Tuesday, October 21, 2008

எதை எழுத

நண்பர் பனையேறி என்னிடம் ஒரு நாள் எதாவது எழுது என்றார், சரி எதைப் பற்றி எனக் கேட்டேன், உனக்குத் தெரிந்த சுவையான சம்பவங்கள் அல்லது கற்பனை எது வேண்டுமானாலும் எழுது என்றார்.

உங்களுக்கே தெரியும், நாமெல்லாம் இருக்கின்ற வேலைகளுக்கே நேரமில்லாமல் தவிக்கின்றோம்.அதிலும் நான் ரொம்ப பிசி..காலையில் ஆரம்பித்து ஆராய்ச்சி,கருத்தரங்கம், விளையட்டு, சமையல், வாரக் கடைசியில் வரும், பிறந்த நாள் விழாக்கள், அதிர்ஷ்ட்டப் பானை விருந்து, கடைகளுக்குச் சென்று வருதல் என ஒரே வேலை மயம் இருந்தாலும் நான் யோசித்துக்கொண்டேதான் இருந்தேன் எதை எழுத என்று.

இவ்வளவு வேலைகளுக்கிடையில், என்னால் ஒரு நாள் கூட "பியானோ" வாசிக்காமல் இருக்கவே முடியாது, இல்லையெனில் தூக்கமே வராது. ஒரு நாள் அப்படித்தான், லேசான மழை, கதவைத் திறந்தால் சிலீரென்று காற்று முகத்தில் அறைந்தது, மகிழ்ச்சியான மாலைப் பொழுது. என்ன செய்யலாம் என் யோசித்தேன்..ஒருகையில் சூடான தேனீரும் மறுகையால் பியானோவும் வாசிக்கத் தொடங்கினேன்..ரம்யமான இனிமையான இந்த இசை அப்படியே தென்றலில் கலந்து என்னை மெய்மறக்கச் செய்தது..

வெளியில் லேசான சலசலப்பு...என்னடா இது நம் இசைக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று நினைத்தவாறு வெளியே எட்டிப் பார்த்தேன்..ஒரு பெரிய கூட்டம், நம் இசைக்கு இவ்வளவு ரசிகர்களா என வியந்து, அவர்களை உள்ளே வந்து ரசிக்குமாறு சொன்னேன்.. அதில் ஒருவர் என்னை நன்றாக முறைத்துப் பார்த்துவிட்டு, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா...என்ன இது..எங்களை எல்லாம் நிம்மதியாக இருக்கவிடமாட்டாயா..என்றார்..

ஒரு இசைக் கலைஞனுக்கு இப்படியெல்லாம் சோதனை வரத்தான் செய்யும்..நாம் மனம் தளரக்கூடாது என்று கதவை தாழிட்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன்...சில நொடிகள்தான் வாசித்திருப்பேன்..என் அறை நண்பன் என்னிடம் வந்து நான் வேறு அறை பார்த்துக்கொள்ளவா அல்லது நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்களா என்றான்.. அப்போது நான் இளையராஜாவை நினைத்துக் கொண்டேன்..நீங்கள் முதன் முதலில் பாடல் பதிவு செய்யும் போது 13 முறை மின்சாரம் நின்று போனது..ஆனாலும் மனம் தளரவில்லை நீங்கள்.. சரி மனம் இருந்தால் மார்க்கம் உண்டல்லவா..

என் அறை நண்பன் ஆய்வகத்திற்கு சென்று இரவில் தாமதமாகத்தான் வருவான்..அவன் இல்லாத சமயங்களில் வாசிக்க ஆரம்பித்துவிடுவேன்..ஆனால் இம்முறை கதவை நன்றாக தாழிட்டுவிட்டு வாசிப்பேன்.. சில சமயம் என் விரல்கள் என்னையும் அறியாமல் ஆட ஆரம்பித்துவிடும்..அப்போது என் அறை நண்பனை ஆய்வகத்துக்கு செல்லவில்லையா..நீ என்பேன்..அவன் என்னை முறைத்துவிட்டு இப்போதுதானே அங்கிருந்து வந்தேன் என்பான்..நானும் அவனை எப்படியாவது எங்காவது வெளியே அனுப்ப முயற்சி செய்ய..நானெல்லாம் ஆராய்ச்சி செய்யும் போது ஆய்வகத்தை தவிர என்னை வெறெங்கும்…. என்று ஆரம்பிப்பேன்.. அவன் உடனே எனக்கு தூக்கம் வருகிறது என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று போய் படுத்துக்கொள்வான்... ஒரு கலைஞனுக்கு எப்படியெல்லாம் இடர் பாருங்கள்...ஒருமுறை, இதைக்கூட எழுதலாமா என யோசித்தேன், ஆனால் எப்படி எழுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

"யானி" இந்தியாவிற்கு வந்தபோது பார்க்க விருப்பபட்டது இரண்டே இரண்டுதான், ஒன்று தாஜ்மகால், அவர் "பியானோ "வாசித்த இடம், இன்னொன்று நான், நான் பியானோ வாசித்தவிதம்.. லண்டன் ட்ரினிட்டி அகாதமியில், நானும், யானியும் ஒரே நேரதித்தில் இசை பயின்றோம். மேலும் ராயல் ஃபில்ஹார்மோனிக் அகாதமியில் பீத்தோவானின் "கோப்ரா" சிம்பொனி இசைக்குப் பின், நாங்கள் அங்கே சிம்பொனி இசைத்தோம் என்றால் நீங்கள் நம்ப வாய்ப்பில்லை...எனவே என்னால் இதையும் எழுத முடியவில்லை..

கல்லூரிப் பருவம் என்பது அனேகமாக அனைவருக்குமே வாழ்க்கையின் மிக இனிமையான நாட்களாக இருந்திருக்கும். அப்போது நடந்த சில சம்பவங்கள், நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். நம்மால் ஏதாவது தமிழுக்கு, அதன் வளர்ச்சிக்கு செய்யவேண்டுமே என்று தனியாத ஆசை எனக்கு, சரி என்று நேராக கடைக்குச் சென்றேன், நிறைய காகிதங்கள், எழுது கோல், என பை நிறைய வாங்கி வந்தேன். விடுதிக்குள் நுழைந்தவுடன் சோ ....வென மழை, மின்னல், இடி என மாறி மாறி அடித்தது. நண்பர்களிடம் சொல்லிவிட்டேன் என்னை யாரும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாதென்று. கதவை தாழிட்டேன், சன்னல்களை இழுத்து மூடினேன், பின் நாற்காலியில் உட்கார்ந்து ஆரம்பிதேன் எழுத..ஒரு காவியத்தை படைத்துவிட்டுத்தான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வெண்டும் என ஆரம்பித்து எழுத ஆரம்பித்துவிட்டேன்...இடையில் நாம் வாங்கி வந்த காகிதங்கள் போதாதோ என்று எண்ணியபடியே விடாமல் எழுதித்தள்ளினேன்..

திடீரென எனக்கு ஒரு இடைஞ்சல், யாரோ என் அறைக் கதவை நாகரிகமாகத் தட்டுகிறார்கள்...நம் நண்பர்களுக்கு நாம் தான் ஏற்கனவே தொந்தரவு செய்யாதீர்கள் என சொல்லிவிட்டேனே ..மறுபடியும் யார் இது என்ற சிந்தனையுடனே எழுந்து வந்து கதவை மெல்ல திறந்தேன்...ஆ..என்ன ஆச்சரியம் என் கண்களை என்னாலே நம்பமுடியவில்லை..வெளியில் கம்பன், பாரதி, வள்ளுவன், ஒளவையார், மற்றும் இளங்கோவன் எல்லோரும் வாசலில் நின்றிருந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்தேன். முன்னெச்சரிக்கையாக ஒளவையாரின் ஊன்றுகோலை முதலில் வாங்கி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அவரை கைத்தாங்கலாக அமரவைத்தேன்..

யார் முதலில் பேச்சை துவங்குவது .... சிறிய மெளன இடைவெளி...எனக்கு இவர்களைப் பார்த்த பரவசத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை, ஆனால் பாரதி மட்டும் முகத்தை மிக கோபமாக வைத்துக்கொண்டிருந்தார்..வள்ளுவரோ தாடியை லேசாக நீவியபடி "என்ன இதெல்லாம்" என்பது போல் பார்த்தார்.

சரி எதுவானாலும் வந்தவர்களை முதலில் உபசரிப்போம், பிறகு பேசிக்கொள்வோம்,என நினைத்து விடுதியிலிருந்து கொஞ்சம் மோர் வாங்கி வந்து அனைவருக்கும் தந்தேன்.. மோரைக் குடித்த பாரதி என்னை பார்த்தார், பார்வையில் கோபம் சற்று தணிந்திருந்தது..நானும் ஒருவழியாக தைரியத்தை வரவைத்துக்கொண்டு இன்னும் மோர் வேண்டுமா என்றேன்.. உடனே பாரதி..

"யாம் பருகிய மோரினிலே இது போல் இனிதாவது எங்கும் காணேன்"

என்றார். நான் இன்னும் சிறிது மோர் கொடுத்தேன் அதையும் குடித்துவிட்டு..

"பாருக்குள்ளே நல்ல மோரு நீ தந்த இந்த மோரு என்றார்"...

அப்பாடா நிம்மதி. வள்ளுவர் மோர் குடித்துக்கொன்டிருக்கும் போது வாயில் எதும் சிக்கியிருக்க வேண்டும் போல்..அதை உடனே கீழே துப்பி விட்டு...

"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு.

துப்பாய தூவும் மழை" என்றார்...

சரி தாங்கள் வந்ததின் நோக்கம் என்ன என்றேன்... பாரதி கோபம் கொண்டு நீ எதோ எழுதுகிறாயாமே...கேள்விப்பட்டு வந்தோம் என்றார்..ஆம் என்றேன்...முதலில் அதை நிறுத்து என்றார்.

கம்பனோ..ஏன் எங்கள் புகழ் இந்த பூமியில் நிலைத்திருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா எனக்கேட்டார்.

என் பெயர், புகழ் இந்த உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருக்கிறது ஆனால் அதை நீ இரண்டே நாளில் அழித்து விடுவாய் போலிருக்கிறதே.. எங்கள் புகழ் நிலைதிருக்க வேண்டுமென்றால், தமிழும், தமிழ் மக்களும் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்றால் இப்போதே நிறுத்து என்றார் வள்ளுவர்..... சரி நம்மை இவ்வளவு தூரம் கேட்கிறார்களே என எண்ணி தமிழில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி, அவர்களை வழி அனுப்பி வைத்தேன்..

இதை எனக்கு வந்த சோதனையாகக் கருதாமல் தமிழுக்கு வந்ததாக நினைத்து வருந்தினேன்.. ஆங்கிலத்திலும் நல்ல புலமை எனக்கு எடுத்தேன்...எழுதினேன் ..எழுதிக்கொண்டே இருந்தேன்...வெளியே "பூட்ஸ்" காலணிகளின் சத்தம்...என்.சி.சி.மாணவர்கள்தான் நடைப் பயிற்சி செய்கிறார்கள் என்று நினைத்து கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்தேன்...

ஆங்கிலத்தில்" உள்ளே வரலாமா" என்றொரு குரல்...நானும் எழுதிக்கொண்டே திரும்பிக்கூட பார்க்காமல்..ஆம்" என்றேன் அதே ஆங்கிலத்தில். பார்த்தால் ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்ட்டாய், ஷெல்லி, சர்ச்சில் மேலும் பலரும் "கோட்- சூட்" அணிந்து கம்பீரமாக நின்றனர்..அவர்களை அமர வைத்து தேனீரும் ரொட்டியும் கொடுத்தேன்...

அவர்களின் நோக்கம் என்னை எப்படியாவது எழுதாமல் தடுப்பதுதான் என்று எனக்குத் தெரிந்தாலும்...தங்களின் வருகைக்கான காரணம் என்ன என்றேன்....

தம்பி தயவுசெய்து எழுதுவதை நிறுத்து என்றார்கள் ஒரே குரலில்....கெஞ்சினார்கள்....நான் விடுவதாக இல்லை..."எழுதுவது எனது பிறப்புரிமை..அதை எழுதியேதீருவேன்" என நானும் என் பங்குக்கு வாதடினேன்..கடைசியில் என்னை ஒருவழியாக சமாதானம் செய்து என் கைகளை கட்டிப் போட்டுவிட்டனர்...சரி என் போன்ற எழுத்தாளனுக்கு மொழி ஒரு தடையே இல்லை, கிரேக்க, லத்தீன் மொழிகளில் எழுதலாமா என தீவிரமாக யோசிக்கத்தொடங்கினேன்...மறுபடியும் என் அறைக் கதவு பலமாகத் தட்டப்படுகிறது.....

எழுந்தேன்.... என்னை உலுக்கி என்னடா 10 மணி வரைக்கும் தூங்குகிறாய் என்றான் நண்பன்.. ஓ....அதுவா.. இது என்று தூக்கம் கலைத்தேன்....

ஒரு முறை இதைக் கூட எழுதலாமா என யோசித்தேன்....ஆனாலும் எதாவது எழுத வேண்டுமே.... எதை எழுத...

"நீ எதுவுமே எழுத வேண்டாம்" எழுதாமல் இருந்தாலே தமிழ் வாழும் என்று நீங்கள் சொல்வது என் காதுகளுக்கு கேட்கிறது...

-எழுதியவர் - சிவபாரதி

Sunday, October 12, 2008

வெள்ளியும், விண்வெளி ஓட ஆட்டமும்.

திங்கள் முதல் வெள்ளி வரை ஆய்வகத்தில் அரிய பணிகள் பல முடித்துவிட்டு!!!! எப்போது வெள்ளி மாலை வரும் என்று என் நண்பர்கள் காத்திருப்பர், மாலை நாலரை மணியிலிருந்தே கைபேசி கதற ஆரம்பித்து விடும். தயாரா.. நான் தயார்.. நீங்கள் தயாரா.. சரி வந்துவிடுங்கள்.. இதற்குத்தனே ஒரு வாரமாய் காத்திருக்கிறேன் இதை விட வேறென்ன முக்கியமான வேலை... கிளம்புங்கள் உடனே என்று ஆர்பரித்து கிளம்பும் நண்பர்கள் கூட்டம். ஏன் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். மாலை ஆய்வக வேலையை முடித்தும் முடிக்காமலும் அவசரமாக இல்லம் வந்து ஆடுகள ஆடையை மாற்றி இனியன், கந்தன், வள்ளி (ஒரு முறை முதல் எழுத்தை மாற்றி வந்தன், கள்ளி என அழைத்துவிட்டேன்), வேலுடையான், அவரின் அண்ணன் விக்ன வினாயகன், கணபதி, மயோன், திருமலையான் மற்றும் பலரும் நாற்பது தேனி தெருவிலிருந்து மாலை சுமார் ஐந்தரை மணிக்கு சார்லஸ்டன் கல்லூரி கதவுள் மைதானம் நோக்கி பறந்து செல்வர். சில நாட்களில் பனையேரியும் வருவார்,

மகிழ்வுந்தே இதற்கென்றே உருவாக்கப் பட்டது போல் மிக மகிழ்ச்சியாய் சார்லஸ்டன் கல்கூன் சாலையில் பயணிக்கும் போது, வரும் காட்சிகளை விவரிக்க நான் ஒருவன் மட்டும் போதாது. வாரக் கடைசி என்பதால் சார்லஸ்டன் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் இளம் யுவதிகள் தட்பவெப்ப நிலைக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணிந்து செல்வதைக் கண்டு மனம் வருந்தி, நண்பன் அழ ஆரம்பித்து விடுவான்.. மணிரத்தினம் படதிதில் வருவது போல் ஒரே வார்த்தையில் "ஏன்" என்பது போல் பார்ப்பான், நானும் "இங்க அப்படித்தான்" என்பது போல் சொல்லி ஒரு வழியாய் தேற்றி கூட்டிச்செல்வோம். மற்ற மகிழ்வுந்திகளுக்கு நடுவில் நம்முடயதை "இணை நிறுத்தும்" போதே... என்னால் இங்கே வெகு நேரம் நிற்க முடியாது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று சொல்வது போல் இருக்கும் அது எங்களுக்கு.. மனதிற்குள்ளே ....நீயுமா....என்று கேட்டுக் கொண்டே ஒருவழியாக மகிழ்வுந்துலிருந்து இறங்கியதும் அவரவர்தம் விண்வெளி ஓடத்தை தோளிலே சுமந்து இறகுப்பந்தை அடிக்க, ஒரு சிறிய ஓட்டப்பயிற்சி செய்து கதவுள் மைதானத்தை அடைவோம். இல்லையெனில் ஆடுகளம் கிடைப்பது அரிதாகி விடுமே.

இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது என்பது நாம் தெரிந்ததே...நம் பக்கத்து நாட்டுக்காரனுக்கும் மைதானத்தை திறப்பவனுக்கும் வெள்ளி தோரும் சண்டை நடக்குமாம்.. மெதுவாக ஒருவனைக் கூப்பிட்டு என்ன சண்டை என்று கேட்டேன்... ஐயா... இவங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..காலையில ஆறறை மணிக்கே கதவ திறக்கச் சொல்றாங்க....இவங்க தொல்லை தாங்க முடியலயா..என்றார்..

ஆடுகளம் நம்மூர் அளவிற்கு தரமில்லை என்பதையெல்லாம் சகித்துகொண்டு, வீரனுக்கு மைதானம் முக்கியமில்லை, வெற்றிதான் என்றெண்ணிக் கொண்டு ஒருவழியாக ஆடுகளத்தை பிடித்துவிட்டால் ஆட்சியை பிடித்தது போல் மனம் மகிழும். எனக்கு இளகிய மனது, இந்த இறகுப் பந்து படப் போகும் பாட்டை நினைத்தால் கண்ணீர் வரும், ஆனால் என் செய்வது விளையாட்டு என்று வந்தபின் எதையும் இலகுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் ஊரில் ஐந்து நட்ச்சத்திர விடுதியில் கீத் சேதியுடன் பில்லியர்சும், மரப் புலியுடன் (Tiger wood) கால்ஃப் விளையாட்டும் விளையாடி அவர்களையெல்லாம் விரட்டி அடித்தவன் என்றெல்லாம் நானே என்னைப் பற்றி சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை....

விளையாட்டின் மூலம் நல்ல கருத்துகளை, பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம், இந்த ஆட்டத்தின் ஆரம்பம் எனக்கு பிடிக்கும் ஏனென்றால் தொடக்கமே "எல்லோரையும் காதல் செய்" என சொல்லியபடி முதல் பந்தை வீசுவோம்...ஆனால் பிறகு, ஒருவரை காதல் செய், இருவரை செய் என் சொல்லும்... இதில் எனக்கு உடன்படில்லை.... நான் கனியன் பூங்குன்றனாரின் பக்கம்...அனைவரும் உறவே, எனவே அனவரையும் அன்பு செய் என்பதே.....

போட்டி என்று வந்தபின் ஒருகுழுவிற்கு வெற்றியும், மற்றொன்றுக்கு தோல்வியும் என்பது உலக நியதி..ஆனால் நாங்கள் விளையாடும் போட்டியில் வெற்றி தோல்வியை கணக்கில் வைப்பதில்லை..இதன் மூலம் விட்டுக்கொடுத்தலும், நட்பும் மட்டுமே விளைகிறது... போட்டி என்பது ஆரோக்கியமான போட்டியாக இருக்கவேண்டும், அதே சமயம் ஆரோகியத்தை வளர்ப்பதாகவும், காப்பதுவுமாக இருக்க வேண்டும் என நினைத்தே நாங்கள் இதை விளையாடுகின்றோம்..

பொதுவாக விளையட்டு தொடங்கும் முன், வீரர்கள் விளையாடுவதற்கேற்ப தங்கள் உடலை " மேலே மித சூடு" செய்து தயார்ப்படுதிக் கொள்வது வழக்கம், நாங்களும் அவ்வாறு செய்வதுண்டு, சில சமயம் ஆட்டம் தொடங்கியபின், ஒரு அணியினர் சரியாக விளையாட வில்லையெனில்,அவர்கள் இது "மெலே சூடு" என்று சமாளித்துவிடுவர், விளையாட்டுதானே என் கவனமில்லாமலிருந்தால், சில சமயம் புள்ளிகளை மாற்றிக் கூறி குழப்பிவிடுவர், உதாரணமாக எட்டு/பத்து என்பதை மாற்றி, குறைந்த புள்ளியை நமதாக்கி அதிக புள்ளிகளை அவர்கள் எடுத்தது போல் தோற்றத்தை ஏற்படுத்துவர்....எனவே விளையாட்டுதானே என விளையாட்டுத்தனமாக இருந்து ஏமாந்து விடக் கூடாது.... என்ன செய்வது உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர்...வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் பாடலான ...ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே....பாடலை அடிக்கடி பாடி நினைவில் வைதுக்கொள்ளுங்கள்...

மாயோனுக்கு இந்த ஆட்டம் மிகவும் பிடிக்கும், ஒருவேளை "எல்லொரையும் காதல் செய்" என்று துவங்குவதாலோ என்னவோ...

ஆரம்பத்தில் கன ரக விண்வெளி ஓடத்தில் விளையாட கடினமாக இருந்தது,பின் மயோன் இலகுரகத்தின் சிறப்புகளைக் கூறினார், மேலும் மட்டமான மட்டையால் தான் நாங்கலெல்லாம் சரியாக ஆடவில்லை என நினைத்து மயோனிடம் நல்ல மட்டை வாங்கித்தருமாரு கேட்டோம், அவரும் கோட்டின் மேல் (on line) வர்த்தகம் மூலமாக இரண்டயிரம் ரூபாய் அளவிற்கு, நம்மூர் மதிப்ப்பில்....வாங்கிக் கொடுத்தார்..அதிலிருந்து சுமாராக ஆடிக்கொண்டிருந்த நான் மோசமாக ஆட ஆரம்பித்துவிட்டேன்....இதிலுருந்து நான் கற்றது உள்ளதும் போச்சுடா.... கண்ணா என்ற பழமொழி....பிறகு காலணிதான் சரியில்லை, அதனால்தான் சரியாக விளையாடவில்லை என்றார்..... அதுவும் சரிபட்டுவரவில்லை என்றால் ஆடுகளத்தை மாற்றலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

நாம் நன்றாக விளையட வேண்டுமென்பதற்காக நமக்கெல்லாம் விண் ஓடம் வாங்கிக் கொடுத்தாரே என்று அவரிடம் உடனே, மூன்று மாதம் கழித்து, காசோலையை கொடுத்தேன்..அவர் வாங்கவில்லயே...நானும் நட்பு வேறு, பணம் வேறு என்று அவரிடம் வாதாடினேன்...அந்த கசோலையை கடைசிவரை வாங்கவில்லை அவர், இந்த காலத்திலும் இப்படி ஒருவரா என எண்ணி மகிழ்ந்தேன்.... சரியென்று அதற்கு அடுத்த நாள், சிற்றுண்டி சலையில் இருக்கும் தனியங்கி இயந்திரத்தில் பணமாக எடுதுக் கொடுத்ததும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்....

நம் இனியன் பேருக்கு ஏற்றபடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதிலேயே வேலையாயிருப்பார், இனியாளிடம் விளையடி விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு, பக்கத்தில் நடக்கும் பெண்கள் கைப்பந்து போட்டியை பார்க்க கிளம்பிவிடுவார். இளவரசரும் இவருக்குத்துணையாக கிளம்பிவிடுவார்....கேட்டால்..ஆளை பார்க்கவில்லை.. ஆட்டத்தைத்தான் பார்க்கின்றேன் என்பார்....

எங்கள் குழுவில் இருக்கும், வேலுடையானின் ஆர்வம் அளப்பிடதற்கரியது,ஒரு நாள் காலில் சிறிய காயம் பட்டுவிட்டது,ஆனால் அதன் வலியை காலணியோடு இருகக் கட்டிப் போட்டுவிட்டு, ஓடத்தை தோளில் சுமந்து நடந்து சென்று அன்று ஆடிய ஆட்டம், அப்பப்பா... இன்றெல்லாம் பார்த்துகொண்டே இருக்கலாம்..இது அவனின் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்...

கந்தனும் வள்ளியும் ஒரே அணியில் இருந்தாலும் சரி அல்லது அவர்கள் தனியே இருந்தாலும் சரி, அவர்களை வெல்லவே முடியது.

ஆட்டத்தில் இறங்கிவிட்டால், உலகமே தெரியாது, சில சமயம் கைபேசி ஒலிக்கும், இடி இடிக்கும்,மழை பொழியும், நிலம் அதிரும் அப்போதுகூட ஆட்டம் தொடரும். ஒரு வழியாய் மைதானத்துக்காரன் கம்பை பிடுங்குவான்...அப்போதுதான் லேசாக நேரத்தை பார்ப்போம்..ஏதோ பூமிப் பந்தையே வெற்றிகொண்டது போல் மிடுக்கு நடைபோட்டு வேளியே மகிழ்வுந்தை நோக்கி வரும்வோம்...

சாலையில் சரியாக சிவப்பு விளக்கு எரிந்தவுடன் எங்களையெல்லாம் கை பிடித்து அழைதுச்செல்வார் இனியன், சாலையின் பக்கவட்டு வாகனங்கள் நாம் தான் தவறாக வந்து விட்டோமா என எங்களைக் கண்டு குழம்பிப்போய் நின்று வழிவிடும், மறுபடியும் சாலையில் வரும் போது கண்ட காட்சிகள்...அதே கண்ணீர், அதே ஆறுதல்..சிலவற்றை எத்தனை முறை பார்த்தாலும், முறைத்தாலும் சலிப்பதில்லை.

வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வந்து, நீராடி, கணவன்மார்கள் கணினி முன் மீண்டும் அரிய பணி ஆற்றுவது போல், காய்கறி, குறிப்பாக வெஙகாயம் நறுக்க,பயந்து, பாவலா செய்து கொண்டு அமர்த்திருப்பர், மனைவியிடம் ஆராய்ச்சி பேப்பர் படிக்கிறேன் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் "கோட்டின் மேல்" மூலம் வரும் நாளிதழை பதினெட்டாவது முறை படித்துகொண்டிருப்பர்.. அடுத்து வெள்ளி உடனே வர வேண்டுமென்றெண்ணியபடியே

ஏறத்தாழ ஒன்றறை ஆண்டுகளாக ஆடியும், எதோ இன்றுதான் புதிதாய் விளையடுவதை போன்றே எஙகளுக்கு வெள்ளியன்று மாலையில் கிடைக்கும் ஆர்வதிற்க்காகவே பல வெள்ளிகள் தோன்ற வேண்டுகிறேன்..

விண்வெளி ஓட ஆட்டம் வெள்ளியில் மட்டும்தானா...

சிவ பாரதி...

பனை நிலத்தில் ஒரு பழமொழி மாலை

நேற்று மாலை ஒரு பிறந்த நாள் விழாவில் கூடியிருந்தோம். உணவுக்குப் பின் எங்கள் பேச்சு பழமொழிகளுக்குச் சென்றது. ஒரு இருபது பேரும் மாறி மாறி எடுத்து விட அணியணியாய் வந்தன பழமொழிகள். ஒரு இருநூறு வந்திருக்கும். எல்லாத்தையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். யாரும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை. நிறைய பேர் கேள்விப் படாதவற்றை மட்டும் இங்கே சொல்லப் போகிறோம்.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித்தைக்கு ஒவ்வொரு ஆளிருப்பார். திருவிளையாடலில் ஒரு வசனம் வருமே, வில்லுக்கு - விஜயன், வீணைக்கு - நாரதன், சொல்லுக்கு - அகத்தியன், அழகுக்கு - முருகன் அப்படி இப்படி என்று. அதுபோல எங்கள் ஊரில் பழமொழிக்கென்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் வெங்கடேச பாபா எனும் வெண்பா. மனிதரோடு பேசிக் கொண்டிருந்தால் போதும், மூச்சுக்கு முந்நூறு பழமொழிகள் வந்து விழும். இந்த இடுகையில் இருக்கும் பழமொழிகளில் பல அவருடையவை. இவற்றைப் போல இன்னும் பல இடுகைகளுக்கான சரக்கு அவரிடம் இருக்கிறது. வெண்பாவின் நினைவிடுக்குகளுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பழமொழிகளையும் எடுத்து ரசிக்க வேண்டுமென்றால் அவரோடு உணர்வுபூர்வமாகப் பேசிப் பாருங்கள்! இந்த இடுகையை அவருடைய ஆவர்த்தனம் என்றுதான் சொல்லவேண்டும். கூட இருந்த மக்களெல்லாம், ஒவ்வொரு பழமொழியைச் சொல்லிவிட்டு ஓரமாக நிற்கும் பக்க வாத்தியக்காரர்கள் போல!

உங்களுக்குத் தெரிந்தவற்றையும் சொல்லலாம்:

ஆழாக்கு மிளகு குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரசம் கேட்டாளாம்.

முக்கி முக்கிக் குத்துனவளுக்கு மூனாம். எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டாம்.

பாடிப் பாடிக் குத்துனாலும் பதறு நெல்லாகாது.

நாட்டுக்கு நல்ல தொரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லு சுமக்குற வேலதான்.

தான் போக வழியைக் காணோம், மூஞ்சுறு விளக்கமாத்தையும் காவிக்கிட்டுப் போச்சாம்.

அடியேன்றதுக்குப் பொண்டாட்டி இல்லையாம், புள்ளைக்குப் பேர் வைக்கப் போனானாம்.

ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

ஆனா அச்சுல வாரு, ஆவலைன்னா அண்டாவுல வாரு.

எள்ளுருண்டை வேண்டாம்னுட்டு உரலுக்குள்ள தலையை விட்டானாம்.

குலுக்கி மொளகாய் அறச்சா; கொதிக்காம எறக்கி வச்சா.

காலைப் புடிக்கிற கணக்கப்புள்ளைக்கு மாசம் பத்து ரூவா.

கறக்குறது காப்படி; உதைக்கிறது பல்லுப் போக.

(நடுவுல ஒருத்தரு வந்து பாதிப் பாதி பழமொழியா சொல்லிட்டுப் போனாரு. ஏன்னா மீதிப் பாதியைக் கூட்டத்துல சொல்ல முடியாதுன்னுட்டாரு!)

கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில வையி.

புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளிக் குதிச்சானாம்.

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.

நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரமில்லை.

நாயை எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்குமாம்.

மார்காழிக்குப் பின்னாடி மழையும் கிடையாது; மச்சானை மிஞ்சின உறவும் கிடையாது.

சுண்டைக்கா கால்பணம்; சொமை கூலி முக்காப்பணம்.

கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானாகணும்.

நடுநடுவுல தெலுங்குலயும் பழமொழிகள் வந்து விழுந்தன.
ஆசபாசம் அக்கட அன்னவஸ்த்ரம் இக்கட
பேரு பெத்த பேரு தாக நீலு லேது

பழமொழிகள் நம் முன்னோர்களின் அனுபவச் சூத்திரங்கள். எள்ளலும், சுவையும், சொற்சுருக்கமும் இவற்றின் தனிச் சிறப்புகள். பழமொழிகளைத் தொகுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் ஏட்டளவில் இல்லாமல் அன்றாட வாழ்வில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இவற்றை நெடிது வாழச் செய்யலாம்.

இவ்விடுகையின் முதன்மைப் பழமொழியாளர்: வெண்பா

கோரஸ்: பனைநிலத்து மக்கள் (எல்லாப் பேரையும் சொல்ல முடியலீங்கோ, மன்ச்சுக்கங்கோ!)

Saturday, October 11, 2008

சார்ல்ஸ்டனில் வானசாகசம்

சென்றமுறை ஊருக்கு (அதாங்க, இந்தியா) போகுமுன், 2 ஆம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் மகனிடம் என்ன வேண்டுமென்று கேட்டதற்கு, ஆகாய விமானம் வேண்டுமென்றான். சரிதான் என்று நல்ல அழகான விமானம் (விளையாட்டு பொம்மை) ஒன்று வாங்கிச் சென்றேன். அங்கு சென்றவுடன் முதல் வேலையாக அதை அவனிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு அவன் "ஓ"வென்று ஒரே அழுகை. என்ன ஏது என்று கேட்டதற்கு, அவன் என்னிடம் நிலத்தில் நிற்கும் விமானம் கேட்கவில்லையாம். பறக்கும் விமானம் கேட்டானாம். எனக்கு எப்படி அவனை சமாளிப்பதென்றே தெரியவில்லை. பிறகு அண்ணி அவனை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்ன செய்வது. எப்போதும் கீழே நிற்கும் விமானங்களை விட பறக்கும் விமானங்களின் மேல்தான் எல்லாருக்கும் ஒரு ஈர்ப்பு. அதுவும் வான சாகசம் செய்யும் விமானங்களைப் பார்த்தால், கேட்கவே வேண்டாம், அவ்வளவு தான். சார்ஸ்டனில் வான சாகசம் நடக்கப் போகிறது இன்னும் சில நாட்களில் என்று இனியன் என்னிடம் சொன்னவுடன் எனக்கு மிகவும் ஆனந்தம். இதுவரைப் பார்த்ததில்லை. தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்ப்பதென்றால் சும்மாவா?

இரவு தூக்கம் வர மறுத்தது. அப்படியே வந்தாலும், கனவுகளில் விமானங்களாக வந்தது. ஒருவழியாக அந்த நாளும் வந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வர இருக்கும் என்றும், 9 மணிக்கு முன்னால் சென்றால் மட்டுமே கூட்டத்தில் சிக்கி வழியில் மாட்டிகொள்ளாமல், சாகசங்களை முழுமையாக பார்க்கமுடியும் என்றும் இனியன் முதலிலேயே சொல்லிவிட்டார். என் 3 வயது பையனையும், ஊரிலிருந்து எங்களைப் பார்க்க வந்துள்ள அப்பா அம்மாவையும் அழைத்துக் கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் கட்டுசோறு கட்டிக்கொண்டு புறப்பட்டோம். வேறென்ன அங்கு விற்கும் காய்ந்த பிஸாவையும், ஹாட் டாக்கையுமா சாப்பிட முடியும்?

பாதி வழிவரை போக்குவரத்து நன்றாகத்தான் இருந்தது. சார்ல்ஸ்டன் இராணுவ விமானதளத்தை (இதப் பத்தி நம்ம கந்தன் விவரமா எழுதியிருக்காரு) நெருங்கும் முன் போக்குவரத்து நெரிசல். அம்மாடி? அம்புட்டு கூட்டம். போற வழியிலேயே இவ்வளவு கூட்டம் என்றால், அங்கு?.... அப்படி இப்படி என்று தளத்தை நெருங்கினோம். நுழைவாயிலில் இராணுவ வீரர்கள் எல்லா கார்களையும் சோதனை செய்து உள்ளே விட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது புரிந்தது போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.

நடுவில் கைதொலைபேசி கூப்பிட்டது. “எங்கு இருக்கிறீர்கள்?” என்று இனியன் கேட்கிறார். இன்னும் பிற நண்பர்களும் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதோ வந்துகொண்டே இருக்குறோம் என்று சொல்லிக்கொண்டே மெதுவாக நெரிசலில் ஊர்ந்து காரை நிறுத்துவதற்குள் வான சாகசங்களை ஆரம்பித்துவிட்டார்கள். 'ஆ' வென்று அப்போது பிளந்த வாய் தான். கடைசிவரை மூடவேயில்லை. அவ்வளவு அருமை. நான் மட்டுமல்ல. என் பையனும் தான். எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு பதிலே காணோம். திறந்த வாய் அங்கும் மூடவில்லை.

அப்படி இப்படி என்று சரியான இடம் பார்த்து கொண்டுவந்த மடக்கு நாற்காலிகளை பிரித்து பெற்றோர்களும், தள்ளுவண்டியில் மகனும் உட்கார, நான் நின்றுகொண்டே பார்க்க ஆரம்பித்தேன். கூட்டமோ கூட்டம். அவ்வளவு கூட்டம். வான சாகசம் பார்க்க இவ்வளவு பேரா? குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள், நிருபர்கள் என மக்கள் கூட்டம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தவில்லை யாரும். விமான ஓடுபாதைக்கு அருகில் போகவே முடியவில்லை. அவ்வளவு கூட்டம். பொதுமக்கள் பார்வைக்கென இரண்டாம் உலகப்போர் முதல் தற்போது உபயோகத்தில் உள்ள விமானங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே சிறிய ரக விமானங்களையே நிற்கவைக்கலாம் போல் பெரிதான “டிரீம் லைனர்” என்னும் மிகப்பெரிய விமானம் எல்லோரையும் கவர்ந்தது.. விமான சாகசங்கள் இல்லாதபோது மக்கள் அவற்றின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

இச்சாகசங்கள் பற்றி விளக்கிச் சொல்வது அவ்வளவு சுலபமில்லை. பறவைகள் தோற்றது போங்கள். நான்கு ஐந்து விமானங்கள் அணிவகுத்து சாகசங்கள், தனியாக சாகசங்கள், ஒன்றை ஒன்று இடிப்பது போல் சென்று அனைவரையும் 'ஆ' போட வைத்த சாகசங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை நான் சொல்வதை விட, படங்களில் பாருங்கள். உங்களுக்கே தெரியும். தன்டர் பேர்ட், புளு ஏஞ்சல் f15, f16 என ஏதோ A B C D 1 2 3 சொல்வது போல ஒவ்வொரு விமானத்தைப் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வேறு. நமக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை. கட்டுசோறும், கடையில் வாங்கிய குளிர் பானமும் களைப்பு வராமல் பார்த்துக்கொண்டன.

இடையில் நண்பர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அவ்வளவு கூட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு கடினம் தான். இனியன், இனியாள், கந்தன், வள்ளி மற்றும் வேலுடையான், இளமை அரசன் ஆகியோர் துணைவியருடன் வந்து சேர்ந்தனர். நண்பர்களுடன் கதை பேசிக்கொண்டே வேடிக்கை பார்த்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. இது தான் கடைசி நிகழ்ச்சி என்று அறிவிப்பாளர் அறிவித்ததும் தான் மாலையாகிவிட்டதை உணர்ந்தேன். வீடு திரும்பிய பிறகும் சில நாட்களுக்கு மனது அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என நினைக்கும் போது மனதுக்கு மகிழ்சியாக இருக்கிறது.






























- மாயோன் ராதை

Friday, October 10, 2008

மற்றுமொரு மழை நாள்

இன்னைக்குச் சாயங்காலம் கன மழை வரும்னு அறிவிப்பு வந்ததால, வேகமா வெளி வேலையெல்லாம் முடிச்சுட்டு, வீட்டுக்குள்ள வந்து அடங்கிட்டோம். சொன்ன மாதிரியே, சிலு சிலுன்னு ஆரம்பிச்ச தூறல், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் 'சோ'ன்னு கொட்ட ஆரம்பிச்சது. சன்னலோரமா நின்னு, என் பிள்ளை மழையை வேடிக்கைப் பார்த்திட்டிருந்தார். நானும் கையில சூடாக பானத்தை(தேநீர்தாங்க) எடுத்துட்டு வந்து, ஒன்றாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தோம்.

வீடு முழுக்க நிசப்தமாயிருந்ததால், மழை ஒரு இசையருவியாய் கேட்டது. பாதுகாப்பான வட்டத்திற்குள் வாழ்கிறவரை, எதுவுமே அழகு, ஆனந்தம். எங்கள் வீட்டின் கூரையிலிருந்து வழிந்து கொண்டிருந்த மழையில் மனம் கரைந்து கொண்டிருந்தது. சில்லென்று முகத்தில் படர்ந்த காற்றோ, இயற்கையின் கருணையை இன்னுமொரு முறை நினைவு படுத்தியது.

மழையைப் பார்த்துக்கொண்டே, மனம் பயணித்துக் கொண்டிருந்தது. இயற்கையின் துவக்கம் எது? ஆரம்பம், முடிவு இல்லாததுதான் இயற்கையா? எதுவாக இருப்பினும், இயற்கையே ஆழ் மனதின் தேடல், ஆறுதல், குதூகலம், மகிழ்ச்சி, எல்லாமும்.

மழை வேகமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. இயற்கையோடு இணைந்த எதுவுமே அழகுதான். தோல்வியெனத் தெரிந்தும், இயற்கையை விஞ்சத் துடிக்கும் மனது. இந்த விசயத்தில் மட்டும் ஏன் மனம் வேறாக, புத்தி வேறாகச் செயல்படுகிறது?

மழை நாளில் கப்பல் விட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரில் தாவிக் குதித்து, முகத்தில் சிலீரென மழைநீர் பட்டவுடன் மனதில் பரவசம் அடைந்த அக்குழந்தைப் பருவ நாட்கள் இணையில்லாதது. மூழ்காதக் கப்பல்களின் சொந்தக்காரர்களாய் பெருமையோடு, அந்நாட்களில் நண்பர் பட்டாளங்களுடன் சென்று, மழை நின்றபின், சிறு மரக்கிளைகளைப் பிடித்து உலுக்கி, தலை மேல் விழுந்தத் துளிகளைத் தடவி உள்ளம் ஆர்ப்பரித்திருக்கிறது. ஈரமான குடையின் ஒவ்வொரு முனையிலிருந்தும் சொட்டும் மழைத்துளியை உள்ளங் கையிலேந்தி மனது ரசித்திருக்கிறது.

நினைவலைகளுக்கு நேரம் போதுவதேயில்லை. ஒவ்வொரு மழை நாளிலும், தேநீருடன் குழந்தையோடு, குழந்தையாய் என் நினைவுகள் தொடர்கிறது.

-எழுதியவர் பனையோலை.

யோகா- ஓர் அறிவியல் பார்வை

தமிழகத்தில் பிறந்து, இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (DRDO) உடற்செயலியல் (Physiology) துறையில் ஆராய்ச்சி செய்துவரும் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான முனைவர் செல்வமூர்த்தி அவர்கள் சிறந்த பாடகரும் கூட.

இவர் இ.பா.ஆ.மே.க.தின் முன்னாள் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த மேதகு முனைவர் அப்துல் கலாம் அவர்களின் நெருங்கிய நண்பர். திரு. கலாம் அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது இவரை அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வாராம்.

முனைவர் செல்வமூர்த்தி அவர்கள், தனது ஆய்வு முடிவுகளைப் பற்றி உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வந்திருந்தார். நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் போல் அல்லாமல் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று துடியாய் துடித்து கொண்டிருக்கும் எங்கள் பனைநிலத் தமிழ்ச் சங்கத் தலைவர், முனைவர் செல்வமூர்த்தி அவர்களை அழைத்து, உங்களின் ஆராய்ச்சியை பற்றி நம் மக்களுக்கு தமிழில் விளக்க முடியுமா என்று வினவ, அவரும் முகமலர்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

இவர் இ.பா.ஆ. மே. க தில் பணிபுரிவதால் இந்தியப் படைவீரர்களுக்கு
யோகா பயிற்சி கொடுத்து, அதனால் ஏற்பட்ட பலன்களை ஆய்வு செய்கிறார். ஆய்வு முடிவுகளை லேன்செட்(LANCET) என்னும் ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளார். யோகாவினால் ஏற்படும் பயன்களை ஏடுகளின் மூலம் அறிந்திருக்கிறோம். அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து ஆய்வு இதழில் வெளியுட்டுள்ள இவரது பணி முதன்மையானதாகும். இதை நான் விளக்கு வதைவிட, இவர் பனைநிலத்தில் ஆற்றிய எளிய தமிழ் உரையில் யோகா என்றால் என்ன, அதன் வகைகள், பலன் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பற்றிய முழு விவரமும் கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து அறிந்து கொள்ளவும்.

கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் இவர், எப்பொழுதும் புன்னகையுடனும், சுறுசுறுப்புடனும், இளமைப் பொலிவுடனும் காணப்படுகிறார். இவர் எங்களுக்கும் முப்பது நிமிட எளிய யோகா பயிற்சியைக் கற்றுத் தந்தார்.

பிறகு பல நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்தினார். இறுதியாக எங்கள் தலைவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) விழா ஒன்றில் இவரும், மேதகு கலாம் அவர்களும் இணைந்து பாடிய அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.....என்ற ஔவையாரின் பாடலைப் பாடி இனிதே நிறைவு செய்தார். பாடலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: யோகா மெய்யறிவின் மூலம் அறியப்பட்டது, அதற்கு அறிவியல் விளக்கம் மூலம் தெளிவுபடுத்தினால் தான் உண்மை என்று இல்லை, இருந்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே உண்மை என்று நம்புபவர்க்கு அய்யா மிகவும் அருமையாக நிரூபித்துள்ளார்கள்.
நாமும் யோகம் பயின்று எப்பொழுதும் புன்னகையுடனும், சுறுசுறுப்புடனும், இளமைப் பொலிவுடனும் இருப்போம்.
வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகள்.!

எழுதியவர்கள் - இன்பம் & இனியாழ்

தமிழ் வாழ்கிறதா அல்லது வீழ்கிறதா?

என்ன, இது ஏதோ பட்டிமன்றத் தலைப்பு மாதிரி இருக்கா? எங்கள் ஊரில் சில மாதங்களுக்கு முன்பு தமிழிலேயே நடந்த அறிவியல் கருத்தரங்கம் பற்றி நண்பர் கந்தன் அண்மையில் ஒரு பதிவு போட்டிருந்தார். தமிழின் இன்றைய நிலைப்பாடுகள்குறித்து சூடான விவாதங்கள் எழுந்தது.

தமிழில் பேச, எழுத, ஏன் 'நான் ஒரு தமிழன்' என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும் நிலையில், நம் கண்ணெதிராகவே தமிழ் அழிந்துவிடும் என முடித்திருந்தார். விவாதங்கள்அந்தத் தலைப்பைவிட்டு வேறு திசையில் செல்ல ஆரம்பித்ததால், அப்போதைக்கு அந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டியதாயிற்று.

அதற்குப்பின் மனதில் ஒரு வலி, வேதனை. உண்மையாகவே, என் பிள்ளையும், அவனைச் சுற்றியுள்ள சின்னஞ் சிறு நண்பர் கூட்டமும் தலைதூக்கும் தருணங்களில்மொழியிழந்த, முகவரியிழந்த சமூகத்தினராக இருப்பார்களா? நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தகவல் பரிமாற்றங்கள் நடக்கும் இந்த கால கட்டத்தில், நம் மொழி அழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து கைக்கொட்டிச் சிரிக்கும் வேடிக்கை மனிதர்களா நாம்? நம்மில் பெரும்பாலானோர், பள்ளி வயது நாட்களை தமிழ்த்தாய் வாழ்த்துடனேயேதுவங்கியிருப்போம். அதில் தாய் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? தமிழை உண்மையாகவே தாயென நினைக்கிறோமா?

நீ என்ன சாதித்துவிட்டாய் அல்லது உனக்கென்ன தகுதி இருக்கிறது, பதிவு போட வந்து விட்டாய் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. விவாதிக்க வந்தவர்களை தனி மனிதவிமர்சனங்களுக்கு உட்படுத்தும் சிறிய குடுவைக்குள் இருந்து சற்று மேலே வாருங்கள்.

சர்வேதேச சந்தையில் நம் சரக்கை விற்க ஆங்கில அறிவு அவசியம், புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு சமூக மொழியாக ஆங்கிலம் அவசியம் என்பது பற்றி நிறையப்பேசியாகிவிட்டது.

எழுத்துரிமை தனி மனித சொத்தாகியுள்ள இந்த நல்ல நேரத்தில், மேலேயுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொரு தமிழுணர்வாளரின் பதில் என்ன? உங்கள் கருத்துக்கள்வரவேற்கப்படுகின்றன.

எழுதியவர் - பனையோலை.

Wednesday, October 8, 2008

சார்லஸ்டன் பதிவர்களின் அமளி, துமளி ??!!

தலைப்ப பார்த்துட்டு எதோ, சண்டைன்னு நெனைக்க வேணாம். நம்ம பனையேறி அண்ணன் இந்த வார நட்சத்திரம்நாமதான்னு சொன்னாலும் சொன்னாரு, என்ன வேகமா மக்கள் எழுதறாங்க தெரியுமா? நம்ம பாட்டு டீச்சர், பதிவுபோட்டு மெரள வச்சிட்டாங்க. பனையேறி அண்ணன கேட்கவே வேணாம்!எங்க வீட்டுக்காரர் எனக்கு போன் பண்ணி, இன்னுமா எழுதறன்னு நக்கல் வேற விட்டாரு. எழுதலாம்னு பொட்டியத்தெறந்தா, மாயோன் சுட்டு வச்ச படத்த வேக வேகமா வலையேற்றம் செஞ்சி தன் பங்குக்கு பட்டய கெளப்பிட்டாரு.

சரி நம்ம நெலம, எடுபடாது போலயிருக்குன்னு, யாழினிக்கு போன் செஞ்சேன். அவங்க என்னடான்னா இன்றையபங்கு சந்தை நிலவரத்த எழுதப்போறதாகக் கேள்விப்பட்டேன். பங்கு சந்தைச் சரிவை விட வேகமா இருந்தாங்க.

இதெல்லாம் நமக்கு சரிப்படாது, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஒதுங்கலாம்னு பார்த்தா அவ்வளவு சுலபத்திலமுடியாது போலிருக்கு. ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் மன்னர் வேடத்தில் நடித்திருப்பார். எதிரி நாட்டு அரசன் அந்தநாட்டின் மீது படையெடுத்து வருவதாக புறா மூலம் ஓலை அனுப்பிக்கொண்டே இருப்பார். ஆனா இவரு எதைப்பத்தியும் கவலைப்படாம புறாவப் புடிச்சி வறுத்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். கடைசியா, பார்த்தா எதிரி நாட்டுஅரசன் அரண்மனை வாசல்ல படையோட நிப்பார். என்ன செய்யன்னு தெரியாத இந்த முட்டாள் அரசன், எனக்கு ஒரேகாய்ச்சல்னு சொல்லி அந்த ஆளைத் திருப்பி அனுப்புன்னு அமைச்சரப் பார்த்துக் கெஞ்சுவார்.

மக்களே, என் நெலமையும் கிட்டதட்ட அதே மாதிரிதான். ஏதாவது பெயர் தெரியாத வைரஸ் இருந்தா சொல்லுங்க,எனக்கு உதவியாக இருக்கும். என்னடா இது, சார்லஸ்டனுக்கு வந்த சோதனை? என் பதிவிற்கு பதில் போட ஒருவரும்இல்லையா என பாலைய்யா குரலில் நீங்கள் சொல்வது கேட்கிறது. நம்ம குருசாமி இன்பமும், என் வீட்டுக்காரரும்சேர்ந்து, பலமா யோசிக்கிறதா ஆத்தக் கடந்து செய்தி வேகமா வந்தது.

அடுத்த போன் எங்க வீட்டுக்காரரிடமிருந்து வருவதற்குள் நான் என் தலைப்புக்குள்(மின்னி மின்னி ) போகிறேன்.அதயும் படிங்க.

-பனையோலை.


மின்னி மின்னி விண்மீனே….

மின்னி மின்னி விண்மீனே,

உன்னைக் கண்டு வியந்தேனே...

சார்லஸ்டன் பொது நூலகத்தின் வாயிலருகேயுள்ள அரங்கைக் கடந்து செல்லும் பிற மொழிப் பிரிவினரையும் நின்றுகேட்க வைக்கும் மனதை வருடும் பாடல் இது. தென்றலாய் நம் காதுகளைத் தழுவிய மெல்லிய இசைக்குயில்கள்வேறு யாருமல்ல, எங்கள் பனை நிலத் தமிழ்ப் பள்ளிக்குழந்தைகள்தான். இவர்களைப் பற்றி அனைவரும் அறியவேஇப்பதிவு.

புலம் பெயர் நாடுகளில் வளரும் குழந்தைகளுக்கு சமூக மொழியாக ஆங்கிலம் இருப்பதால், தமிழைப் பேச,எழுதக் கற்றுக் கொடுப்பது, ஒவ்வொரு பெற்றோரின் மிக முக்கியமான கடைமைகளுள் ஒன்றாகும். மொழியை இழந்தசமூகம், ஒரு அழிந்த இனமாகிவிடுவதால், அத்தகைய நிலை நம் அடுத்த தலைமுறைக்கு நேராமல் காக்கதமிழ்ப்பள்ளிகள் இங்கு மிக மிக அவசியமான ஒன்று.

இவ்வாறான பல உயரிய நோக்கங்களுடன் சென்ற வருட ஆரம்பத்தில் துவங்கப்பட்ட பள்ளிதான் எங்கள் பனைநிலத் தமிழ்ப் பள்ளி. எங்களுக்கும் ஆரம்பத்தில் குழந்தைகளின் தமிழார்வம் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தது.ஆனால் அவர்களின் ஆர்வத்திற்கும், கேள்விகளுக்கும் ஈடுகொடுக்க தற்போது பெற்றோர்கள் நிறைய வீட்டுப்பாடங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

நம்மூர் பள்ளிகளைப் போலல்லாமல், குறைந்த அளவே மாணவர்கள் இருப்பதால், பல வயதுக் குழந்தைகள்அடங்கிய ஒரே வகுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றரை மணி நேரத் தமிழ்வகுப்பும், அரைமணி நேரத் தமிழ் பாடல் வகுப்பும் நடைபெறுகிறது. பெற்றோர்களே, தன்னார்வல ஆசிரியர்களாகி வகுப்புகள்நடத்திவருகிறோம். ஓய்விற்காக, இங்குள்ள தனது பேரக்குழந்தைகளுடன் நாட்களைச் செலவிட வந்துள்ள திரு.சண்முகராஜன், அய்யா அவர்கள், தானும் முன்வந்து பாடங்கள் சொல்லிக் கொடுத்துவருகிறார்.

எங்கள் கோடை விழா மற்றும் பொங்கல் விழாக்களில் இப்பள்ளிக் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் ஒரு முக்கியஅங்கமாகும். இக்குழந்தைகளின் மழலைத் தமிழ் கேட்போரின் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகிறது. இதன்அடுத்தக் கட்டமாக, கடந்த இருவருடங்களாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டு நிகழ்ச்சிகளில்பங்கேற்று வருகின்றனர். சென்ற வருட விழாவில் பல பரிசுகளைப் பெற்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பல்வேறு ஊடகங்கள் வாயிலாக இவர்கள் தமிழ் பயின்று எங்களை மகிழ்வித்து வருகின்றனர். தஞ்சைத் தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து, தேர்வெழுதி சான்றிதழ் பெற வைப்பது எங்கள் தமிழ்ப் பள்ளியின்எதிர்காலத் திட்டமாகும்.

இவர்களுக்காகப் பெற்றோர்களும், நிறைய ஆங்கிலப் பாடல்கள் மற்றும் புத்தகங்களைத் தமிழ்படுத்தி வருகிறோம்.

உலகின் மேலே உயர்வானில்

வைரம் போலே மின்னுகிறாய்

மின்னி மின்னி...

டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலின் தமிழாக்கமான இந்தப்பாடலை, தங்கள் சிறிய குரல்களைமெதுவாக இழைத்து பாடிக்கொண்டே இவர்கள் இப்பள்ளியில் பயணிக்கிறார்கள்.

எழுதியவர் - பனையோலை.