Tuesday, October 7, 2008

வேறன்ன, "சார்ல்ஸ்டன்" தான்

பனையேறி பாட்டுக்கு "சார்ல்ஸ்டன்" பத்தி 10 - 12 போட்டோவ "பனைநில"த்துலபோட்டுடுங்கன்னுட்டாரு. நானும் தேடு தேடுன்னு தேடி ஒருவழியா கைக்கு அகப்பட்டத இங்க பதிய போரேன். படங்கள் நிறைய இருக்கு. நேரம் தான் இல்ல. பின்ன நேரம் கிடைக்கிறப்ப அத தனியா பதியிறேன்.

சம்டர் கோட்டை (fort sumter)
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது பெரும் பங்காற்றியதாக் கருதப்படும் கோட்டை. சார்ல்ஸ்டன் முகத்துவாரத்தில் உள்ளது. படகில் தான் சென்று பார்க்கமுடியும்.



அன்னாசி நீருற்று மற்றும் பூங்கா (pineapple fountain)
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்த இடம். மாலைப் பொழுதைக் கழிக்க அருமையான இடம் இந்த நீருற்று


Y.S.S. யார்க் டவுன் (YSS yorktown)
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல். இன்று காட்சியகமாக உள்ளது. பார்க்கவேன்டிய இடங்களில் ஒன்று.

கடற்கரை
கடற்கரைகள் என்பது பொருத்தமாக இருக்கும். பாலி கடற்கரை (folly beach), அயில் ஆப் பால்ம் (isle of Palms) கடற்கரை, சுலைவன்ஸ் தீவு (Sullivan’s island) கடற்கரை ஆகியவை சார்ல்ஸ்டனுக்கு அருகில் உள்ளன. கடற்கரைகள் பற்றி நான் சொல்லவா வேண்டும்?

சார்ல்ஸ்டன் பேட்டரி (Charleston battery)
மாலை நடைப்பயிற்சிக்கு உகந்த இடம். சாலையின் இருபுறங்களிலும் பனைமரங்கள் அணிவகுத்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.

சூரிய உதயம் மற்றும் மறைவு

படகுத்துறை

குதிரை வண்டி சவாரி

புதுப்பாலம்

சில இடங்களப் பத்தி ஏற்கனவே படங்களோட பதிஞ்சிருகோம். கொஞ்சம் உள்ள நொழஞ்சி தான் பாருங்களேன்.


- மாயோன்

எங்கள் பாட்டு ஆசிரியையின் பயணக் குறிப்பு

முன்னுரை:
அமெரிக்கவாழ் தமிழர்களின் வீட்டுக்கு இந்தியாவிலிருந்து உறவினர்கள், குறிப்பாக பணி ஓய்வு பெற்ற பெற்றோர்கள், வருவது வழக்கம். இவர்கள் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் குடும்பத்துடனேயே கழிக்கிறார்கள். மகனோ மகளோ வேலைக்குப் போன பிறகு பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். சிலருக்கு நன்றாகப் பாடத் தெரியும், சிலருக்கு எழுதத் தெரியும், சிலருக்கு ஓவியம் வரும். சிலர் அருமையாகப் பேசுவார்கள். இப்படியாக. ஆனால் அவர்களது தமிழறிவையும் திறமையையும் பெரிதாக யாரும் பயன்படுத்திக் கொள்வார்களா என்பது ஐயமே. எங்கள் தமிழ்ச் சங்கத்தில், இவ்வாறு பயணத்தில் வரும் பெற்றோர்களையும் மற்றவர்களையும் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயல்கிறோம். பல நேரங்களில் நல்ல பலன் கிடைக்கிறது. விருந்தினர்களுக்குப் பொழுது போவதுடன், ஒரு நல்ல உதவியைச் செய்தோம் என்ற நிறைவும் கிடைக்கிறது. எங்களுக்கோ அரிய செல்வங்கள் வந்து சேர்கின்றன!

இந்த வகையில், ஒரு ஆராய்ச்சிப் பயிற்சிக்காக இந்தியாவிலிருந்து இங்கே ஓராண்டுக்கு வந்திருக்கும் திருமதி கீதா சூரியகுமார் அவர்களது அனுபவம் கீழே:

"புதுடில்லியில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் நான், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு வருடப் பயிற்சிக்காக சார்ல்ஸ்டனுக்கு வந்தேன். புது நாடு, புது விதமான மக்கள், புதிய வேலையிடம் என மிகவும் பயந்தேன். ஆனால் இங்கு வந்தால் ஒரே தமிழ் மயமாக இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கம், என்னை அவர்களது தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்குப் பாட்டு கற்றுக் கொடுக்க வாய்ப்பளித்தார்கள். நானே ஒரு சுமார் பாடகிதான். அதிலும் நான் பாட்டுப் பாடக் கற்றுக் கொண்டது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு! எனக்குச் சிறிது வியப்பாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் சொல்லிக் கொடுத்துதான் பார்ப்போமே என்று மூன்று மாதங்களுக்கு முன்பு, வாரம் ஒரு முறை என்று வாரயிறுதியில் வகுப்பெடுக்க ஆரம்பித்தேன். ஐந்திலிருந்து ஒன்பது வயது வரையில் உள்ள ஆறு சிறுவர், சிறுமியர் வகுப்பில் இருந்தார்கள். ஆங்கிலம் பேசும் சமூகச் சூழலில் இருந்தும் இவர்கள் தமிழ் கற்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் கர்நாடக இசையும், திருக்குறளும் அவர்களுக்கு நான் சொல்லித் தரப் போகிறேன், எழுந்து "it's boring" என்று வகுப்பிலிருந்து ஓடப் போகிறார்கள் என நினைத்தேன். ஆனால், இந்தச் சிறுவர் சிறுமியரோ மிகவும் அழகாகப் பாடக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இவர்களது பெற்றோர்களின் உழைப்புக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. வாரா வாரம் வகுப்பில் நான் சொல்லித் தரும் சரளி வரிசை மற்றும் திருக்குறள்களை, என் கணினியில் ஒலிப்பதிவு செய்து அவர்களது பெற்றோர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறேன். அதனால் பிள்ளைகள் வீட்டிலும் பாடிப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பிள்ளைகளின் ஆர்வம், பாட்டுப் படிக்கும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. பிள்ளைகள் அனைவரும் அருமையாகப் பாடுகிறார்கள். அவர்களைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த வகுப்பெடுக்கும் வலையில் சிக்கியதால், நானும் திருக்குறளைக் கற்றுக் கொண்டு பாட வேண்டியதாகிவிட்டது. டெல்லியிலேயே பிறந்து வளர்ந்த தமிழச்சியான எனக்கு இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு என் அமெரிக்கப் பயணத்தில் கிடைத்தது மிக அபூர்வம்தான். என் குடும்பத்தைப் பிரிந்து நான் தனியாக இருப்பது மிகக் கடினமாக இருந்தாலும், வகுப்பு நடத்தும்போது குழந்தைகளோடு செலவிடும் மதிப்புமிக்க கணங்கள் எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகின்றன. அவர்களின் சிரிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம், பேச்சு, எவற்றைச் சொல்வது, குழந்தைகளின் உலகமே ஒரு சொர்க்கம்தான். இந்தச் சின்ன வயதில் இந்தப் பிள்ளைகள் இவ்வளவு ஈடுபாட்டுடன், கடின உழைப்பும் திறமையும் கொண்டு இருக்கிறார்கள். இவர்களது திறன்களையெல்லாம் வெளிக் கொணர்வது பெற்றோர்களின் கைகளில்தான் இருக்கிறது. இன்னும் ஆறேழு மாதங்களில் நான் டெல்லிக்குத் திரும்பிவிடுவேன். ஆனால் இவர்களோடு நான் செலவிடும் இந்த இன்பமான நாட்களை நான் ஒரு போது மறக்கவியலாது.

அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் திருக்குறள்களையும், அவற்றின் பொருளையும் என்னால் படிக்க முடிகிறது. திருக்குறள் எத்தனை அருமையான நூல் என்று வியக்கிறேன். இந்த மிகச் சிறந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த பனைநிலத் தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமெரிக்கப் பயணத்தினால் என் தமிழ் ஆர்வமும், பாட்டுப் பயிற்சியும் மிகவும் கூடிவிட்டது. டெல்லிக்குத் திரும்பியவுடன் அங்கும் இதனைப் போன்ற பயிற்சியையும், கற்றுக் கொடுப்பதையும் செய்யவேண்டும் என்ற ஊக்கம் பிறக்கிறது."

எழுதியவர் - கீதா சூரியகுமார்
தட்டச்சு உதவி - பனையேறி

Monday, October 6, 2008

நாங்க யாரு!

எல்லோருக்கும் வணக்கமுங்க!
தனியொரு ஆளா நின்னு பல நட்சத்திரங்க பட்டையைக் கிளப்பிக்கிட்டிருக்க இந்த இடத்துல, இந்த வாரம் நாங்க ஒரு கூட்டுக் கச்சேரி நடத்தப் போறோம். நாங்க எல்லாரும்னா யாரு? எங்க தமிழ்ச் சங்கம்தான். பனைநிலத் தமிழ்ச் சங்கம் (பநிதச). இது என்னடா கேள்விப்படாத சங்கமா இருக்கேன்னு பாக்குறீங்களா? இது அமெரிக்காவுல இருக்க, தென் கரோலின மாநிலத்துல, சார்ல்ஸ்டன் அப்படிங்கற இடத்துல இருக்க தமிழ்ச் சங்கம். எங்க மாநிலத்துக்கு Palmetto State அப்படின்னு பேரு. ஏன்னா இங்க பனைமரம் மாதிரியா இருக்க ஒரு மரம் இருக்கும். அதுக்கு Palm அப்படின்னுதான் பேரு. அதனாலதான் பனைநிலம் அப்படின்னு வச்சோம். சங்கம் ஆரம்பிக்கிறப்ப இருந்தது என்னவோ மொத்தம் 30-40 பேருதான். இப்ப எங்க ஊரைச் சுத்தி ஒரு 100 தமிழ்க் குடும்பங்கள் இருக்கு.

எங்கள் சங்கத்தில் பல மதத்தினரும், பல நாட்டினரும், பல மொழி பேசும் இனத்தவரும் தமிழ் மொழியின் மேலுள்ள பற்றினால் கூடியிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் எங்களது பெரிய நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள், இன்னொன்று கோடை விழா. இவை தவிர சிறு சிறு நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்படுவதோடு, மக்களும் ஆங்காங்கே குழுக்களாகப் பயணம் செய்வதும், விருந்துண்பதும், வேலை செய்வதுமாகக் களிக்கின்றோம். இவ்வாரத்தில் எங்களது ஊரைப் பற்றியும், சங்க நடவடிக்கைகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் எவ்வளவோ தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ்ச்சங்கத்துக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனாலும் வேற்று மண்ணில் தமிழைக் காப்பதும், நம் இளையர்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் அனைத்து சங்கங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு பெரும்பணி. அனைத்து சங்கங்களும் தொடர்பற்று இருக்கும்போது ஒருவரது பிரச்சினை இன்னொருவருக்குத் தெரியாமல் போகும். ஆனால் இன்றைய இணைய உலகில், அனைத்துச் சங்கங்களும் ஒன்றோடொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் செயற்திட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பது எங்களது கருத்து.

எங்க ஊர் அழகான ஊர். ரொம்ப நட்பான ஊர் அப்படின்னு பல முறை பேர் வாங்கியிருக்கு. ஊரைச் சுத்தி வித விதமான கடற்கரைகள். ஊருக்குள்ள நிறைய பூங்காக்கள், குளங்கள், ஆற்றங்கரைகள். சுற்றுலாதான் எங்க ஊரோட பெரிய வருமானம். அந்தக் காலத்துல நிறைய பண்ணைகள் (பஞ்சு, நெல்) இருந்துச்சு. அடிமைத் தொழிலாளர்களை வைத்துப் பராமரிக்கப்பட்ட பண்ணைகளை இன்று கண்காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். ஆண்டு முழுவதும் எங்காவது ஏதாவது விழா நடந்துகொண்டே இருக்கும். பிக்கலோ ஸ்பொலெட்டோ (Piccolo Spoleto), புகழ்பெற்ற மகளிர் டென்னிஸ் (Family Circle Cup) போட்டிகளும் இவற்றில் அடக்கம். நாங்க வெளியூருக்குப் போகும்போதெல்லாம் அங்கிருக்கும் யாராவது எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கும்போது, நாங்கள் சார்ல்ஸ்டன் என்றால், அவர்கள் வாவ்வ்! அழகான ஊராச்சே என்பார்கள்! ஆமாம், அவ்வளவு அருமையான ஊராக்கும் எங்கள் ஊர்! ஆமா, நீங்கள் எப்போது வருகிறீர்கள்?! ஆனா என்ன, அப்பப்ப கொஞ்சம் புயல் அடிக்கும், சூறாவளி வரும். அப்பதான் கொஞ்சம் கடற்கரையைவிட்டுத் தள்ளி வரணும். ஆனா அந்த அமளியையும் நாங்க கொண்டாடுவோம்ங்கறது உங்களுக்குத் தெரியலன்னா முந்தைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க!

எங்கள் ஊருக்கு வரும் நண்பர்கள் ஏதேனும் உதவி, விபரங்கள் வேண்டுமெனில் எங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

எழுதியவர் - பனையேறி

Saturday, September 27, 2008

பனைநிலம் தமிழறிவியல் கருத்தரங்கம் 2008



"தமிழ் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி.....
"

"2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள்.....
"



நிறுத்துங்க நிறுத்துங்க!

எத்தன நாளைக்குத்தான் இந்த பெருமை பேசி வாழ்றது.
இதை பேசிப் பேசி இந்த நூற்றாண்டிலேயே தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள், ஆரியர்களாலும் மற்றவர்களாலும் தமிழ் உருக்கொழிந்ததைக் காட்டிலும் அதிகமாகவே தொலைத்து விட்டனர். தமிழ் எங்கள் உயிர் மூச்சு! தமிழ் இல்லையேல் நாங்கள் இல்லை!! என்று மேடையில் முழங்கிய திராவிடக் கட்சிகள் தமிழுக்கு செய்த தொண்டுதான் என்னவென்று உண்மையாகப் பார்த்தோமேயானால் - தமிழ் எழுதப் படிக்க, முறையாக பேசக்கூத் தெரியாத மற்றும் தமிழ் பேச கூச்சப்படகூடிய இளைய தலைமுறையினை உருவாக்கியது தான்.

இன்னும் கொஞ்சம் கசப்பான உண்மைகளையும் பார்ப்போமா!


இன்று உலகில் கிட்டத்தட்ட 6800 மொழிகள் இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளிலேயே பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து விடுமாம் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து கொண்டிருக்கிறது என்பது வேற விஷயம். சரி நமக்கு என்ன என்று பார்த்தால் இதில் தமிழ் மொழியும் ஒன்று என்று யுனெஸ்கோ மொழி ஆராய்ச்சி மையம் கூறுகிறது. உடனே எந்த மூடன் சொன்னான் தமிழ் என்றும் இறவா மொழி என்று கட்டியம் கூற கிளம்பி விட வேண்டாம். இன்றுள்ள நிலைமையைப் பார்த்தால் அது உண்மையாகி விடக்கூடிய நிலை உள்ளது. அடுத்த தலைமுறையில் என்ன, நம்ம வயசான காலங்களிலேயே தமிழ் வழக்கொழிந்த மொழியாகக் கூடிய அபாயம் உள்ளது.

இதை எப்பிடி சமாளிப்பது?.

அரசாங்கம் போன்ற அமைப்புகளில் நம்பிக்கை வைத்து பயனில்லை. அவர்கள் சமாதியில் தமிழை தள்ளி விட்டு செம்மொழியாக்கி விட்டோம் என்று மேடையில் வீர வசனம் பேசுவர். இதை நம்மைப் போன்ற எளியோர்களாலே இந்தப் பெரிய முயற்சியின் சிறிய தொடக்கத்தினை ஆரம்பிக்க முடியும்.
இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் உள்ள சார்லச்டன் எனும் ஒரு சிற்றூரில் உள்ள பனைநிலம் எனும் தமிழச் சங்கம்.

அதன் தலைவராக உள்ள
சுந்தர் அவர்களின் மிகச்சிறந்த இடைவிடா முயற்சிகளில் ஒன்று இது.


உலகத்தலைவர்களிடம் நேரம் கேட்டு ஒன்றாக அவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்துவது என்பது கூட பெரிய ஆச்சரியமில்லை. பனைநிலம் போன்ற அமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழகத்திலிருந்து வந்துள்ள இரவு பகலென்றும் பாராது வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள். அவர்களை ஒருங்கிணைத்து இதைபோன்ற தமிழிலேயே ஆராய்ச்சி மாநாடு நடத்துவது என்பது மிகப்பெரிய சவால் தான். சவாலே சாமாளி!

சுந்தர் பாட்டுக்கு தமிழ்ல ஆராய்ச்சி தொகுக்க ஆரம்பிங்கன்னு சொல்லிட்டாரு... ஆராய்ச்சியை விடக் கஷ்டமானது இந்த மாதிரி ரொம்ப முன்னேறிய ஆராய்ச்சியில இருக்கிற விசயங்கள தமிழ்ல மாத்துறது.....இத எப்படி பண்றதுன்னு நாங்க வேற சித்தம் கலங்கி போய்ட்டோம்.

முதல்ல ரெண்டு வாரத்துக்கு ஒரு மூச்சைக் காணோம். சரி ஆளுங்க அரண்டு போயி அமுங்கி போய்ட்டாங்கன்னு பார்த்தா, ஆளாளுக்கு தமிழ் அகராதி, அறிவியல் சொல்லகராதி, அறிவியல் தமிழ் அப்படி இப்படின்னு என்னனமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.நம்ம மக்கள் பக்கத்துல நெருங்கினாலே தூய தமிழ்ல ஆராய்ச்சிகளை பேசி நம்மள அசத்த ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி மாநாடு நாள் நெருங்க நெருங்க நம்மளுக்கு ஒரே பரபரப்பு.


மாநாட்டு நாள்.

மாநாட்டு மகால்ல நுழைஞ்சா பெரிய பரபரப்பு. நம்மாளுக அங்கங்கே அவசர கதியில் குறிப்பு எடுத்து கிட்டு இருக்காங்க. அதைப்பார்த்து நம்மளுக்கும் அந்த பரபரப்பு தொத்திகிச்சு.

தலைமை தாங்கியது திரு. கமலநாதன், சிறந்த எழுத்தாளர் . இவர் கேரளத்துக் கோயில் கலைகள், குறைகள் சாதனைக்குத் தடையல்ல, விண்வெளிப் பயணத்தைக் குறித்த நூல்கள் பலவற்றை எழுதியவர். இந்திய விண்வெளித்துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர். அறிவியலைத் தமிழில் கொண்டு செல்லும் இந்த ஒரு கருத்தரங்கிற்குத் தலைமை தாங்க மிகவும் பொருத்தமானவர். நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியது உமா மற்றும் ஆனந்தி.

முதல்ல வந்தாரு பருத்தி வீரன் கணேசு. பருத்தி உடை சார்ந்த தொழில்ல நிபுணத்துவம் பெற்ற அவரு பருத்தி துறை சார் நுணுக்கங்களை தெளிவா எடுத்து விளக்கினார். பருத்தி இழையிலிருந்து துணியாக மாறும் வித்தையை இழை இழையாக பிரிச்சி அலசி எடுத்தாரு.

அடுத்து நிறைய ஆளுக இருக்காக நம்ம மெல்ல போய்க்கிலாம்னு கொஞ்சம் அசந்தேன் பாருங்க.....நம்ம பேரக் கூப்பிட்டுடாங்க ...

நம்ம பேசுனது ஸ்டெம் செல் அப்பிடின்ற அற்புதத் தன்மை வாய்ந்த செல்களையும் மற்றும் அதன் மருத்துவ பயன்களைப் பற்றியது....எதோ சமாளிச்சி ஒரு வழியா முடிச்சாச்சு. கிளம்பலாம்னு பார்த்தா கேள்வி வேற கேட்போம்னு சொல்லிட்டாங்க..ஆஹா..இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு தான் சிக்கவச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது. அதையும் ஒரு வழியா முடிச்சு வந்தாச்சு.

அடுத்து மேலாண்மை மற்றும் பொருளாதரம் பற்றிய நுட்பங்களை எடுத்து விளக்கினார் நம்ம பாட்ஷா. அவரு ரெம்ப நாளா வேலை பார்க்கிற துறை...எல்லாத்தையும் நல்லா புரிய வச்சாரு. அடுத்தது ஆனந்தி. கணிதப்புலி. எளிய கணிதம் பயில்வது எப்பிடின்னு சொல்லிட்டு போயருவாங்கன்னு பார்த்தா நம்மூரு எட்டாவது கணக்கு ஆசிரியை மாதிரி நம்மாளுகளுக்கு அப்பப்ப வகுப்புப் பயிற்சி வேற கொடுத்தாங்க. எளிமையா இருந்ததால நம்ம மக்களுக்கு உபயோகமா இருந்தது.

மருத்துவத் துறையிலிருந்து பேசினார் பிரியா ராமன். குழந்தை நல மருத்துவர். குழந்தைகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகளை பற்றி அருமையா தெரிய வச்சாங்க. நம்ம தாய்மார்களுக்கு மிக்க பயனுள்ளதா இருந்தது.

இதயத்துறையிலிருந்து ஆராய்ச்சியாளர் ஹரி. இதயத்தின் இயக்கம் அதன் அதிமுக்கிய வேலைகளைப்பற்றி விளக்கியது நன்றாக இருந்தது.

வினு அடுத்ததாக வந்தாங்க. அவங்களும் பொது மருத்துவம் பற்றி சொல்லி புரிய வச்சாங்க. நோய் எதிர்ப்பு முறைகள் பற்றி விளக்கமா சொல்லி புரியவச்சாங்க.


அடுத்தது புரையத்திய நிபுணர் சீனிவாசன். எலும்பு மஜ்ஜையின் சிக்கலான செல்களைப்பற்றி அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.


அதே துறைசார் குமரன் கல்லத்தியம் பற்றி உரை நிகழ்த்தினார். எலும்பின் புதுச்செல் உருவாக்கத்தில் அதன் பயன்பாடுகளைபற்றி சொன்னது பயனுள்ளதா இருந்தது.


புற்று நோயில் ஒரு புரதம் - இது சிவாவினுடைய தலைப்பு. புற்று நோயையே புறந்தள்ளிவிடக் கூடிய அளவிற்கு மருந்தாக பேசினார்.

சாமுவேல் பேசியது நீரிளவு நோய் பற்றியது. நோய் காரணிகள் அதன் விளைவுகள் மற்றும் அதை தடுக்கும் காரணிகளைப் பற்றியது நன்றாக இருந்தது.

யுவராஜ் வந்து அகமும் புறமும் என்ற தலைப்பில் பேசினாரு. நம்ம உடம்பில உள்ள நுண்ணிய சுரப்பிகளின் செயற்பாடுகளைப் பற்றியும் அழகா எடுத்து பேசினார்.


இதெல்லாம் கேட்டு மக்கள் ரெம்ப உணர்ச்சி வசப்படக்கூடதுன்னு வந்து பேசியது தான் புதுமை அரசன். வாழும் கலை தலைப்பில் தியானம் பற்றி சொல்லி நம்மை தியானிக்க வச்சாரு.


அடுத்ததா வந்தது நம்ம சுந்தர். இதயச் செல் சட்டகத்தில் ஒரு புரதம். இது என்னான்னு பாக்குறீங்களா, அதான் நம்ம இதயசெல்களுக்குள்ள இருக்கிற ஒரு இழையின் புரத அங்கம். அதப்பத்தி நல்ல விளக்கி பேசினாரு.
பார்வையாளர்களில் ஒருவராய் இருந்த ஆனந்தகுமாரும் ஆர்வத்துடன் வந்து அனைவரையும் பாராட்டினார்.

அத்தனை மக்களும் சுந்தரத்தமிழில் அருமையாக தமிழ் அறிவியல் மாநாட்டை செய்து இருந்தாங்க. தமிழிலேயே புதிய கலைச் சொற்கள், அறிவியல் செய்திகள் மற்றும் அராய்ச்சித தகவல்களை அளித்து தமிழ் வீச்சில் அறிவியல் நடைபோடுவதைப் பார்க்க நம்ம மக்களுக்கு ஒரே பெருமை மற்றும் மனநிறைவுதான்.


இறுதி உரை கொடுத்த கமலநாதனும் இதையே சொல்லி ஆச்சரியப்பட்டதோடு அருமையாக உரையளித்த அனைவரையும் வெகுவா பாராட்டினார். கணேஷ் வந்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்து தமிழறிவியல் கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.


இவ்வளவு சிறப்பா கருத்தரங்கம் நடந்ததைப் பார்த்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஆசை வந்ததை யாராலும் மறுக்க முடியாது.


இது போல காலச்சக்கரத்தின் முன்னேற்றங்களை, அதன் பரிணாம வளர்ச்சிகளை மற்றும் அத்தோடு வளர்ந்து வருகின்ற அறிவியல் நுட்பங்களை தமிழில் புகுத்தி செம்மையாக்கினால் இப்பிரபஞ்சம் உள்ள காலத்தே தமிழ் வாழும் என்பது உறுதி.


தமிழ் வளர்ப்போம்!

அறிவியலால் தமிழ் வளர்ப்போம்! தமிழால் அறிவியல் வளர்ப்போம்!!


............................................

எல்லாருடைய ஒளிப்படங்கள் இல்லாததால், கிடைத்தவைகள் மட்டுமே இங்கு வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

........................................

சுந்தர் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்





......................................................................


செந்தில் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.............................................


சீனிவாசன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.........................................



குமரன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.................................................................


யுவராஜ் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்




.................................................................


புதுமை அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்












..................



கருத்தாக்கம் மற்றும் ஒளிப்படங்கள் உருவாக்கம்
கந்தன் - வள்ளி

Sunday, September 21, 2008

நளபாகம்

ஹெய்தி, கெய்கோ தீவுகள், பஹாமாஸ் தீவுகள், மயாமி, ஜாக்சன்வில், சவானா, சார்ல்ஸ்டன் போன்ற கடலோர பிரதேசங்களுக்கான விசேஷ வானிலை அறிக்கை: அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இவ்விடங்களில் பலத்த, மிகபலத்த இடி மழை பெய்யக்கூடும். ம்ணிக்கு 20 முதல் 120 மைல் வேகத்தில் பலத்த காற்று, சூறாவளிக் காற்று (ஹரிக்கேன் ஹானா, Hannah) வீச வாய்ப்புள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஆராய்ச்சி கூடத்திற்கு போகவேண்டாமென்றும், காற்று மழை ஆதலால் இல்லத்தரசிகள் யாரும் சமையலறைக்குள் சென்று சமையல் செய்து, தண்ணீரில் கை வைத்து ஜலதோஷம் பிடித்து அவதிப்பட வேண்டாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதக் கேட்டப்பறமும், யாரு போய் சமச்சு, சளி புடிச்சு கஷ்டப்ப டறதுனு பயந்து, கால மடக்கிட்டு சோபாவுல உட்கார்ந்து, மெல்ல புருஷங்காரங்களை கெளப்பிவிட்டு சமைக்கச் சொல்லி வலியுறித்தினோம். புருஷன் பொஞ்சாதிகளுக்கு நடுவே நடந்த இந்த உறையாடல்கள் தற்செயலா பெரியவர் (வாத்தியார்) காதுல விழுந்து விடவே, அவர் ஆண்கள உற்சாகப்படுத்தி, நம்பிக்கையூட்டி ஒருவழியாய் ஒத்துக்கொள்ள வைத்தார். பெரியவர் வார்த்தையை மதித்து, காளையர் கரண்டி தூக்கிவிட்டனர்.

தனியா நின்னாதன திண்டாட்டம். கும்பலோட கோவிந்தா போட்டா கஷ்டமென்னனு எல்லா ஆம்பளைங்களும் வேட்டிய வரிஞ்சி கட்டிக்கிட்டு, தலைல முண்டாசோட, தடதடனு, ஜேம்ஸ் தீவிலுள்ள அந்த ஆயிரம் சதுரடி அபார்ட்மெண்டில் ஆஜரானார்கள். இனியன் பட்டியல் போட, மாயோன் மறுநிமிடம் காய்கறிகளுடன் காணப்பட்டார். கூத்தும் கும்மாளமுமாய் அந்த ரயில்வே கம்பார்ட்மெண்ட் போன்ற அடுக்களைக்குள் ஆண் சாம்ராஜ்யம் அழகாக சமைத்தது. அட நம்புங்களேன். ……. ஆண்கள். ஆண்களேதான். நல்லா கண்ண கசக்கிகிட்டு பாருங்க. சனிக்கிழமை தூக்கத்த விட்டு பனிரெண்டு மணி மதிய நேரம் முழிச்சு பார்த்திருந்தாதன உங்களுக்குத் தெரிய............ போர்வைக்குளேந்து பூலோகத்துக்கு வாங்க.

பல்லு வெளக்கறவங்களுக்குத்தான் பருப்புப் பொடியோட சாப்பாடு. சுத்தமா குளிக்கிறவங்களுக்குத் தான் சூடான சூப், சில்லுனு சாலட். கண்டிப்பானார்கள் ஆண்கள் இந்த விஷயத்தில். இப்படி ஆண்கள் கண்டிப்பா சொல்லாட்டா பெண்கள் சுறுசுறுப்பா ஒன்றரை மணிக்கெல்லாம் எங்கேந்து பல்லு வெளக்குறது?

“குளிச்சு முழுவி, ….சீவி முடிச்சு, சிங்காரிச்சு,
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு,
பாத்திரத்த உருட்டும் புருஷங்காரன பாக்க வந்த பொண்டுகளே பசியும் எனக்கு தாங்கலியே,
பிஸ்கட் சாப்பிட்டா பத்தலியே”னு
வள்ளியும் நானும் புலம்பல் பாட்டு பாடவே, எல்லா பெண்களும் வந்தாதான் சாப்பாடுனு இனியன் கண்டிப்பா சொல்லிட்டாரு. சரிதான். இனியாளுக்காக இவர் காத்திருப்பதால் தான் அப்படிச் சொல்லியிருப்பாருன்னு, எங்களை நாங்களே சமாதானப் படுத்திக்கொண்டோம்.

திடீரென கும்முனு செண்ட் வாசம் பாலத்திலேந்து வந்தது. சரி. சரி. நம்ம பொண்டுக கோஷ்டி வர்ர காரு வீட்ட நெருங்குது. இன்னும் செத்த நாழியில வாசல் மணி அடிக்குமென தெரிஞ்சிகிட்டோம். (பெண்கள் வரும் பின்னே. செண்ட் வாசம் வரும் முன்னே). சொன்னபடியே வாசல் மணி அடித்தது. திறந்தேன். ஜிலுஜிலுன்னு ஜோராய் அலங்காரம் செய்துகொண்டு குழந்தைகளோடும், கைப்பைகளோடும் வந்து நின்ற தோழிகளை வரவேற்றேன்.

அப்பாடா, ஒரு வழியா எல்லாரும் வந்தாச்சு. இனியாவது சாப்பாடு கிடைக்கும்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். சற்று நேரம் சுடிதார்கள், சேலைகள் யார் யார் எங்கெங்கேந்து வாங்கினாங்க, என்ன விலை, ரவிக்கை எங்கே தைத்தார்கள் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம். ரொம்ப முக்கியமான விஷயமாச்சே……..

"யூ டியூப் (you tube)"ல பாட்டு கேட்டோம். சீட்டு விளையாட்டு. சுவாரஸ்யமான சிறுவயது கதைகள் பேசியபடி கல்லாங்கா விளையாட்டு. நேரம் போய்க் கொண்டேயிருந்தது……. லேசாய் பசித்தது.

பலவித வாசனைகள் சமையலறையிலேந்து வந்தபடி இருந்தது. அறைத்தல், வதக்குதல், கிண்டுதல், கிளருதல், உருட்டுதல், உடைத்தல், வெடித்தல்..... அடாடா………. அப்படி என்னதான் சமைக்கிறாங்க ரெண்டு மணி நேரமா என வியந்தபடியே பெண்கள் கூட்டம் பெரியவரிடம் பசிக்குது, பசிக்குதுனு தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

ஆட்டத்தை முடித்துக் கொண்டு அமைதியா சாப்பிட தயார் ஆகுமாறு, பெரியவர் மணி அடித்து அறிவித்தார். ஆடிச் சோர்ந்த அம்மணிகளுக்கு ஆஹாவென்ற ருசியான ரசம். சுர்ரென்று நாக்கை சுண்டி உசுப்பும் சற்றே காரமான பருப்புப் பொடி சாதம் உருண்டைகளாக்கப்பட்டு தலா ஒரு உருண்டை அளிக்கப்பட்டது. கடித்துக்கொள்ள சாலட் மற்றும் அஸ்பாரகஸ். பலத்த உபச்சாரம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி. வெந்த அஸ்பாரகஸ் வேம்பின் தங்கச்சி போலும் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டோம். தண்ணீர், கை துடைக்க தாள், பல் குத்த குச்சி முதற்கொண்டு கணவன்மார்கள் சகல சிஷ்ருஷைகளும் செய்தார்கள்.

ஹானா (Hannah) வந்தாலும் வந்தது. இவங்க ஜாதகத்திலேயே கிரகநிலை மாற்றம் எற்படுத்திடுச்சா? ……………….

எங்களுக்கு ஏதோ நல்ல நேரம அன்னிக்கு! எல்லா பணிவிடைகளும் செஞ்சாங்க. இனிமேல் தான் விருந்து.

முதலில் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் வேலுடையானின் கைவண்ணம். பின் பெரியவர் மணக்க மணக்க செய்த உருளை கிழங்கு பொரியல், தக்காளி போட்ட பருப்பு, டாக்டரம்மா வீட்டுக்காரர் கந்தன் செய்துவைத்த கடலை பருப்புக்குள் கண்சிமிட்டும் காலி பிளவர், வினோதனின் அஸ்பாரகஸ், இளவரசு மற்றும் ஷ்வா மாமாவின் சிறப்பான உதவி மற்றும் மேற்பார்வையில் அனைத்தும் அமர்க்களமாய் தயாராகி சாப்பாட்டு மேசையில் சுடச்சுட வந்து நின்றது. என் வீட்டுக்காரர் போட்டோ எடுத்ததோடு சரி.

கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பில் ஜிலுஜிலுத்த கொத்தமல்லி, கரிவேப்பில்லை மிதக்கும் நீர்மோர் சகிதம் பாஸ்மதி சோறு வடிக்கப்பட்டு நெய், அப்பளம், ஊறுகாயுடனும், உபசாரங்கள் பலவோடும் அறுசுவை அமுது படைத்த ஆம்படையான்கள் அனைவருக்கும் "முதல் ஆய்வர் (first author)" தகுதி கொடுத்து சிறப்பித்தோம்.

பூரித்துபோன புருஷன்மார்கள் எங்களுக்கு சமைக்கத்தெரியாதுன்னு நெனைச்சீங்களா, நீங்க என்ன சமைக்கிறது, எங்களாலயும் முடியும்னு நிரூபித்து காட்டினரே தவிர, இனி நாங்களே சமைக்கிறோம் என்று மட்டும் சொல்லாதது ஒன்றே குறையாக முடிந்தது மதிய உணவு.

மகிழ்ந்து போன மங்கையர் கூட்டம் மனமார்ந்த நன்றிகளுடன், அடுத்த முறை சமைக்க நேர்ந்தால் இன்னும் சிறப்பாய் சமைக்க ஆலோசனைகள் வழங்கியது.
மதிய உணவோடு மட்டும் நிறுத்தி விடாமல், பகல் தூக்கம் முடிந்து மாலையில் எழும் மனைவியருக்கு சுவையான ஸ்வீட், காரம், காபி வழங்கலாம் என்றும், பஜ்ஜி சொஜ்ஜி செய்தால் கூட போதுமென்றும், இரவில் அது இதுனு அலட்டிக்காம லைட்டா பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, மசாலா பாலோடு நிறுத்திக்கொண்டால் போதுமென்றும் ஆலோசனை வழங்கியது.

நிறைவாக அடுக்களைக்குள் புகுந்து அசத்திவிட்ட ஆண்களுக்கு நூற்றி ஒன்று மார்க்குகள் அளித்து தீபாவளிக்கு தம் செலவில் ஜிகுஜிகுவென்று மின்னும் நல்ல சட்டை வாங்கித்தரப்படும் என்றும் உறுதி அளிக்கபட்டது. அனைத்துக்கும் மேலாக “அசத்தல் புருஷன்” என்ற உயர்வான பட்டத்தையும் வழங்கி கௌரவப்படுத்தியது மாதர் சங்கம்.

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை.

- ராதை

படங்கள்: மாயோன்

Monday, June 30, 2008

எங்கள் கோடை விழா - ஒரு பார்வை

பனைநிலத்தில் நடக்கும் விழாக்களில் ஒன்று ஞாயிற்றைப் போற்றும் கோடை விழா. நேற்று ஞாயிற்றுக் கிழமையில்தான் நடந்தது. பக்கத்து ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு திருவிழாவுக்கு வருவதைப் போல அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து (சுமார் 300 மைல்களுக்கு அப்பாலிருந்தும்) பல நண்பர்கள் வந்திருந்தனர். நாயனம், தவில் பின்னணி இசையுடன், ஒரு அழகிய பூங்காவிலிருந்த அந்தப் பெருங்கூடாரம் களைகட்ட ஆரம்பித்தது. கூடாரம் என்றால் சுமார் 200 பேர் பயன்படுத்தக்கூடிய மரத்தினாலாகிய ஒரு கூடம், அதனுள்ளே நிறைய மேசைகளும், உட்காரும் பலகைகளும். சுற்றிலும் அடர்ந்த மரங்களும், சிள் வண்டுகள் பாடும் புதர்களும், சற்றே தொலைவில் பரந்த புல்வெளி. மனிதர்களைக் கண்ட ஆர்வத்தில் மொய்த்துக் கடித்த கொசுக்களை, கொசுவிரட்டி மருந்துகொண்டு நாங்கள் விரட்ட அவை அடுத்த கூடாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. ஒரு புறம் சிவபாரதி, சில்வஸ்டர், பாபா குழுவினர் சோளம், கோழி என்று பார்பிக்யு செய்ய, மறுபுறம் உணவுகளும், பானங்களும் வந்து சேர, இன்னொரு புறத்திலே ஓடி விளையாடிய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. எங்களது கோடைவிழா என்பது வீரத்தைக் கொண்டாட, விளையாடிக் களிக்க, உடற்திறனை அறிய, புதியவற்றைக் கற்க எனக் கட்டமைக்கப்பட்டது. உட்கார்ந்து, நின்று, ஓடியாடி, வாயால் பேசி என அனைத்து வகையான விளையாட்டுக்களையும் முடிந்த அளவுக்கு விளையாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவில் இத்தனைத் தமிழ்க் கூட்டமா என்று புதியவர்கள் வியந்தனர். அடித்த வெய்யிலும் ஏனோ தமிழகத்தினை நினைவிற்குக் கொண்டுவந்து உடலிலும், உணர்விலும் ஒரு மகிழ்வினை ஏற்படுத்தியது. விடாய் தீர்க்க நற்பானங்களும், பசி தீர்க்க நல்லுணவுகளும், பேசிக் களிக்க நன்னண்பர்களுமாக அப்பூங்கா இனிமையால் செறிந்திருந்தது. ஒரு மரத்தின் வேருக்கருகே யாரோ மூவர் வரைந்த சில அழகான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. மாயோனது புகைப்படக் கருவி சுழன்று சுழன்று அழகையும், அசைவையும் தெவிட்டாது சேமித்துக் கொண்டிருந்தது.

மதியவுணவின் பின்னர் அமர்வு தொடங்கியது. பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் அன்றைய சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை வரவேற்று இளவரசன் பேசினார். பிறகு சுபவீ அவர்கள் "அறிவியல் யுகமும், அறிவியல் பார்வையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளர்களும், கணினித் துறை விற்பன்னர்களும் மிகுந்திருந்த அரங்கில் என்ன புதிதாகப் பேசிவிடப் போகிறேன் என்று ஆரம்பித்த சுபவீ சொன்னவை புதியவை. பழைய கதைகளிலிருந்து புதிய பார்வைகளை எடுத்துக் காட்டினார். பழைய நம்பிக்கைகளைப் புதிதாக அணுகுவதற்கு ஒரு சிறு திறப்பினை ஏற்படுத்தினார். பொருந்தாத பொருட்களைப் பிணைத்து, தொடர்புகளை ஆராய்ந்து, கேள்விகளைத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருப்பது அறிவியலுக்கும், மெய்ஞானத்துக்கும் மட்டுமில்லை, சமூக அறிவியலுக்கும் அத்தகைய அணுகுமுறை பொருந்தும் என்றார். இறை நம்பிக்கை, மத நம்பிக்கை எதுவாயினும் அது தனி நபர்களின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. அவ்வாறான நம்பிக்கைகள் உணர்வெல்லைகளைத் தாண்டி, சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தினை உணர்ந்துகொள்வதற்கு ஒரு சிறு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். அவரது உரை சுமார் 40 நிமிடங்களே இருந்தாலும், ஏதோ சுருக்கமாக முடிந்துவிட்டதைப் போலிருந்தது. காலையிலிருந்து அடித்த வெய்யில் தணிந்து மேகம் கறுத்து மழை பொழிய ஆரம்பித்தது. கேள்வி நேரம் ஆரம்பித்தது. தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை, கடவுளுக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு, ஈழத்து மக்களின் போராட்டம், அகதிகளின் இன்னல்கள், பெண்கள் ஏன் ஆண்களை வாழ்நாள் முழுதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது, தமிழர்களின் அறிவியல் பார்வை எவ்வாறு இருக்கிறது, ஏன் இந்தியா ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இல்லை என்று பலதரப்பட்ட கேள்விகளைப் பலரும் முன் வைத்தனர். அவற்றுக்குப் பொறுமையாகவும், கனிவுடனும், அரசியல் நேர்மையுடனும் சுபவீ அளித்த விடைகள் பல புதிய பார்வைகளைத் தந்தன. மழை விடும் வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டது இவ்வுரையாடல். பிறகு நமது சித்திரைக் கருத்தரங்கில் பங்குகொண்டு அறிவியல், தொழில்நுட்பங்களைப் பற்றித் தமிழில் உரையாற்றியவர்களுக்குப் பரிசுகளும், குழந்தைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. குழந்தைகள் பாடல்களும், பெரியவர் பாடலொன்றும் இனிமையாயிருந்தன. உள்ளேயும் வெளியேயும் மழை பெய்து முடித்திருந்தது.

வெற்றுக் கேளிக்கையாக, வேடிக்கைக் கூத்தாக, கிச்சு கிச்சு மூட்டும் ஒரு கூட்டமாக இல்லாமல், அறிவினைத் தூண்டி, சமூக உணர்வினை எழுப்பி, அனைத்து மக்களின் சம வாழ்வினை நோக்கிய ஒரு பாதையை நமக்குக் காட்டிய ஒரு திருவிழாவாக எங்கள் கோடைவிழா அமைந்திருந்தது. எங்கள் நெஞ்சின் அனலை ஊதிவிட்டு, பெய்து முடித்த மழையில் தன்னைக் குளிர்வித்துக் கொண்டிருந்தது அந்த மாலை நேரத்துப் பனைநிலம்.

-எழுதியவர்: பனையேறி

Saturday, June 14, 2008

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா?

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா மஹாசனங்களே!

எங்கள மாதிரி ஆராய்ச்சிசாலைகளில் வேலை பார்க்கிறவங்களைக் கேட்டா தெரியும். வெள்ளிக்கிழமைகளில் ஆராய்ச்சின்ற பேர்ல எதையும் பண்ணாம வரப்போற வாரக்கடைசி விடுமுறையை எப்பிடிக்கழிக்கலாம்னு நினைச்சி பொழுதப்போக்கிக்கிட்டே.....அப்பிடியே ஆனந்தவிகடன், குமுதம், தினமலர், தமிழ்மணம், தட்ஸ்தமிழ் கொஞ்சம்.....பிறகு ஒபாமா, மெக்கெய்ன், தக்காளிக்காய்ச்சல், புளிக்காய்ச்சல் கொஞ்சம்னு இதர சல்லி விசயங்களை அக்குவேறா ஆணிவேறா பிச்சி ஆராய்ஞ்சி ....அப்பிடியே சாயங்காலம் வர்ற வரைக்கும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னுட்டு இருக்கறது........இதத்தான் வேலையும் பார்க்காம, நிம்மதியாவும் இருக்காம....ரெண்டுக்கும் இடையில இருக்கிற திரிசங்கு சொர்ர்கம்னு சொல்றது.

சரி என்னய்யா விசயம்னு கேக்கிறீங்களா....இப்படித்தான் இந்த வார வெள்ளிக்கிழமையையும் அப்படியே ஒப்பேத்திரலாம், பிறகு இறகுப்பந்து

விளையாட்டுல போய் சேர்ந்துக்கலாம்னு கணக்கு போட்டுக்கிட்டிருன்தேன். திடீர்னு பார்த்தால் கணினியில் ஒரு மின்னஞ்சல்...

வேற யாரு...வழக்கம்போல நம்ம பனையேறி தான். ஆகா வழக்கம்போல பெட்னா, கோடைவிழா அது இதுன்னுட்டு இப்பவும் ஏதோ அனுப்பிட்டாரய்யா...அனுப்பிட்டாருன்னு! திறந்தா........அதில ஆச்சரியம்.

இசைக்கச்சேரியோட அழைப்பிதழ். அதுல இன்னொரு ஆச்சர்யம், இலவசம் வேற.

ஆஹா. ஏதாவது மொக்கை கச்சேரியா இருந்தாலும் போய் பொழுதப்போக்கிறவேண்டியது தான் நினைச்சிக்கிட்டே, யாருன்னு பார்த்தா.....அட லால்குடி கிருஷ்ணன். சாட்சாத் லால்குடி ஜெயராமனோட் இசையுலக வாரிசு. இவரோட அப்பா லால்குடி ஜெயராமன், சங்கீத ஜாம்பவான்களான அரியங்குடி இராமனுஜ ஐயர், செம்பை, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜிஎன் பாலசுப்ரமணியன், மஹாராஜபுரம் சந்தானம், சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு வயலினாலேயே உயிர் கொடுத்தவர். அவருடைய தில்லானா, வருணங்களையும் அதோட நெளிவு சுளிவுகளையும் மெய் மறந்து கேட்கலாம். இவரோட தாத்தா ஒண்ணும் லேசுப்பட்டவரில்ல, விஆர். கோபால ஐயர் தான்.




அவரோட சிதார் வாசிக்கறவரு கெளரவ் மசும்தார். முன்ன பின்ன தெரியாத ஆளுதான். வலப்பதிவுகள்ல போய் பார்த்தப்பறம் தெரிஞ்சது அவரும் பெத்த பிஸ்த்துன்னு. மேற்கத்திய இசையுலகின் மிக உயர்ந்த பரிசான கிராம்மி விருதிற்கே பரிந்துரை செய்யப்பட்டவரு. அவரோட குரு வேற யாருமில்ல பண்டிட் ரவிசங்கர்தான். இவங்கள சார்லச்டன் கல்லூரியின் இசைத்துறை விருதுத்தொகை கொடுத்து வரவழச்சிருக்குன்னு ஒரு நண்பர் சொல்லி தெரிஞ்சது.

மக்கா, இன்னைக்கி இசை விருந்துதான். பண்ணாத வேலைகள அப்படியே வச்சிட்டு ஆராய்ச்சிசாலையை விட்டு கிளம்பியாச்சு. வூட்டுக்காரம்மா வேற கர்னாடக இசைக்கச்சேரிக்கு மேற்கத்திய உடை வேணாம்னு ஒரே வம்பு. அப்பத்தான அத சாக்கா வச்சிட்டு அவுக பட்டுப்புடைவயில வரலாமில்லையா. வழக்கம்போல மறுபேச்சு ஏதும் பேசாம உத்தரவு அவுக கிட்ட வாங்கிட்டு இனியன் வீட்டுக்கு போனேன். வேட்டி சட்டைக்கு மாறத்தான்.

நம்ம சங்கீதத்தில ஞானசூன்யமா இருந்தாலும் என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம். அந்தக்காலத்தில ஊர்ல வெட்டியா இருந்தப்ப மார்கழி மாசக் கச்சேரியில் போய் கலந்துக்க முடியல்ல. இந்த ஏழு கழுத வயசுல ஒரு வாய்ப்பு. புகுந்துறவேண்டியதுதான்.

ஏகக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளக்காரங்கதான். இந்த ஊர்ல சங்கீதத்த படிக்கறவங்க விசயத்தோட வந்திருப்பாங்க. அந்தப்பக்கம் பார்த்தா, பனைநிலமக்கள் தியேட்டர்ல படம் பார்க்கிற மாதிரி பந்தோபஸ்துக்களோட குழந்தை குட்டிகளோட வந்திருந்தாங்க.



கச்சேரிய சொன்ன நேரத்துக்கு சரியா ஏழு மணிக்கு ஆரம்பிச்சுட்டாங்க. லால்குடி கிருஷ்ணன் மற்றும் மசும்தார் நடுவில, மிருதங்கம் மற்றும் தபேலா பக்கவாத்தியக்காரங்க அவங்க இருபக்கமும். லால்குடி ஒரு குழந்தையை தடவிக்குடுக்கிற மாதிரி வயலினை மெதுவா தடவிக்கொடுத்து வாசிக்க ஆரம்பிச்சு, குழைஞ்சு அப்படியே உச்சத்துக்கு நம்மள கொண்டு போய்ட்டாரு. சிதார்ல மசும்தார் நம்ம நாடி நரம்பெல்லாம் உசுப்பி விட்ட மாதிரி
லால்குடிக்கு சரிக்கு சரியா இழஞ்சாரு. மத்தபடி என்ன சுருதி என்ன ராகம் என்ன தாளம் எதுவும் புரியல்ல. அடுத்தது ஜகல்பந்தி மாதிரியான கச்சேரி, பாட்டுக்கு பாட்டு போட்டிக்கு போட்டி மாதிரி தாளத்துக்கு தாளம் சுருதிக்கு சுருதி மாறி மாறி வாசிச்சு அப்படியே ஒண்ணா சேர்ந்து முடிச்சாங்க.


இடையில இடைவெளிவேற. பலகாரங்கள் மற்றும் குளிர்பானகள் சனார்ததனன் கோவில் அன்பர்கள் அன்பளிப்பாக அள்ளித்தந்தார்கள்.

அதன் பின்னால சிந்துபைரவியில கச்சேரியைக் களை கட்டினாங்க. வயலின் சிதார் ரெண்டுலயும் ராகம் குழைவா ப்ரவாகமா உருகி ஓடிச்சு. கடைசியா மகாத்மா காந்திக்கு பிடித்த வைஷ்ணவ ஜனதோ பாடலோட கச்சேரிய முடிச்சப்ப நம்ம சனங்களோட் கைத்தட்டல் அடங்க ரொம்ப நேரமாயிடுச்சி. ஸ்டேன்டிங் ஓவேஷன் அப்படின்னு ஆங்கிலத்தில சொல்வாங்களே, அரங்கத்தில அனைவரும் எழுந்து நின்னு கைத்தட்டுறதத்தான், அப்படிதான் நம்ம மக்கள் வரவேற்றாங்க. அதப்பார்த்து அந்தக்கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு மறுபடியும் ஒரு சின்ன ராகத்தை எடுத்து விட்டாங்க. மொத்தத்தில இரண்டு மணி நேர இசைப்பயணம் நம்மள மெய்யுருக வச்சிருச்சு.




நம்ம மாதிரி சங்கீத ஞானசூன்யங்கள் தெரிஞ்சு தெரியாம, புரிஞ்சு புரியாம இருந்தாலும் சங்கீதத்தில் மயங்கிடறோம் இலலையா. அது ஒருவகையான
சொர்க்கம்! திரிசங்கு சொர்க்கம்!!




இந்தப்படத்தில் இவர் இருப்பதும் இன்னொரு வகையான சொர்க்கம். (இசைக்கடலில் மூழ்கித்திளைக்கும் ஒரு கலாரசிகர்)

--------------------------------------


கந்தன் - வள்ளி

---------------------------------------

Wednesday, April 2, 2008

திருவிழாக் கூட்டம்


வசந்த காலம் வந்தாச்சு. வாசமல்லி பூத்தாச்சு. குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குப் போயிறுக்காங்க. அதனால பொண்டாட்டிய மட்டும் தனியா வெளிய கூட்டிட்டு போலாமேன்னு-பூக்கள் நிறைந்த ஹேம்டன் பூங்காவுக்கு போனேன். அவளுக்கு சிறிது நேரம் கார் ஓட்டக் சொல்லிக் கொடுத்துட்டு, போதுமென்ற அளவுக்கு பூக்கள படம் எடுத்துக்கிட்டு கிளம்புறப்ப, அந்த பகுதியில அளவுக்கு அதிகமான கூட்டம்.


வெள்ளிக்கிழமையும் அதுவுமா எங்க இம்மா ஜனங்க படை எடுத்து போறாங்க? கோயிலுக்கா? கச்சேரிக்கா? என வியந்தேன். சர், புர் ன்னு அங்கங்கே பிளஷர் வண்டிங்க ( அதாங்க, காரு). அவங்கவங்க கருப்பு கண்ணாடி மாட்டிக்கிட்டு, தஸ், புஸ் னு - இங்கிலீசு பேசிகிட்டு, அரைக்கால் சட்டை மாட்டிக்கிட்டு, ஆம்பள பொம்பள வித்தியாசம் தெரியாம எங்கப்பா போறீங்கனு கேக்கப்போனா - அவுக சொன்னது நமக்கு சுத்தமா வெளங்கலீங்க. சரி, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமாத்தான் இருக்கும்னு யூகிச்சு, நானும் அந்த அலங்காரம் பண்ண பிளஷர் வண்டிய தேடிப் போனேன்.

அங்கப் பாத்தா பட்டை, பட்டையா கவசம் மாதிரி சட்டை போட்ட வெள்ளைக் கார துரைங்க, ஒரே மாதிரி தலைல தொப்பி மாட்டிக்கிட்டு, அவசர அவசரமா நடந்துக்கிட்டு இருந்தாங்க. சரிதான், நமக்கு இங்கே வேலை இருக்காப்ல தெரியுதுன்னு - கொழாய் சைஸ் லென்ஸ் பொறுத்திய காமிராவை தட்டி எழுப்பி, தோள்ள மாட்டிக்கிட்டு குஷியா நடந்தேன். வழக்கம் போல முகம் சுளிச்சா என் பொஞ்சாதி. அவள கொஞ்சம் தாஜா பண்ணி, கூட்டம் போற தெசையில கூட்டிக்கிட்டு, வெவரமா ஒரு கல்லூரி மாணவி கிட்ட விசாரிக்கையில் - வெள்ளிக் கிழமைகளில், மாலையில் - சிட்டாடல் கல்லூரி வளாகத்திலுள்ள புல்வெளியில் இராணுவ பயிற்சி மாணவர்களின் அணிவகுப்பை காணவரும் பொதுமக்களின் கூட்டம் தான் அதுன்னு புரிஞ்சது.

கிரிக்கெட் ஆட்டம் பாக்கப்போற ஜனங்க மாதிரி மக்கள் இருக்கைகளில் இடம் பிடித்தனர். ஒலிப்பெருக்கிகள் அமைதியா இருக்கச் சொல்லி மக்களை கெஞ்சின. இன்னும் கொஞ்ச நேரத்துல அணிவகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதும், ஒரே நிசப்தம். உயரப் பறந்தது கோடு மற்றும் நட்சத்திரம் போட்ட பளீச் கொடி. அதன் இருபுறமும் தலா 25,25 கொடிகள், மொத்தம் 50 மாநிலக் கொடிகள் காற்றில் அசைந்தாடின. அவற்றின் முன்பு பயமுறுத்தும் பீரங்கி வண்டிகள்.

1992-ல் ஆஷ்லி நதிக்கரையில் 26 கட்டிடங்கள் கொண்டு கட்டப்பட்ட இக்கல்லூரியில் சுமார் 1900 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். முதன்முதலில் 1846-ம் ஆண்டு, மேரியான் சதுக்கத்தில் துவங்கப்பட்டது இக்கல்லூரி. பின்னரே இது தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. பகல் நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் இராணுவ பயிற்சி பெறும் இம்மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கணிதம், அறிவியல்,தொழிற்கல்வி, தொழில்நிர்வாகம் மற்றும் பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

கீழ்படிதல், கட்டுப்பாடு, காலம் தவறாமை, தலைமையேற்றல், ஒற்றுமை ஆகிய அடிப்படை பழக்கங்களோடு கல்வி பயின்று வெளியேறும் இப்பட்டதாரிகள் தம் வாழ்வில் மட்டுமின்றி, பிறர் வாழ்விலும் செம்மை தேடித் தருகின்றனர். முன்னாள் மாணவர்கள் பலர் இராணுவம், மருத்துவம், வான்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் அன்றும், இன்றும் சிறப்புற்று விளங்கி வருகின்றனர். கல்லூரி விடுதியில் கட்டாயமாக தங்கிப் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு ஒற்றுமை - மிகவும் வலியுறுத்தப்படும் விஷயமாதலால் இவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவதில்லை.

இம்மா விஷயமிருக்கா நம்மூர் காலேஜிலன்னு வாய் பொளந்து கேட்டுக்கிட்டு தலைய ஆட்டினோம். அம்மாணவி நகர்ந்து சென்றதும் படம் பிடிக்கத் தோதாக மேல்வரிசையில் இடம் பிடித்து, இருக்கை மீது ஏறி நின்று கொண்டேன்.

நாலா பக்கங்களிலும் இருந்து சீருடை அணிந்த மாணவர்கள் அணிவகுத்து வந்தனர். பரந்து விரிந்த அந்த கல்லூரி மைதானத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த அணிவகுப்பு கண்கொள்ளா காட்சிங்க. மேளம் அடிச்சிக்கிட்டு, பீ பீ ஊதிக்கிட்டு, பாவாடை மாதிரி சீருடை அணிஞ்ச மாணவர்கள் கோழி தல மாதிரி டோப்பா வச்சிக்கிட்டு போனது, பாக்க ரொம்ப வேடிக்கையா இருந்தது.

அது நடந்து முடிஞ்ச அப்புறம், எல்லாரும் எழுந்து நின்னு, தொப்பிய கழட்டிட்டு இந்த நாட்டின் தேசிய கீதம் பாடி கொடிய எறக்குனாங்க. போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், அணிவகுத்த மாணவர்களுக்கும் மரியாதை செலுத்துற மாதிரி, இராணுவ விமானங்கள் அந்த மைதானத்திற்கு மேலே பறந்து வானசாகசம் செய்தன. எதிர்பாரா நேரத்துல டொம் டொம்னு, காத பொளக்குறாப்ல பீரங்கி வெடிச்சது. உண்மையிலேயே போர்க் களத்துல இருக்கறாப்ல இருந்தது.




அணிவகுத்து வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பியது. அவர்களுக்கு தேசப்பற்று மிக்க பொதுமக்கள் சிலர் வணக்கம் செலுத்தினர். கூட்டம் சற்றே கலைய ஆரம்பித்தது. நாங்களும் சில விஷயங்களைத் தெரிந்துகொண்ட திருப்தியில் கிளம்பத் தயாராகி கடிகாரத்தைப் பார்க்கையில் தான் கொழந்தைங்க ஞாபகம் வந்தது. சட்டு புட்டுனு கார்ல ஏறி உட்கார்ந்தோம் அவர்களை கூட்டிவர.

நாம வேலை செய்யற எடத்துக்கு ஓரிரு மைல் தூரத்துல தான் இருக்கு. நல்ல இடம். சிறு குழந்தைகளைக் கூட்டிட்டுப்போனா வசதிப்படாது. எனவே, பெரியவங்க மற்றும் ஓரளவு விவரம் தெரிஞ்ச குழந்தைங்க பாக்க வேண்டிய நிகழ்ச்சி - இந்த அணிவகுப்பு.


மாயோன் ராதை