Sunday, October 12, 2008

பனை நிலத்தில் ஒரு பழமொழி மாலை

நேற்று மாலை ஒரு பிறந்த நாள் விழாவில் கூடியிருந்தோம். உணவுக்குப் பின் எங்கள் பேச்சு பழமொழிகளுக்குச் சென்றது. ஒரு இருபது பேரும் மாறி மாறி எடுத்து விட அணியணியாய் வந்தன பழமொழிகள். ஒரு இருநூறு வந்திருக்கும். எல்லாத்தையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். யாரும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை. நிறைய பேர் கேள்விப் படாதவற்றை மட்டும் இங்கே சொல்லப் போகிறோம்.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித்தைக்கு ஒவ்வொரு ஆளிருப்பார். திருவிளையாடலில் ஒரு வசனம் வருமே, வில்லுக்கு - விஜயன், வீணைக்கு - நாரதன், சொல்லுக்கு - அகத்தியன், அழகுக்கு - முருகன் அப்படி இப்படி என்று. அதுபோல எங்கள் ஊரில் பழமொழிக்கென்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் வெங்கடேச பாபா எனும் வெண்பா. மனிதரோடு பேசிக் கொண்டிருந்தால் போதும், மூச்சுக்கு முந்நூறு பழமொழிகள் வந்து விழும். இந்த இடுகையில் இருக்கும் பழமொழிகளில் பல அவருடையவை. இவற்றைப் போல இன்னும் பல இடுகைகளுக்கான சரக்கு அவரிடம் இருக்கிறது. வெண்பாவின் நினைவிடுக்குகளுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பழமொழிகளையும் எடுத்து ரசிக்க வேண்டுமென்றால் அவரோடு உணர்வுபூர்வமாகப் பேசிப் பாருங்கள்! இந்த இடுகையை அவருடைய ஆவர்த்தனம் என்றுதான் சொல்லவேண்டும். கூட இருந்த மக்களெல்லாம், ஒவ்வொரு பழமொழியைச் சொல்லிவிட்டு ஓரமாக நிற்கும் பக்க வாத்தியக்காரர்கள் போல!

உங்களுக்குத் தெரிந்தவற்றையும் சொல்லலாம்:

ஆழாக்கு மிளகு குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரசம் கேட்டாளாம்.

முக்கி முக்கிக் குத்துனவளுக்கு மூனாம். எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டாம்.

பாடிப் பாடிக் குத்துனாலும் பதறு நெல்லாகாது.

நாட்டுக்கு நல்ல தொரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லு சுமக்குற வேலதான்.

தான் போக வழியைக் காணோம், மூஞ்சுறு விளக்கமாத்தையும் காவிக்கிட்டுப் போச்சாம்.

அடியேன்றதுக்குப் பொண்டாட்டி இல்லையாம், புள்ளைக்குப் பேர் வைக்கப் போனானாம்.

ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

ஆனா அச்சுல வாரு, ஆவலைன்னா அண்டாவுல வாரு.

எள்ளுருண்டை வேண்டாம்னுட்டு உரலுக்குள்ள தலையை விட்டானாம்.

குலுக்கி மொளகாய் அறச்சா; கொதிக்காம எறக்கி வச்சா.

காலைப் புடிக்கிற கணக்கப்புள்ளைக்கு மாசம் பத்து ரூவா.

கறக்குறது காப்படி; உதைக்கிறது பல்லுப் போக.

(நடுவுல ஒருத்தரு வந்து பாதிப் பாதி பழமொழியா சொல்லிட்டுப் போனாரு. ஏன்னா மீதிப் பாதியைக் கூட்டத்துல சொல்ல முடியாதுன்னுட்டாரு!)

கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில வையி.

புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளிக் குதிச்சானாம்.

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.

நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரமில்லை.

நாயை எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்குமாம்.

மார்காழிக்குப் பின்னாடி மழையும் கிடையாது; மச்சானை மிஞ்சின உறவும் கிடையாது.

சுண்டைக்கா கால்பணம்; சொமை கூலி முக்காப்பணம்.

கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானாகணும்.

நடுநடுவுல தெலுங்குலயும் பழமொழிகள் வந்து விழுந்தன.
ஆசபாசம் அக்கட அன்னவஸ்த்ரம் இக்கட
பேரு பெத்த பேரு தாக நீலு லேது

பழமொழிகள் நம் முன்னோர்களின் அனுபவச் சூத்திரங்கள். எள்ளலும், சுவையும், சொற்சுருக்கமும் இவற்றின் தனிச் சிறப்புகள். பழமொழிகளைத் தொகுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் ஏட்டளவில் இல்லாமல் அன்றாட வாழ்வில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இவற்றை நெடிது வாழச் செய்யலாம்.

இவ்விடுகையின் முதன்மைப் பழமொழியாளர்: வெண்பா

கோரஸ்: பனைநிலத்து மக்கள் (எல்லாப் பேரையும் சொல்ல முடியலீங்கோ, மன்ச்சுக்கங்கோ!)

9 comments:

Anonymous said...

வலைப்பதிவுல பிரபலமான ஒரு ஈழத்துப் பழமொழி:
பனையேறி விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதையா.

-பனையேறி :))

Anonymous said...

உள்ளுரில் எலி புடிக்க முடியாதவன் வெளியூரில் புலி புடிக்க போணானாம்
-மாயோன்

Anonymous said...

எங்க ஊருல சாப்பாடு போட்டா சாப்பிட்டிட்டு போய்க்கிட்டே இருப்போம்......உருப்பிடியா எதோ பண்றீங்க....என்ஜாய் பண்ணுங்கோ

இது எப்பிடி இருக்கு மக்களே ------

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

சுசி

Panainilam said...

சுசி,
இப்படி சந்துல சிந்துபாடி....... சைக்கிள் gap ல ஆட்டோ ஓட்டிடிங்க

வாழ்த்துக்கள்

Anonymous said...

இன்றைய வழக்கிலிருந்து பழமொழிகள் சிறிது சிறிதாக நம்மிடமிருந்து மறைந்து கொண்டே வருகிறது. அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு சிறிய முயற்சி. அவற்றில் விடுபட்டவைகள் சில:

1. கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடி புக.

2. சோழியன் குடுமி சும்மா ஆடாது.

3. குற்றமுள்ள நெஞ்சு குறுங்குறுக்கும்.

4. தான் திருடி அசலை நம்பாது.

5. திருடனுக்கு தேள் கொட்டினாற் போல்.

6. வெல்லம் காய்ச்சரது ஒருத்தன் விரல் சூப்பரது இன்னொருத்தன்.

7. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.

8. சும்மா கொடுத்த மாட்ட பல்லைப் புடிச்சிப் பாத்தானாம்.

9. தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது போல.

10. நுனி மரத்தில ஒக்காந்துட்டு அடிமரத்த வெட்டாத.

11. எளியாரை வலியார் வாட்டினால், வலியாரை தெய்வம் வாட்டும்.

12. பிச்ச எடுத்தானாம் பெருமாளு, அத்தப் புடுங்கனானாம் மன்னாரு.

13. கூந்தலுள்ள மகராசி அள்ளி முடியிறா.

14. இடாதவருக்கு இட்டுக் காட்டு, கொடாதவருக்கு கொடுத்துக் காட்டு.

15. நல்லவனுக்கு அடையாளம் சொல்லாம செய்யறது.

16. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

17. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

18. மாடு எளச்சாலும் கொம்பு எளக்காது.

19. கிட்ட உறவு முட்டப் பகை.

20. சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

21. நாய எங்க அடிச்சாலும் காலதான் தூக்கும்.

22. ஆடு பகை குட்டி உறவு.

23. உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.

24. தானாக் கொடுத்தா தர்மம், கேட்டு வாங்கினா பிச்சை.

25. வெட்டுற கத்திய வீசிக் காட்டாதே.

(பழ) மொழிகள் இன்னும் வரும்.

Anonymous said...

ஆஹா, வெண்பா அவர்களிடம் ஒரு புதையலே இருக்கும் போலிருக்கெ. இனும் சொல்லுங்க.
பனைனிலம் ப்லாக் நல்லா இரூக்கு.

Anonymous said...

வெண்பா, உங்களது பழமொழிகளை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்! "உன்னை நினைக்கும்போது கவித அருவி மாதிரி கொட்டுது"ங்கற வசனம் மாதிரி, உங்களைப் பாத்தா பழமொழி எல்லாருக்கும் கொட்டட்டும் :) தங்கள் பணியைத் தொடரவும்!

-பனையேறி

Anonymous said...

ஏங்க? அவர் பெயர் வெண்பாபா இல்லையா?

Panainilam said...

இவை எல்லாம் பழ மொழிகள் என்பதை விட முது மொழிகள் என்பதே மிகப் பொருத்தம், நம் முனோர்களால் கூறப்பட்டவை, அனைத்துமே பொன்மொழிகள்...மற்றபடி பழ மொழி, காய் மொழி என்றில்லை என்பது என் தாழ்மையான கருத்து...

பாரதி