
பனைநிலம் என்பது Palmetto State என்பதன் தமிழாக்கம். South Carolinaதான் Palmetto State. இங்கு நிறைய பனைமரங்கள் இருக்கும். இது நுங்கு காய்க்கும் பனை இல்லை. பாக்கின் அளவில் ஈச்சையின் நிறங்களில் இருக்கும். யாரும் சாப்பிடுவதில்லை. பறவைகள் சாப்பிடுமா என்று தெரியவில்லை. அழகுக்காக இங்கே பனை நிறைய இடங்களில் வளர்க்கப்படுகிறது. பெரிய பெரிய பனைமரங்களையும் வேரோடு பெயர்த்து வேறிடங்களில் ஊன்றுவார்கள். பிழைத்துக் கொள்ளும்!
இங்கு நிறைய கடற்கரைகளும் தீவுகளும் இருக்கின்றன. சதுப்பு நிலம், மலைகள், சமதளங்கள் என்று பலவித இயற்கையமைப்புக்களைக் கொண்டது தென்கரோலினா. கோடைக் காலத்தில் சுமார் 90களில் இருக்கும் வெப்பநிலை, குளிர்காலங்களில் 40களிலேயே சராசரியாக இருக்கும். பனி கொட்டுவது குறைவு, மாநிலத்தின் தென்பகுதிகளில் கிட்டத்தட்ட பனியே இராது. சூறாவளிகளின் அச்சுறுத்தல் ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். சில நேரங்களில் கடுமையாகத் தாக்கப்படுவதும் உண்டு. உதாரணமாக 1989ல் ஹ்யூகோ என்றொரு சூறாவளி பெருத்த சேதத்தையுண்டாக்கியது.

தென்கரோலினா சுற்றுலாவினால் சிறப்படைந்த மாநிலம். சார்லஸ்டன், சவானா, மெர்ட்ல் கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்கள் நிறைய இருக்கின்றன. அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் முக்கியத்துவம் பெற்றிருந்த போர்க்களங்கள் பல தென்கரோலினாவில் உண்டு. அடிமைக் காலத்தில் இருந்துவந்த பண்ணைகளயும் இங்கே பார்க்கலாம். வளர்ந்துவரும் தொழில்களைக் கொண்டவொரு மாநிலம். பெரும்பாலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மக்களே இங்கு. சார்லஸ்டனில் இருக்கும் தெற்கத்திய உணவுக் கூடங்களும் , அவற்றில் இசைக்கப்படும் வாத்தியக் குழுக்களும் பெயர்பெற்றவை. மைய நகர் மிகவும் சுறுசுறுப்பான இரவின் களையைக் கொண்டது.
நாங்கள் இந்த கூட்டு வலைப்பதிவில் எங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பதிவுகளையும் எழுத இருக்கிறோம்!
எழுதியவர்: பனையேறி