Sunday, March 2, 2008

"தமிழர் அதிகாரம்" - இராம.கி அவர்களின் உரை குறித்து.

தாயே தமிழே! தரணி போற்றும்எம் அமுதே!
நீயே நினைவே! எம்மில் நீங்கா உயிரே!
போற்றி! போற்றி!

தென் கரோலினாவின் பனைநிலத் தமிழ்ச் சங்கம் பல நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது என்பதைக் கேட்டறிந்திருந்தாலும், இம்முறைதான் அந்நிக்ழ்ச்சிகளில் ஒன்றான "சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் ஐயா இராம.கி அவர்கள் உரையாற்றியதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐயா இராமகி அவர்கள் தெளிவாகவும், பொறுமையாகவும், அழகாகவும் முக்கியமாக எடுத்துகாட்டுக்களுடனும் நம் மூத்த சமூகத்தின் காலக் கண்ணாடி, ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றன சிலப்பதிகரத்தின் வஞ்சிக் காண்டத்தை விளக்கலானார்.

அவரின் தொடக்கமே எனக்கு ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது, ஆமாம் எதைச் சொல்ல வேண்டுமோ அதை அவர்கள் உடனடியாகச் சொல்லவில்லை. மாறாக, கதையின் "பின் புலம் " என்று நம் நாட்டின் வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள தொடர்புகள், அதாவது தரைவழித் தொடர்புகள் என்னென்ன? எந்தெந்த அரசு இருந்தது, பழங்காலத்துப் பட்டிணங்கள் தற்போது எவ்வாறெல்லாம் மாறியிருக்கின்றன, பழைய துறைமுகங்கள், அவற்றைச் சார்ந்தாற் போல புதிய துறைமுகங்கள் என்று இராம.கி அவர்கள் நம் இந்திய தேசத்தின் வரலாறுகளை விளக்கியபோது நான் வியந்து போனேன். என்னைப் போலவே அனைவரும் வியந்திருப்பர் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு புகழ் பெற்ற வரலற்று ஆசிரியர் கூட இப்படி விளக்க முடியுமா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த வரலாற்றை அவர் விளக்க மிக முக்கியமான காரணம் இந்தியாவின் முதல் பேரரசான மகதத்தைப் பற்றிப் பேசத்தான். ஏன் என்றால் செங்குட்டுவன் வடக்கே சென்று பேரரசைத் தாக்கி அழித்ததெல்லாம் கட்டுக்கதை, உண்மையில்லை அவன் அங்கே செல்வதற்கே வழியில்லை என்று பரவலாக சொல்லப்படுகின்ற கருத்தை தகர்த்தெறிவதற்காகத்தான், அந்தப் பின்புல வரலாற்றை விளக்கினார். அதில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இருந்த தரைவழித் தொடர்பை விளக்கி இதன் மூலமாகத்தான் வடக்கே சென்று வீரவாகை சூடினான், இது தமிழனின் வீரம், கதையல்ல என்றார். மேலும் அவன் வீழ்த்தியது இந்திய தேசத்தின் முதல் பேரரசான மகதத்தைத் தான் என்பதற்கும் ஆதாரபூர்வமாக அந்த காப்பியத்தில் இருந்தே எடுத்துக் கூறினார்.

இவர் சொல்லவந்தது சிலப்பதிகாரத்தை என்றாலும், சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்ற தமிழனின் வீரம் வெறும் வார்த்தையல்ல, உண்மை என்பதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும் என்பதாகவே பட்டது. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் ஆழப்பதியச் செய்யும் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டியது. ஆகையால்தான் இந்த கட்டுரைக்கு தலைப்பு சிலப்பதிகாரம் என்றில்லாமல் தமிழனின் வீரத்தைப் பற்றி இருந்ததால் "தமிழர் அதிகாரம்" என்று சூட்டியுள்ளேன்.

மேலும் சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் திறனாய்வு செய்து தமிழரின் வாழ்வு, வழக்கங்கள்,வழிபாடு, பண்பாடு என்று ஒளிந்து கிடக்கும் பல்வேறு கருத்துக்களை வெளிக் கொணர்ந்து அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் அவரின் நிலைப்பாடு, நமக்கெல்லாம் ஒரு வெகுமதி.

சிலப்பதிகாரத்தை வேறு கோணத்தில் திசை திருப்பி அழைத்து சென்ற ஐயா இராமகி அவர்களின் பணி தொடர்ந்து இந்த தமிழ் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் அவாவாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், சிலப்பதிகாரத்தில் முரண்பாடுகள் என்று நீங்கள் விவாதித்த சில கருத்துகளை மென்மேலும் ஆராய்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுத வேண்டும்.

சிலப்பதிகாரத்தை நோக்கி எங்களை நடை பழகச் செய்த ஐயா இராம.கி அவர்களுக்கு எங்கள் தமிழ்ச் சங்கம் சார்பாக நன்றிகள் பல!


எழுதியவர்: பூதூர் சம்பந்தனார்.