Tuesday, August 7, 2007

சார்லஸ்டனில் கோடைத் திருவிழா


கோலாகலமான கோடை விழா...!!! சார்லஸ்டனிலா...???

பனைநிலத் தமிழ் சங்கம் தென்கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் தனது நான்காவது கோடை விழாவினை 22-7-2007 அன்று இனிதாக கொண்டாடியிருக்கிறது.

சார்லஸ்டன் மாவட்ட பால்மடோ பூங்காவில் முழுநாள் விழாவாக கொண்டாடப்பட்ட இத்திருநாளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நாதஸ்வர இசையும், கோலமிட்ட பந்தலும், ஆச்சரியத்தில் ஆழ்த்த, நண்பர்கள் கையசைத்து, வாழ்த்துக்கள் கூறி, புன்னகையுடன் வரவேற்றது, நாம் அயல்நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது. நண்பர்களும் தன்னார்வத் தொண்டர்களும் சிறு சிறு குழுக்களாய் மாறி விழாவிற்கான பணிகளில் ஈடுபட, பந்தலின் முகப்பில் தோரணங்கட்டுதலும், ஒலிபெருக்கு சாதனங்களை சீரமைத்தலும், அனல் மூட்டி சோளங்களை வேகவைத்தலும், நண்பர்கள் கொண்டுவரும் மதிய உணவுப் பண்டங்களை பதப்படுத்துதலுமான வேலைகள் சீராக நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் சிறுவர்களின் சிறு சிறு விளையாட்டுத் துள்ளல்களும், குழந்தைகளின் சிணுங்கல்களும், குடும்பப் பெண்களின் சுய புராணங்களும், நண்பர்களின் அரட்டையுமாய், காலை நேர ஆரவாரம், நம்ம ஊர் திருவிழாவினை நினைவுபடுத்தியது. பதினொரு மணியளவில் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிபரப்பு வரவும், சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் ஆர்வத்தோடு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழையும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.


விளையாட்டுப் போட்டிகளினால் களைத்திருந்தவர்களுக்கு ஆவி பறக்கும், சுவைமிகு உணவு வகைகள் மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்தது. சைவ உணவு வகைகள் ஒருபுறமும், அசையா அசைவங்கள் மறுபுறமும், நாசியை மட்டுமின்றி, நாவையும் சப்பு கொட்டி அசைக்கச்செய்தன. சாத வகைகளில், எலுமிச்சை, தக்காளி, புளிசோறு, காய்கறிசோறு, கூட்டு, பொரியல், சிப்ஸ் முதலியவும், கறிக்குழம்பு, வறுவல், சாப்ஸ் என்று அசைவ வகைகளும், தாகத்தை தணிக்க, திராட்சை, முழாம்பழ, மாம்பழ முதலிய பழச்சாறுகளும், சோடா, பெப்சி, கோலா வகை சாறுகளும் பரிமாறப்பட்டன. இவை அத்தனையும் சுவை பார்த்து, உண்டு, வயிற்றில் இடம் பத்தாமல் தவித்து புலம்பியவர்கள் நிறைய பேர் உண்டு.



உண்ட களைப்புடன் இருந்தவர்களுக்கு, தமிழ் ஆர்வலர்களின் செய்திக் குறிப்புகளும், எண்ண வெளிப்பாடுகளும், பெட்டிச்செய்திகளாக வெளியிடப்பட்ட போஸ்டர்கள் இளைப்பாறச் செய்தன. சார்லஸ்டனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களையும், தோட்டங்களையும், இயற்கை அழகை வர்ணித்த செய்திகளும், நமது நகரம் இவ்வளவு அழகா..? என பிரம்மிப்பூட்டும் வண்ணப்படங்களும், கண்களுக்கு விருந்து படைத்தன. அதுமட்டுமல்லாமல் தமிழில் இணைதளம் துவக்க ஆவலாக இருக்கும் நண்பர்களுக்கு உதவும் வகையில் எளிய நடையில் இணைதள உருவாக்கம் பற்றிய கருத்துக்களும், செய்திகளும், பல தமிழர்களை யோசிக்கவும், அதுபற்றி கலந்துரையாடவும் செய்தன.

மதிய உணவு முடிந்து இளைப்பாறிய பின், பனைநிலத் தமிழ் சங்க அலுவல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் " என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையவர்களின் தமிழ் தாய் வாழ்த்துடன் துவக்கப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும், சங்கத்தின் சாதனைகள் பற்றியும் சங்கத் தலைவர் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.

தென்கரோலினா மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட லாபநோக்கமற்ற சங்கமாகவும், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் பதிவு பெற்ற சங்கமாகவும் மாறிய நடவடிக்கைகளை கூறினார். பின்னர் சங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட விழாக்களையும் அதன் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். பலரது கைத்தட்டல்களுடன் தனதுரையை முடித்துக்கொண்ட தலைவர், சிறப்பு விருந்தினராக கோடைவிழாவிற்கு அழைக்கப்பட்ட திரு.முல்லை நடவரசு அவர்களை அழைத்தார்.





வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் பட்டிமன்ற நடுவராக பங்கேற்க வந்திருந்த திரு. முல்லை அவர்களை பனைநில கோடை விழாவிற்கு அழைத்து வந்த பெருமை செயலாளரையும், இணை செயலாளரையும் சேரும். பல கைத்தட்டலுடன் ஆரம்ப முதலே முல்லையின் வாசம், விழா முழுக்க வீசத் துவங்கியது என்றே சொல்ல வேண்டும்.




தமிழர் மனங்களில் நீங்கா இடம் பெற்றது பழைய பாடல்களா, புதிய பாடல்களா..? என்ற தலைப்புடன் பேசத்துவங்கிய திரு முல்லை, செவிகளில் தேன் மழை பரப்பி தமிழர் மனங்களை தன் பேச்சினாலும், பாடல்களினாலும் பரவசப்படுத்தினார். முத்தமிழில் இசைத்தமிழின் முக்கியத்துவத்தை முத்துக்களாக தொகுத்து, பழைய பாடல்களின் சிறப்பையும், புதிய பாடல்களிலுள்ள தமிழர் நாகரீகச் சிதைப்புக்களையும் சுட்டிக்காட்டி, களைய வேண்டிய வேற்றுமைகளே, புதிய பாடல்களை மனதில் ஒட்டாமல் செய்கிறது என தெளிவு படுத்தினார்.



மதிய விருந்தினால் பாதி மயக்கத்துடன் இருந்தவர்களுக்கு, மாலை நேரத்து முல்லையின் மணமும், மயக்கமும் தமிழர்களை சங்க காலத்திற்கே கொண்டு சென்றது என்று சொல்லப்படவேண்டும். பலத்த கைத்தட்டலும் விசிலுமாய் சிறப்புரை முடிந்த நிலையில் முல்லைக்கு நன்றியும் பாரட்டுதலும் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் அடுத்த நடவடிக்கையாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. பனைநில செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, நடத்தப்பட்ட தேர்தலில் புதிய அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பதவியேற்ற பின், பழைய நிர்வாகிகளை பாராட்டியும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.



சார்லஸ்டனில் குடியேறிய புதிய தமிழர்களையும், சங்கத்தின் புதிய உறுப்பினர்களையும், இவ்வுலகத்தில் புதிதாய் பிறந்த உறுப்பினர்களின் குழந்தைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கைத்தட்டி வரவேற்கப்பட்ட புதியவர்கள், தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தையும் தெரியப்படுத்தினர். சங்க உறுப்பினர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காக திரு. முல்லை, உறுப்பினர்களை அழைத்து பாடச்செய்தார்.


சிறுவர்கள் பாட்டுக்கள் பாடியும், திருக்குறள் ஒப்பித்தும் தங்கள் தமிழார்வத்தினையும், கலைத்திறனையும் வெளிப்படுத்தினார்கள். சங்கத்தின் புதிய தலைவர், பனைநில சங்க எதிர்கால செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.




நிறைவாக சங்கத்தின் செயலாளர், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிதனை தெரிவித்து, மீண்டும் பொங்கல் விழாவில் சந்திக்கும் வரை இப்பனைநில கோடை விழா நீங்காத நினைவாக, நீடித்த கனவாக நினைவில் நிற்குமாறு வாழ்த்தி விடை பெற்றுக்கொண்டார். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடிய விழா உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் பிரியா விடை பெற்று, எதிர் நோக்கும் பொங்கல் விழா விரைவில் வருமாறு மனம் விழைய, மகிழ்ச்சியான தருணங்களையும், வாய் விட்டு சிரித்த நிகழ்ச்சிகளையும் அசைபோட்டவாறு தங்களது நாளைய கடமைகளை நினைவில் கொண்டு, வீடு செல்ல புறப்பட்டு சென்றனர். சங்க செயற்குழு உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர், பாராட்டியும், நன்றி தெரிவித்தும், விழாவினை வெற்றிகரமாக நிறைவு செய்த பெருமையில், பொறுப்புக்களை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்து,





சங்கத்தின் அடுத்த விழாவான பொங்கல் விழா மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கூறினர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.


- என்ற பாரதியாரின் பாட்டு காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க, வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் சத்தமும் தமிழிசையாய் மாறவும், சுற்றுப்புறம் இருள் போர்வைக்குள் நுழைந்து கொண்டிருப்பதே மறந்து போனது.

அந்தி வானமும், சாயுங்காலமாய், பால்மடோ பூங்கா தனது சரித்திரத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை சந்தித்துவிட்டபெருமையில், சங்க உறுப்பினர்களை, கையசைத்து, வழியனுப்பி வைத்து, சிறு சிறு தாவரங்களுடனும், மரங்களுடனும் சில்லென்ற காற்றில் தம்மையே ஒருமுறை சிலிர்த்துக்கொண்டது, இன்னும் பலருக்கு நீங்காத கனவாகவே இருக்கிறது.
...

---


வையம்-மனம்