Wednesday, March 19, 2008

கொலம்பியா (தென் கரோலைனா) மிருகக் காட்சி சாலை

கொலம்பியா (தென் கரோலைனா) நகரத்தின் நெரிசலைத் தாண்டி, அழகிய அமைதியான நதிக்கரை ஓரத்தில் ஒரு மிருகக் காட்சி சாலை. அருகிலுள்ள புகை வண்டிப் பாதையில், மிருகங்களுக்கு நம்மால் ஏன் தொல்லை என்பது போல எப்போதாவது வந்து செல்லும் ஓரிரு ரயில்கள். பள்ளிகளுக்கு விடுமுறை காலமாகையால் இலக்கணம் முறிந்த ஆங்கிலத்தில் கொஞ்சி வழிந்த மழலைக் கூட்டம். காற்றாடிகள், காகிதக் கொடிகள், பலூன்கள், பட்டங்கள் என குழந்தைகளை மகிழ்விக்க நிறைய பொருட்கள் - அந்த அழகான காட்சியகத்தின் வாயிலில்.

நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே செல்கையில் அனைவரின் நடையையும் நாட்டியமாக்கிக் கொண்டிருந்த இனிய இசை. செங்கல் நிறத்தில் ஒற்றைக் காலில் தவம் செய்து கொண்டிருந்த பிளமிங்கோக்கள் நிறைந்த சிறு குளம், குழந்தைகளையும் ஒற்றைக் காலில் நிற்கத் தூண்டியது. மறுபுறம், வண்ண மீன்கள் நிறைந்த குளம். எதிரே குளு குளு வசதி கொண்ட பறவைகள் காட்சியறை. பென்குயின்கள் அழகு நடை போட்டு பார்வையாளர்களை அசத்தின. பலவகை வண்ணப் பறவைகள் கண்களுக்கு விருந்தாயின.

அடுத்து "சீ-லயன்" (sea lion) எனப்படும் ஒருவகை கடல் வாழ் மிருகத்திற்கு உணவு ஊட்டப்பட்ட காட்சிக்கு சென்றோம். மீன்களை முக்கிய உணவாக உண்ணும் இவை தம் தோலுக்குக் கீழே பல கிலோக்கள் எடையுள்ள கொழுப்பை சேகரித்து வைத்துக்கொண்டு உணவு கிடைக்காத நேரங்களில் இக்கொழுப்பை உடலின் பல முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் திறன் வாய்ந்தவை. நாய்களை பழக்குவது போல அவற்றை நீரில் பல சாகசங்கள் புரிய பழக்கி உள்ளனர்.

அங்கிருந்து வெளியேறி மனிதக் குரங்குகளைக் காணச் சென்றோம். கண்ணாடிக்குள் இருந்து, இயற்கைச் சூழலில் உலவிக் கொண்டிருந்த கொரில்லாக்களை ரசித்துக்கொண்டிருக்கையில்-அவை பல குரங்கு சாகசங்கள் செய்தன. முகக்தைக் கோணலாக்கி அவை சிரித்ததைப் பார்த்தால் நாங்கள் சிறை வைக்கப்பட்டதாக நினைத்தனவோ என்னவோ? புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மனது வராமல் அங்கிருந்து நகர்ந்தோம்.

நொடோகி காட்சியறையில் பல்வகை குரங்குகள், சிறு பூனை வகைகள், எலிகள் போன்ற சிறு மிருகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இருட்டான குகை போன்ற இந்த காட்சியறையை கடந்து வெளியே வந்ததும்- கஜமுகர்கள் எங்களை வரவேற்றனர். ஆப்பிரிகாவிலிருந்து குடியேறி இருந்தன அந்த யானைக் கூட்டம். நடையிலேயே குழந்தைகளின் மதிப்பை சம்பாதித்து விட்ட யானைகளை கண் கொட்டாமல், ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் எங்கள் 2 வயது மகன். கால் வலிக்க நின்று கொண்டிருக்கையில் மழை தூர ஆரம்பித்தது. மழை வலுக்கும் நேரத்திலும் எங்களை வேறிடத்தில் ஒதுங்க அனுமதிக்கவில்லை அவன். யானைகளிடமிருந்து மனதை திசை திருப்ப அவ்வளவு பாடுபட்டோம்.

அடுத்து உலகின் மிக உயரமான பாலூட்டிகள்- ஆம் - ஒட்டகச்சிவிங்கிகளை பார்த்துவிட்டு, வரிக்குதிரை, ஆஸ்டிரிச் ஆகியவற்றை பார்த்து படம்பிடித்துக்கொண்டு, ஊர்வன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றோம். வழியில் ஆமை, முதலை வகைகள் தென்பட்டன. இன்னொறு சுவையான விஷயம்- அமெரிக்க குழந்தைகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, குதிரை, முயல் ஆகிய மிருகங்களை பண்ணைகளில் மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கிறது. இம்மிருகங்கள் மற்றும் "லாமா" என்ற மிருகம் ஒன்றையும் அங்கே காட்சிக்கு வைத்திருந்தனர். இயந்திரங்கள் மூலம் பால் கரக்கும் முறைகள், தேனீக்கள் பராமரிப்பு, முட்டைகளிலிருந்து நவீன முறையில் குஞ்சு பொறித்தல் ஆகியவை வரைபடங்கள் மூலம் இப்பண்ணையில் சித்தரிக்கப்பட்டிருந்தன.

அடுத்து அவனது கவனத்தை ஈர்த்தன-மதிய உணவு உண்ட களைப்பில் இளைப்பாறத் தயாரான புலி, சிங்கம் மற்றும் ஹயீனா ஆகியவை. புலி, சிங்கங்களின் கம்பீர நடையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி, அடுத்து ஹயீனாக்களையும் குரங்குகளையும் காணச்சென்றோம். உலக மிருகங்களில் மிக வலிமையான தாடை ஹயீனாக்களுக்குத்தான். புட்டியில் எடுத்துச்சென்ற குளிர்ந்த-கொத்தமல்லி மிதக்கும்-மோர் குடித்துவிட்டு, மெரி-கோ-ரவுண்டு எனப்படும் விளையாட்டு வண்டியில் எங்கள் பிள்ளையோடு நாங்களும் பிள்ளையாக சுற்றி மகிழ்ந்தோம். இதிலும் யானை இருக்கை தான் எங்கள் பிள்ளைக்குப் பிடித்த இடம்.

கிளி மொழி பேசிக்கொஞ்சிய தத்தைகளுக்கு தேன் ஊட்ட சீட்டு ஒன்று வாங்கிக்கொண்டோம். கிளிகளுக்கு, அங்கு வழங்கப்படும் தேன் மட்டுமே ஊட்ட அனுமதிக்கப்படுகிறது. கீச், கீச், கீச் என்று எங்கு பார்த்தாலும் ஒரே சத்தம் அந்த கிளி காட்சியகத்தில். உள்ளே நுழையும்போதே தலையிலும், தோளிலும், கையிலும் வந்து உட்கார்ந்து நம்மை வரவேற்கின்றன. தேன் உண்ட திருப்தியில் கீச், கீச் என்று கத்தித் திரிந்தன.

யூக்கலிப்டஸ் இலைகளைத் தின்று, நிறைய தூங்கும் கோலாக் கரடிகளின் களையான முகங்களை படம் பிடித்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும் கங்காருக்களை காணச்சென்றோம். களைப்பாகப் படுத்திருந்தன அவை.

காட்சியகத்தின் மூலிகைப் பண்ணைக்கு கால் வலிக்காமல் செல்ல இருக்கை வசதிகள் கொண்ட தொடர்வண்டி ஒன்றும் இயக்கப்படுகிறது. மூலிகைப் பண்ணைக்கு அருகில் பறவைகள் பல பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூந்தோட்டம் ஒன்றும் மக்களை மகிழ்விக்கின்றது.

இம்மிருகக் காட்சியகத்தின் முக்கிய அம்சங்கள்- குழந்தைகளுக்கு மிருகங்களைப் பற்றிய முப்பரிமான படங்கள் மற்றும் பல விளக்கப் படங்கள், குறிப்பிட்ட நேரங்களுக்கு திரையிடப்படுகின்றன. ஹாலோவீன், புதுவருட நாள் போன்ற சமயங்களில் சிறுவர்களுக்கான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பூந்தோட்டம், குழந்தைகளுக்கு விளையாட்டு வசதிகள், சிற்றுண்டி சாலை, குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், சுத்தமான கழிவறைகள், நன்கு பராமரிக்கப்பட்ட சூழல் ஆகிய முக்கிய தேவைகள் இங்கே காணப்படுவதாலும், குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமாக அமைந்திருப்பதாலும் இங்கே ஆண்டு முழுவதும் மக்கள் கூட்டம் வழிகிறது.

மாயோன் ராதை