Thursday, April 5, 2007

பக்கத்து ஊரில் ஒரு திருவிழா

நம்ம அண்ணன் இன்பம் இருக்காரே, அவரு ஒரு நாள் எல்லாரையும் கூப்பிட்டார்.
வாங்கப்பா, வசந்தம் வந்திடுச்சு, பூப்பறிக்க, இல்ல இல்ல பூ பார்க்கப்
போலாம்னு கூப்பிட்டாரு. எங்கேன்னு கேட்டோம். அட, அதாம்பா Flowertownல,
மலர் விழா (flower festival) ன்னாரு. அட, போயித்தான் பாப்பமேன்னு புள்ள
குட்டிகளோட எல்லாரும் கெளம்பிட்டோம்.


புதுசாப் பொட்டி வாங்கின மாபெரும்
பொகைப்படக் கலைஞன் பருவாச்சியானும், முதுபெரும் பொகைப்படக் கலைஞர்
மாயோனும் தம் பொட்டிகளுடன் கெளம்பிட்டாங்க (ஆமா அது என்னாங்க, ரெண்டு
பேரு மட்டும் ஒங்க கேமராவுக்கு முன்னாடி ஒரு மொழ நீளத்துக்குக் குழாய்
வச்சிருக்கீங்க?).


Summervilleலதான் இருக்கு அந்த எடம். ஆளாளுக்கு ஒரு
நேரம், ஒரு பாதை, கார் நிறுத்த ஒரு எடமுன்னு ஆகிப்போன அமளி. அங்கங்க
செல்பேசி அலறுது, எங்கெ இருக்கீங்க, எங்கெ திரும்ப, உங்க காரு எங்கெ, நா
இங்கெ அப்படின்னு. அன்னக்கின்னு அடிச்சுச்சு பாருங்க ஒரு வெயிலு. போனா
அப்பூடி ஒரு கூட்டம். ஒரு மைல் நீளத்துக்கு ரோட்டுக்கு ரெண்டு பக்கமும்,
சந்துகளுக்குள்ளயும் கடையணியும் மக்களணியும். அம்பூட்டு சனத்தை
அமெரிக்காவுல பாத்ததே இல்லன்னு சில பேரு சொல்லிக்கிட்டிருந்தாங்க.


ஆங்காங்கே ஓசிச் சரக்குகள், தீனிகள். விட்ருவமா? நடு ரோட்டுல நின்னு
முழக்கின வாத்தியங்கள். நிறைய கைவினைப் பொருட்கள், இராணுவ ஆள் சேர்ப்பு
நிலையம், காருக்குக் காப்பீடு, தோட்டத்துக்கு விதை, வீடு பழுது பார்க்க,
குடியரசுக் கட்சிக்கு ஆள் சேர்க்க, துணிக்கடை, பஞ்சு மிட்டாய்,
எல்லாமிருந்தன. குட்டிப் பிள்ளைகள் அதையும் இதையும்
தின்றுகொண்டேயிருந்தார்கள். திருவிழாக் கடைன்னா சும்மாவா? அப்புறம் ஒரு
பூங்காவுல உட்கார்ந்து கொண்டுவந்திருந்த கட்டுச் சோற்றைச் சாப்பிட்டோம்.
மாயோனும் இராதையும் தம் மகனோடு விளையாட இன்னொரு ஆள் வரும் மகிழ்ச்சியான
செய்தியைச் சொன்னார்கள்! கொஞ்சம் ஊர்க்கதை, உலகக் கதை. மதியம் இன்னும்
கொஞ்சம் கடை சுற்றல்.


அண்ணன் இன்பத்துக்கிட்ட கேட்டாங்க, ஆமாண்ணே, மலர்
விழான்னு சொன்னீங்க, ஒரு பூவையும் காணோமே! பூங்கா நிறைய பூ,
பாருப்பூன்னுட்டாரு அண்ணன். ஒரு வழியாகக் கிளம்பினோம். அண்ணன் இன்பம் ஒரு
மலர் விழாவுக்குக் கூட்டிக் கொண்டு போகாமல் விடுவதில்லை என்று கங்கணம்
கட்டியிருக்காரு. வாழ்க!

எழுதியவர்: பனையேறி
படங்கள்: பருவாச்சியான்

நாங்கள் போன இடம்:www.flowertownfestival.com/