என்றால் வண்ணம் அப்படி ஒரு அழகுவண்ண வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டம், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியில் சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிட்டனர். நம்ம மாயோன் அண்ணன் மட்டும் சுமார் 500 படங்கள் எடுத்துத்தள்ளியிருக்கின்றார் என்றால் பாருங்களேன். (அவர் வீட்டுச்சுவற்றில் பல வண்ணத்துப்பூச்சி படங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, உங்களுக்கும் வேண்டும் என்றால் மாயோனை தொடர்புகொள்க). நம்ம பனையேறி அண்ணன் மட்டும் வத்திருந்தால் பல கவிதைகளை எழுதித்தள்ளியிருப்பார். இங்கு வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்படுகின்றது. வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்கை சுழற்ச்சி பற்றிய விளக்கப்படமும் உள்ளது. மேலும் உள்ளேயே தேனீ கூடு ஒன்றும் உள்ளது.





































மீன் காட்சியகம்: இது 1998ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பல வகையான சிறிய மற்றும் பெரிய வகை மீன்களும், பறவைகளும், பாம்பு இனங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பேசும் கிளி ஒன்றும் உள்ளது.
படகு சவாரி: அடர்ந்த சைப்ரஸ் மரங்களுக்கு இடையே கருப்பு நிற நீரில் நீங்களாகவும் படகு சவாரி செய்யாலாம் அல்லது அங்கு உள்ள ஒரு படகோட்டி துணையுடனும் சவாரி செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஓட்டலாம். ஆனால் எச்சரிக்கை: தண்ணீரில் கை வைத்து செல்ல வேண்டாம், முதலைகள் உள்ளது. மேலும் ஆமைகளும் பல வகை மீன்களும் உள்ளன, கரைகளில் அழகிய மலர்களை பார்த்துக்கொண்டே படகுசவாரி செய்யலாம்.
இங்கு உணவு அருந்துவதற்கு என்றே மிகவும் அருமையான இடம் உள்ளது. ஆனால் உணவு விற்பது கிடையாது. நாம் சமைத்து எடுத்து சென்ற உணவை அங்கே சாப்பிடலாம். பத்து டாலர் செலவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்து மகிழ சிறந்த இடம்.
முகவரி: 3030 சைப்ரஸ் கார்டன் சாலை, மாங்க்ஸ் கார்னர்,தென் கரோலினா.

எழுதியவர்: இன்பம், இனியாழ்.
படம்: மாயோன், ராதை.

Sunday, June 24, 2007

ஹாமில்டன் பூங்கா

நம்ம மனைவிமார்களுக்கு கார் ஓட்ட கத்து கொடுக்கணும்ணா MUSC-ஹாகூட் கார் நிருத்தும் இடமும் (hagood parking lot) பிரிட்டில் பான்க் பூங்கா (brittle bank ) க்கும் போவோம். ஆனால் இதற்கு மிக அருகிலேயே ஹாமில்டன் பூங்கா (Hamilton Park) உள்ளது. இங்கு மனைவிக்கு கார் ஓட்ட கத்து கொடுத்துக்கொண்டே மனதுக்கு ரம்மியமான இடத்தையும் பார்த்துவிட்டு வரலாம்.

குழந்தைகள் பார்த்து ரசிக்க வாத்து கூட்டமும்,குதூகலித்து மகிழ ஒரு நீருற்றும் உள்ளது. நாம் பார்த்து மகிழ மலர் கூட்டம் உள்ளது. இங்கு மிதி வண்டி ஓட்டலாம், sun bath எடுக்கலாம். நாம் நடப்பதற்காகமிக அருமையான நடை பாதை உள்ளது.




இங்கு தான் வருடா வருடம் குழந்தைகளுக்காண ஓட்ட பந்தயமும், Piccola Spoleto விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் பல இன்னிசை கச்சேரிகளும் நடைபெறுகிறது.


ஹாமில்டன் பூங்காவிற்கு அருகிலேயே சிட்டாடல் கல்லூரி உள்ளது, இங்கு வெள்ளி கிழமைகளில் நடை பெறும் பரேட் மிக பிரசித்தம். என்ன மனைவிக்கு கார் ஓட்ட கத்துதர கிளம்பிவிட்டீர்களா?



எழுதியவர்: இன்பம், இனியாழ்

படம் : மாயோன், ராதை

பதிவதில் உதவி: பனையேறி