Monday, June 30, 2008

எங்கள் கோடை விழா - ஒரு பார்வை

பனைநிலத்தில் நடக்கும் விழாக்களில் ஒன்று ஞாயிற்றைப் போற்றும் கோடை விழா. நேற்று ஞாயிற்றுக் கிழமையில்தான் நடந்தது. பக்கத்து ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு திருவிழாவுக்கு வருவதைப் போல அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து (சுமார் 300 மைல்களுக்கு அப்பாலிருந்தும்) பல நண்பர்கள் வந்திருந்தனர். நாயனம், தவில் பின்னணி இசையுடன், ஒரு அழகிய பூங்காவிலிருந்த அந்தப் பெருங்கூடாரம் களைகட்ட ஆரம்பித்தது. கூடாரம் என்றால் சுமார் 200 பேர் பயன்படுத்தக்கூடிய மரத்தினாலாகிய ஒரு கூடம், அதனுள்ளே நிறைய மேசைகளும், உட்காரும் பலகைகளும். சுற்றிலும் அடர்ந்த மரங்களும், சிள் வண்டுகள் பாடும் புதர்களும், சற்றே தொலைவில் பரந்த புல்வெளி. மனிதர்களைக் கண்ட ஆர்வத்தில் மொய்த்துக் கடித்த கொசுக்களை, கொசுவிரட்டி மருந்துகொண்டு நாங்கள் விரட்ட அவை அடுத்த கூடாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. ஒரு புறம் சிவபாரதி, சில்வஸ்டர், பாபா குழுவினர் சோளம், கோழி என்று பார்பிக்யு செய்ய, மறுபுறம் உணவுகளும், பானங்களும் வந்து சேர, இன்னொரு புறத்திலே ஓடி விளையாடிய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. எங்களது கோடைவிழா என்பது வீரத்தைக் கொண்டாட, விளையாடிக் களிக்க, உடற்திறனை அறிய, புதியவற்றைக் கற்க எனக் கட்டமைக்கப்பட்டது. உட்கார்ந்து, நின்று, ஓடியாடி, வாயால் பேசி என அனைத்து வகையான விளையாட்டுக்களையும் முடிந்த அளவுக்கு விளையாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவில் இத்தனைத் தமிழ்க் கூட்டமா என்று புதியவர்கள் வியந்தனர். அடித்த வெய்யிலும் ஏனோ தமிழகத்தினை நினைவிற்குக் கொண்டுவந்து உடலிலும், உணர்விலும் ஒரு மகிழ்வினை ஏற்படுத்தியது. விடாய் தீர்க்க நற்பானங்களும், பசி தீர்க்க நல்லுணவுகளும், பேசிக் களிக்க நன்னண்பர்களுமாக அப்பூங்கா இனிமையால் செறிந்திருந்தது. ஒரு மரத்தின் வேருக்கருகே யாரோ மூவர் வரைந்த சில அழகான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. மாயோனது புகைப்படக் கருவி சுழன்று சுழன்று அழகையும், அசைவையும் தெவிட்டாது சேமித்துக் கொண்டிருந்தது.

மதியவுணவின் பின்னர் அமர்வு தொடங்கியது. பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் அன்றைய சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை வரவேற்று இளவரசன் பேசினார். பிறகு சுபவீ அவர்கள் "அறிவியல் யுகமும், அறிவியல் பார்வையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளர்களும், கணினித் துறை விற்பன்னர்களும் மிகுந்திருந்த அரங்கில் என்ன புதிதாகப் பேசிவிடப் போகிறேன் என்று ஆரம்பித்த சுபவீ சொன்னவை புதியவை. பழைய கதைகளிலிருந்து புதிய பார்வைகளை எடுத்துக் காட்டினார். பழைய நம்பிக்கைகளைப் புதிதாக அணுகுவதற்கு ஒரு சிறு திறப்பினை ஏற்படுத்தினார். பொருந்தாத பொருட்களைப் பிணைத்து, தொடர்புகளை ஆராய்ந்து, கேள்விகளைத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருப்பது அறிவியலுக்கும், மெய்ஞானத்துக்கும் மட்டுமில்லை, சமூக அறிவியலுக்கும் அத்தகைய அணுகுமுறை பொருந்தும் என்றார். இறை நம்பிக்கை, மத நம்பிக்கை எதுவாயினும் அது தனி நபர்களின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. அவ்வாறான நம்பிக்கைகள் உணர்வெல்லைகளைத் தாண்டி, சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தினை உணர்ந்துகொள்வதற்கு ஒரு சிறு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். அவரது உரை சுமார் 40 நிமிடங்களே இருந்தாலும், ஏதோ சுருக்கமாக முடிந்துவிட்டதைப் போலிருந்தது. காலையிலிருந்து அடித்த வெய்யில் தணிந்து மேகம் கறுத்து மழை பொழிய ஆரம்பித்தது. கேள்வி நேரம் ஆரம்பித்தது. தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை, கடவுளுக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு, ஈழத்து மக்களின் போராட்டம், அகதிகளின் இன்னல்கள், பெண்கள் ஏன் ஆண்களை வாழ்நாள் முழுதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது, தமிழர்களின் அறிவியல் பார்வை எவ்வாறு இருக்கிறது, ஏன் இந்தியா ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இல்லை என்று பலதரப்பட்ட கேள்விகளைப் பலரும் முன் வைத்தனர். அவற்றுக்குப் பொறுமையாகவும், கனிவுடனும், அரசியல் நேர்மையுடனும் சுபவீ அளித்த விடைகள் பல புதிய பார்வைகளைத் தந்தன. மழை விடும் வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டது இவ்வுரையாடல். பிறகு நமது சித்திரைக் கருத்தரங்கில் பங்குகொண்டு அறிவியல், தொழில்நுட்பங்களைப் பற்றித் தமிழில் உரையாற்றியவர்களுக்குப் பரிசுகளும், குழந்தைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. குழந்தைகள் பாடல்களும், பெரியவர் பாடலொன்றும் இனிமையாயிருந்தன. உள்ளேயும் வெளியேயும் மழை பெய்து முடித்திருந்தது.

வெற்றுக் கேளிக்கையாக, வேடிக்கைக் கூத்தாக, கிச்சு கிச்சு மூட்டும் ஒரு கூட்டமாக இல்லாமல், அறிவினைத் தூண்டி, சமூக உணர்வினை எழுப்பி, அனைத்து மக்களின் சம வாழ்வினை நோக்கிய ஒரு பாதையை நமக்குக் காட்டிய ஒரு திருவிழாவாக எங்கள் கோடைவிழா அமைந்திருந்தது. எங்கள் நெஞ்சின் அனலை ஊதிவிட்டு, பெய்து முடித்த மழையில் தன்னைக் குளிர்வித்துக் கொண்டிருந்தது அந்த மாலை நேரத்துப் பனைநிலம்.

-எழுதியவர்: பனையேறி