Friday, November 9, 2007

'வளவு' இராம.கி அவர்கள் பனைநிலத்துக்கு வருகை

வளவு (http://valavu.blogspot.com) என்ற வலைப்பதிவில் தமிழ் இலக்கிய/சமூகக் கருத்துக்களை அளித்து வரும் நம் அன்புக்குரிய இராம.கி அவர்கள் பனைநிலத்தில் இவ்வார இறுதியைக் கழிக்கவுள்ளார். இவரது வருகையையொட்டி ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி அமையும்.
இடம்: சார்லஸ்டன் பொது நூலகம் (Charleston Public Library, Calhoun Street, Charleston)
நேரம்: சனிக்கிழமை, நவம்பர் 10, பிற்பகல் 2 முதல் 3.30 வரை.

விருப்பமுள்ள அனைவரும் பங்கு பெறலாம். தேநீருக்கும், சிற்றுணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!

Wednesday, October 3, 2007

சார்ல்ஸ்டன் திராட்சை தோட்டம்

வாட்மலாவ் தீவில், 48 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இத்திராட்சைத் தோட்டத்தில் "மஸ்கடைன்" வகை திராட்சை விளைகிறது. இனிப்பு சுவை அதிகமான இவ்வகை பழங்கள், வெதவெதப்பான சீதோஷணம் காரணமாக வட அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளிலேயே அதிகமாக காணப்படுகின்றன. "இர்வின்-கவுஸ் வைன்யார்டு" (Irvin-House Vineyards) சார்ல்ஸ்டனின் ஒரே ஒரு மதுபானம் தயாரிக்கும் சிறுதொழிற்சாலை ஆகும்.

ஐவகை மஸ்கடைன் திராட்சைப் பழங்கள் கொடிகளிள் கொத்துக் கொத்தாக பழுத்து தொங்குவதை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காணலாம். இச்சமயங்களில் நம் விருப்பப்படி பழங்களை பார்க்கவும் ருசிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பிறகு பழங்கள் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு இரசாயன முறைகளில் நொதிக்கப்பட்டு, இறுதியில் அனைவரும் விரும்பும் வகையில் அழகான கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு, கடைகளின் கண்ணாடி அலமாரிகளை அலங்கரிக்கின்றது. உயர்தர மக்கள் மட்டுமன்றி அனைத்துவகை மக்களும் மதுபானத்தை அலங்காரக் கோப்பைகளில் நிரப்பி உறிஞ்சும் காட்சி மேலை நாடுகளில் சகஜமான விஷயமாகும்.
தோட்டத்திலிருந்து வெளியேறுகையில் குளம் ஒன்றையும், பண்ணை மிருகங்கள் பலவற்றையும், "ஐரிஷ் மாஸ்" கொடிகள் படர்ந்த ஓக் மரங்களையும் அழகான புல் வெளிகளையும் காணலாம். கடைசியாக பரிசுப் பொருள் விற்கும் கடையில் சுவைப்பதற்கும் சிறிது மது அளிக்கப்படுகிறது. திராட்சை அறுவடைக் காலமான ஆகஸ்ட் மாத இறுதியில் மது தயாரிக்கும் திருவிழா ஒன்று வருடந்தோரும் நடத்தப்படுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த இவ்விழாவின் போது, மரத்தொட்டிகளில் கனிந்த பழங்கள் நிரப்பப்பட்டு, காலால் மிதித்து பழரசத்தை வெளிக்கொணர்ந்து சிறுவர்கள் விளையாடினர். முகத்தில் படம் வரைதல், சோளப்பொறி விற்பனை, மது விற்பனை, பார்-பி-க்யூ, மேற்கத்திய சங்கீதம், பண்ணை மிருகங்களுடன் விளையாடுதல் ஆகியவை இவ்விழாவின் மற்ற முக்கிய பொழுதுபோக்குகளாகும். மது அருந்துவோர் மட்டுமன்றி, அருந்தாதவரும் (திராட்சைகள் சாப்பிட்டு) மகிழ்ச்சியாக சுற்றி வர தோதான இடம். அறுவடை காலத்தில் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு அமைதியான அழகான இடம் இந்த தோட்டம்.
மாயோன் ராதை

Saturday, August 18, 2007

சார்லஸ்டன் போ.வி.த


சார்லஸ்டன் போ.வி.த
எல்லோரும் பூங்கா, அருங்காட்சி, விழா, அது இதுன்னு என்னன்னமோ எழுதுறாங்க.....ம்ம்ம்ம், நம்ம எதையாவது எழுதி வைக்கலாம்னுதான். ஹிஹி..


கொஞ்சம் வித்தியாசமான இடத்துக்கு போய் பார்ப்போமா. அப்பிடியே நம்ம வண்டியில ஏறுங்க! இப்போ நம்ம 26 ஹைவே வழியா போய்க்கிட்டிருக்கோம். அப்பிடியே போனா நார்த் சார்லஸ்டன் கொஞ்சம் கடந்தா விமான நிலையமே வந்துரும்...ஆனா இப்போ 642 ரூட் பாதையிலே டாச்செஸ்டர் பாதையிலே போய்க்கிட்டிருக்கோம்.....ரெண்டே நிமிசம்தான. இதோ வந்திட்டோம், எல்லாம் இறங்குங்க.

நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி.....


விமானங்கள் எலிகள் மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சி....


என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க....இப்போ நீங்க பார்கிறதுதான் சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த. அமெரிக்காவிலே பழைய விமான தளங்களில் இதுவும் ஒண்ணு..கிழக்கு அமெரிக்காவிலே முதல் மூணு பெரிய விமான தளத்திலே இதுவும் ஒண்ணு......ஊரிலிருந்து 10 மைல் தள்ளியிருக்கு....கொஞ்ச நஞ்சமில்ல கிட்டத்தட்ட 3700 ஏக்கர் நிலம் இதுக்கு....6000 பேர் வேலை பார்க்கிற இடம் வேற....

அப்பாடி எம்மாம் பெருசு......C17 முன்னே ராணுவ வீரர் வாக்கிங் போறாரோ ?


1931 லே இதுக்கான இடம் வாங்கியிருந்தாலும்.....இரண்டாம் உலகப்போரில தான் 1941 லே சார்லஸ்டனோட புவிதள மதிப்பு தெரிஞ்சு போர்விமான தளத்தை நிர்மாணிச்சாங்க......1951 லதான் இதுக்கு சார்லஸ்டன் ஏர் பேஸ் பேர் வச்சாங்க. இன்னொரு விசயம் என்னான்னா, நம்ம இப்ப பயன்படுத்துகிற பொது விமான ஓடுபாதை ராணுவத்துக்கு சொந்தமாகத்தான் இருந்தது.... 1952 லிருந்து பொதுஜன விமானசேவைக்கும் பகிர்ந்தளிக்க சம்மதிச்சாங்க. இதோட 2007 பட்ஜெட் தெரியுமா..அதிகமில்லை ஜென்டில்மேன், 3.3 பில்லியன் டாலர்...அதாவது 3,300,000,000 டாலர்கள்.....யாரும் உணர்ச்சிவசப்பட்டு போய் உடனே வாங்கிட வேணாம்....அமெரிக்கா கொஞ்சம் பிழைச்சிட்டு போகட்டும்....

சார்லஸ்டன் தொங்குபாலத்தின் மேலே


இங்கே இயங்குகிற முதன்மையான விமானம்னு சொன்னா...C 17 தான்....இந்த ரக போர் விமானம் 585,000 பவுண்ட் எடையோட 500 மைல் வேகத்தில 6000 மைல் தூரத்துக்கு மேல ஒரே மூச்சுல பறக்கும்... இது நவீனமான அதிவிரைவு வீரர்கள் மற்றும் சரக்குகளை போர்ததளத்திறகு கொண்டு சேர்க்கும் விமானமாகவும் பயன்படுத்தலாம்.

விகிமேபியாவின் ஏரியல் வ்யூ http://wikimapia.org/#lat=32.899768&lon=-80.057373&z=15&l=0&m=s&v=2


ராணுவ வீரர்கள் ஈராக் பயணம்....நரகத்தை நோக்கி......


நீங்க இப்ப நிற்கிற இடம்....சார்லஸ்டன் விமானநிலையத்திலிருந்து....நம்ம ஊரு பாஷையில சொல்லனும்னா...நடக்கிற தூரந்தான. அப்பிடியே வடமேற்கு வழியா வந்தா C4 இயங்குதளம் இருக்கும், அதுக்கு வடக்கில நீங்க இப்ப பார்க்கிறீங்களே அதுதான் KC10 எக்ஸ்டெண்டர் பேஸ். அதுக்கும் வடக்கில நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி வரிசையா C17 ஐ நிறுத்தி வச்சிருக்காங்க. அப்பப்ப பொழுது போகலன்னா இங்க இருக்கிற விமானிகள் பயிற்சி பண்றென்னு சொல்லிக்கிட்டு போர் விமானத்தில மின்னல் வேகத்தில ஊர சுத்திப்பாக்க போய்க்கிட்டு இருப்பாங்க..நம்ம காதுக்குதான் பிடிச்சது கேடு!

பாரு பாரு! பரேடு பாரு!!





சார்லஸ்டன் மேலே வட்டமிடும் ராணுவ வல்லூறு





போர் சென்று திரும்பும் அம்மாவை கட்டியணைத்து.....சில ஈரமான நெகிழ்ச்சியான தருணங்கள்






கொசுறு தகவல்


163 நாடுகள்ள அமெரிக்க ராணுவத்தோட 450,925ராணுவ வீரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. உள்நாட்டையும் சேர்த்து மொத்தம் 1.3 மில்லியன் பேர்.


நம்மூரு சார்லஸ்டன்ல அமெரிக்க அதிபர் புஷ் பேசியது....




அமெரிக்க விமானபடை பற்றிய மேலும் சில சுவராசியமான வீடியோக்கள்......






சார்லஸ்டன் போர் விமானதளம் பற்றிய வீடியோ













....கந்தன் - வள்ளி....

check my blog http://blogsenthil.blogspot.com/

http://senthil-senthil.tripod.com/


--------------------------------------------------------------
படங்கள் நன்றி http://public.charleston.amc.af.mil/
விடியோ உதவி youtube.com

இவை பாதுகாக்கப்பட்ட தளங்கள். இந்த ராணுவ தளங்கள் நுழைவிற்கு சிறப்பு அனுமதி தேவை.







.


Tuesday, August 7, 2007

சார்லஸ்டனில் கோடைத் திருவிழா


கோலாகலமான கோடை விழா...!!! சார்லஸ்டனிலா...???

பனைநிலத் தமிழ் சங்கம் தென்கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் தனது நான்காவது கோடை விழாவினை 22-7-2007 அன்று இனிதாக கொண்டாடியிருக்கிறது.

சார்லஸ்டன் மாவட்ட பால்மடோ பூங்காவில் முழுநாள் விழாவாக கொண்டாடப்பட்ட இத்திருநாளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நாதஸ்வர இசையும், கோலமிட்ட பந்தலும், ஆச்சரியத்தில் ஆழ்த்த, நண்பர்கள் கையசைத்து, வாழ்த்துக்கள் கூறி, புன்னகையுடன் வரவேற்றது, நாம் அயல்நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது. நண்பர்களும் தன்னார்வத் தொண்டர்களும் சிறு சிறு குழுக்களாய் மாறி விழாவிற்கான பணிகளில் ஈடுபட, பந்தலின் முகப்பில் தோரணங்கட்டுதலும், ஒலிபெருக்கு சாதனங்களை சீரமைத்தலும், அனல் மூட்டி சோளங்களை வேகவைத்தலும், நண்பர்கள் கொண்டுவரும் மதிய உணவுப் பண்டங்களை பதப்படுத்துதலுமான வேலைகள் சீராக நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் சிறுவர்களின் சிறு சிறு விளையாட்டுத் துள்ளல்களும், குழந்தைகளின் சிணுங்கல்களும், குடும்பப் பெண்களின் சுய புராணங்களும், நண்பர்களின் அரட்டையுமாய், காலை நேர ஆரவாரம், நம்ம ஊர் திருவிழாவினை நினைவுபடுத்தியது. பதினொரு மணியளவில் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிபரப்பு வரவும், சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் ஆர்வத்தோடு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழையும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.


விளையாட்டுப் போட்டிகளினால் களைத்திருந்தவர்களுக்கு ஆவி பறக்கும், சுவைமிகு உணவு வகைகள் மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்தது. சைவ உணவு வகைகள் ஒருபுறமும், அசையா அசைவங்கள் மறுபுறமும், நாசியை மட்டுமின்றி, நாவையும் சப்பு கொட்டி அசைக்கச்செய்தன. சாத வகைகளில், எலுமிச்சை, தக்காளி, புளிசோறு, காய்கறிசோறு, கூட்டு, பொரியல், சிப்ஸ் முதலியவும், கறிக்குழம்பு, வறுவல், சாப்ஸ் என்று அசைவ வகைகளும், தாகத்தை தணிக்க, திராட்சை, முழாம்பழ, மாம்பழ முதலிய பழச்சாறுகளும், சோடா, பெப்சி, கோலா வகை சாறுகளும் பரிமாறப்பட்டன. இவை அத்தனையும் சுவை பார்த்து, உண்டு, வயிற்றில் இடம் பத்தாமல் தவித்து புலம்பியவர்கள் நிறைய பேர் உண்டு.



உண்ட களைப்புடன் இருந்தவர்களுக்கு, தமிழ் ஆர்வலர்களின் செய்திக் குறிப்புகளும், எண்ண வெளிப்பாடுகளும், பெட்டிச்செய்திகளாக வெளியிடப்பட்ட போஸ்டர்கள் இளைப்பாறச் செய்தன. சார்லஸ்டனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களையும், தோட்டங்களையும், இயற்கை அழகை வர்ணித்த செய்திகளும், நமது நகரம் இவ்வளவு அழகா..? என பிரம்மிப்பூட்டும் வண்ணப்படங்களும், கண்களுக்கு விருந்து படைத்தன. அதுமட்டுமல்லாமல் தமிழில் இணைதளம் துவக்க ஆவலாக இருக்கும் நண்பர்களுக்கு உதவும் வகையில் எளிய நடையில் இணைதள உருவாக்கம் பற்றிய கருத்துக்களும், செய்திகளும், பல தமிழர்களை யோசிக்கவும், அதுபற்றி கலந்துரையாடவும் செய்தன.

மதிய உணவு முடிந்து இளைப்பாறிய பின், பனைநிலத் தமிழ் சங்க அலுவல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் " என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையவர்களின் தமிழ் தாய் வாழ்த்துடன் துவக்கப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும், சங்கத்தின் சாதனைகள் பற்றியும் சங்கத் தலைவர் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.

தென்கரோலினா மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட லாபநோக்கமற்ற சங்கமாகவும், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் பதிவு பெற்ற சங்கமாகவும் மாறிய நடவடிக்கைகளை கூறினார். பின்னர் சங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட விழாக்களையும் அதன் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். பலரது கைத்தட்டல்களுடன் தனதுரையை முடித்துக்கொண்ட தலைவர், சிறப்பு விருந்தினராக கோடைவிழாவிற்கு அழைக்கப்பட்ட திரு.முல்லை நடவரசு அவர்களை அழைத்தார்.





வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் பட்டிமன்ற நடுவராக பங்கேற்க வந்திருந்த திரு. முல்லை அவர்களை பனைநில கோடை விழாவிற்கு அழைத்து வந்த பெருமை செயலாளரையும், இணை செயலாளரையும் சேரும். பல கைத்தட்டலுடன் ஆரம்ப முதலே முல்லையின் வாசம், விழா முழுக்க வீசத் துவங்கியது என்றே சொல்ல வேண்டும்.




தமிழர் மனங்களில் நீங்கா இடம் பெற்றது பழைய பாடல்களா, புதிய பாடல்களா..? என்ற தலைப்புடன் பேசத்துவங்கிய திரு முல்லை, செவிகளில் தேன் மழை பரப்பி தமிழர் மனங்களை தன் பேச்சினாலும், பாடல்களினாலும் பரவசப்படுத்தினார். முத்தமிழில் இசைத்தமிழின் முக்கியத்துவத்தை முத்துக்களாக தொகுத்து, பழைய பாடல்களின் சிறப்பையும், புதிய பாடல்களிலுள்ள தமிழர் நாகரீகச் சிதைப்புக்களையும் சுட்டிக்காட்டி, களைய வேண்டிய வேற்றுமைகளே, புதிய பாடல்களை மனதில் ஒட்டாமல் செய்கிறது என தெளிவு படுத்தினார்.



மதிய விருந்தினால் பாதி மயக்கத்துடன் இருந்தவர்களுக்கு, மாலை நேரத்து முல்லையின் மணமும், மயக்கமும் தமிழர்களை சங்க காலத்திற்கே கொண்டு சென்றது என்று சொல்லப்படவேண்டும். பலத்த கைத்தட்டலும் விசிலுமாய் சிறப்புரை முடிந்த நிலையில் முல்லைக்கு நன்றியும் பாரட்டுதலும் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் அடுத்த நடவடிக்கையாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. பனைநில செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, நடத்தப்பட்ட தேர்தலில் புதிய அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பதவியேற்ற பின், பழைய நிர்வாகிகளை பாராட்டியும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.



சார்லஸ்டனில் குடியேறிய புதிய தமிழர்களையும், சங்கத்தின் புதிய உறுப்பினர்களையும், இவ்வுலகத்தில் புதிதாய் பிறந்த உறுப்பினர்களின் குழந்தைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கைத்தட்டி வரவேற்கப்பட்ட புதியவர்கள், தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தையும் தெரியப்படுத்தினர். சங்க உறுப்பினர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காக திரு. முல்லை, உறுப்பினர்களை அழைத்து பாடச்செய்தார்.


சிறுவர்கள் பாட்டுக்கள் பாடியும், திருக்குறள் ஒப்பித்தும் தங்கள் தமிழார்வத்தினையும், கலைத்திறனையும் வெளிப்படுத்தினார்கள். சங்கத்தின் புதிய தலைவர், பனைநில சங்க எதிர்கால செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.




நிறைவாக சங்கத்தின் செயலாளர், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிதனை தெரிவித்து, மீண்டும் பொங்கல் விழாவில் சந்திக்கும் வரை இப்பனைநில கோடை விழா நீங்காத நினைவாக, நீடித்த கனவாக நினைவில் நிற்குமாறு வாழ்த்தி விடை பெற்றுக்கொண்டார். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடிய விழா உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் பிரியா விடை பெற்று, எதிர் நோக்கும் பொங்கல் விழா விரைவில் வருமாறு மனம் விழைய, மகிழ்ச்சியான தருணங்களையும், வாய் விட்டு சிரித்த நிகழ்ச்சிகளையும் அசைபோட்டவாறு தங்களது நாளைய கடமைகளை நினைவில் கொண்டு, வீடு செல்ல புறப்பட்டு சென்றனர். சங்க செயற்குழு உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர், பாராட்டியும், நன்றி தெரிவித்தும், விழாவினை வெற்றிகரமாக நிறைவு செய்த பெருமையில், பொறுப்புக்களை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்து,





சங்கத்தின் அடுத்த விழாவான பொங்கல் விழா மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கூறினர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.


- என்ற பாரதியாரின் பாட்டு காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க, வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் சத்தமும் தமிழிசையாய் மாறவும், சுற்றுப்புறம் இருள் போர்வைக்குள் நுழைந்து கொண்டிருப்பதே மறந்து போனது.

அந்தி வானமும், சாயுங்காலமாய், பால்மடோ பூங்கா தனது சரித்திரத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை சந்தித்துவிட்டபெருமையில், சங்க உறுப்பினர்களை, கையசைத்து, வழியனுப்பி வைத்து, சிறு சிறு தாவரங்களுடனும், மரங்களுடனும் சில்லென்ற காற்றில் தம்மையே ஒருமுறை சிலிர்த்துக்கொண்டது, இன்னும் பலருக்கு நீங்காத கனவாகவே இருக்கிறது.
...

---


வையம்-மனம்





Wednesday, August 1, 2007

சார்ல்ஸ்டன் தேயிலை தோட்டம்

விடியலுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும்போதே, காபி.... டீ..... சாயா...... என்று ஜன்னலோரத்தில் கூவ துவங்கிவிட்டது, ரயில் நிலைய டீ காபி விற்பனையளர்கள் கூட்டம். சத்தம் கேட்டு அரைத் தூக்கத்திலிருந்து விழித்து,, பல் துலக்கவும் மறந்து போய், அவசரமாய் சில்லரையை தேடி, ஒரு கப் சூடான டீ வாங்கி உறிஞ்சியதும் தான் ஆனந்தமான காலை பொழுதை துவங்கிய திருப்தி சில பயணிகளுக்கு. டீ கடைக்கு போய் ரேடியோ கேட்டுக்கொண்டே அந்த "தண்ணி" டீயை குடித்தால் ஒரு தனி சுகம் தான். அலுவலக பணியாளர்களாயினும், தினக்கூலி வாங்குபவர்கள் ஆயினும் “டீ பிரேக்” எடுப்பது நம் நாட்டில் மட்டுமன்றி எல்லா இடங்களிலும் ஒரு பொழுது போக்கு இடைவெளி. சூடான சீதோஷணம், தாராளமான மழை, நீர் வழிந்தோடக்கூடிய நிலச்சரிவுகள் - இவை தேயிலை செடிகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. "அமெரிக்கன் கிலாசிக் டீ" தயாரிக்கும் "சார்ல்ஸ்டன் டீ பிலான்டேஷன்" மட்டுமே அமெரிக்காவின் (வட அமெரிக்காவின்) ஒரே ஒரு தேயிலை தோட்டம். இச்செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான தட்பவெப்ப நிலைகள் இங்குதான் ஓரளவுக்கு திருப்திகரமாக உள்ளன.

M.U.S.C-ல் தேயிலை தோட்டம் சுற்றிப்பார்க்க அழைத்து செல்கிறார்கள் என்றதும் - ஆகா என்று விடுமுறை நாள் ஆனாலும் விடியலிலே எழுந்து தயாராகி, தோசை சுட்டு பொட்டலம் கட்டிக்கொண்டு, எங்கள் பிள்ளைகளை இடுப்பிலும், வயிற்றிலுமாக சுமந்துகொண்டு, மூச்சு வாங்க கிளம்பிவிட்டோம். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அத்தேயிலைத் தோட்டத்தில் நல்ல மழை வரும் போல் கருமேகம் சூழ்ந்திருக்க, சில்லென்ற காற்று வீச, டவுன் டவ்ன் நெரிசலின்றி மனதிற்கு இதமாக இருந்தது. சொகுசு பேருந்து ஒன்று பார்வையாளர்களை வசதியாக அமர்த்திக்கொண்டு சுற்றிக்காட்ட கிளம்பியது. புகைப்படங்கள் எடுக்கவும், அந்த 127 ஏக்கர் பரந்த தோட்டத்தைப் பற்றிய வர்னனைகளைக் கூறவும், பேருந்தை, ஓட்டுனர் பல இடங்களிள் நிறுத்தினார். வாட்மலாவ் தீவில், மேபேங் நெடுங்சாலையில் உள்ள இத்தோட்டம் 1915 முதல் பாழடைந்து கிடந்தது. 1960ல் தாமஸ் லிப்டன் கம்பெனி இதை வாங்கி 1987 வரை பராமரித்து வந்தது. 1987ல் மேக் ப்ளமிங் மற்றும் வில்லியம் கால் ஆகிய இருவரும் இதை வாங்கி 2003 வரை நடத்தி வந்தனர். 2003ல் பிக்கெலாவ் என்பவருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இன்று பார்வையாளர்களுக்காக பேருந்து, தொழிற்சாலை பற்றிய வர்னனைகள் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பலவித தேயிலை செடிகள், வெவ்வேறு வளர்ச்சி பருவங்களில் உள்ள செடிகள், நீர் பாசனம் மற்றும் அறுவடை முறைகள் ஆகியவற்றை பேருந்தில் இருந்தபடியே கண்டுகளித்தோம். ஊர் சுற்றிப்பார்த்த களைப்பில் நல்ல பசி. மனைவி சுட்ட தோசை கூட அமிர்தமாய் உள்ளிறங்கியது. வழக்கம் போல அன்றும் முகத்தை சுளிக்காமல், மிகச் சுவைத்து சாப்பிட்டது எங்கள் சிறு வண்டு (இல்லை, வாண்டு!). தேயிலை பதப்படுத்துதல், காயவைத்து, பொடியாக்கி, பின்னர் சலித்து பொட்டலமாக்கப்படும் முறைகளை கண்ணாடி அறைக்குள்ளிருந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டோம். பின்னர் அங்கிருந்த பரிசுப்பொருள் விற்பனைக் கடையில் அனைவருக்கும் இனிப்பற்ற மற்றும் இனிப்பு கலந்த தேயிலை பானம் அருந்துவதற்கு அளிக்கப்பட்டது. தேயிலைக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேயிலையில் உள்ள திரியோனின் என்ற அமினோஅமிலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காச நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதுடன், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தேயிலையில் உள்ள பாலிபீனால்கள் கட்டுப்படுத்துகின்றன. தற்போது, "கிரீன் டீ (green tea)" க்கு பல நற்குணங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் தெரிந்துகொண்ட திருப்தியில் வெளியே வரும்போது அனைவருக்கும் ஒரு ஜோல்னாப் பையில் ஒரு தேயிலைப் பொட்டலமும், சார்ல்ஸ்டன் டீ பிளான்டேஷன் பற்றிய DVD-ம் இலவசமாக வழங்கப்பட்டது. கரும்பசுமையான அத்தோட்டத்தின் அழகை எங்கள் கேமராவுக்குள் ஓரளவுக்கு கைப்பற்றிக் கொண்டு திருப்தியாய் வீடு திரும்பினோம். போய் வந்த களைப்பிற்கு ஏலக்காய், கிராம்பு, லவங்கம், இஞ்சி, மிளகு எல்லாம் தட்டிப்போட்டு ஒரு கப் சூடான டீ குடித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்????

மாயோன், ராதை.