Friday, July 27, 2007

முல்லை நடவரசு - ஒரு தூண்டுகோல்


அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, FeTNA திருவிழாவில் பங்கேற்ற பின்னர், கடந்த 22ம் தேதி எங்கள் தமிழ்ச் சங்கத்தின் கோடை விழாவில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தார் திரு முல்லை நடவரசு. கோடைவிழாவுக்குப் பின் எங்களோடு தங்கியிருந்த முல்லை நடவரசு அவர்களுடன் நாங்கள் கழித்த மூன்று மாலை நேரங்களைப் பற்றிய பதிவு இது.

ஒரு சிறிய நகரத்தில் சிறிய தமிழ்ச்சங்கத்தின் இளைஞர்கள் நாங்கள். எங்களுக்கோ கவிதை, பட்டிமன்றம் , இலக்கியம் எல்லாமே எங்கேயோ எப்போதோ கேட்ட ஞாபகம்தான். எங்களுக்கெல்லாம் கவிதை எழுதவோ அல்லது பட்டிமன்றத்தில் பேசவோ தெரியாது ( அல்லது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம் ). ஞாயிற்றுக்கிழமை முல்லை அவர்களின் பேச்சைக் கேட்டுக் களித்திருந்தோம் . அடுத்த நாள் பார்த்தால் தமிழ்ச்சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாகத் தகவல். அது ஒரு பட்டிமன்றப் பட்டறை என்று சொன்னார்கள் . பட்டறை என்றால் workshop என்று சொன்னார்கள். அதில் முல்லை ஒரு இரண்டு மணி நேரங்களுக்கு வகுப்பு எடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இந்த வகுப்பு சுவையாகவும், அன்பாகவும் இருந்தது . பட்டி மன்றத்தில் எப்படிப் பேசவேண்டும், எப்படி அதற்காகத் தயாரிக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களையெல்லாம் சொல்லித் தந்தார் . நாங்கள் குறிப்பெடுத்துக் கொண்டோம். நாங்களே ஒரு பட்டிமன்றத்தில் பேசுவதற்கும் தலைப்பு ஏற்பாடு செய்துவிட்டோம் . "இளைஞர்களிடம் சமூகப்பொறுப்பு அதிகமாக இருப்பது சொந்த மண்ணிலா , வந்த மண்ணிலா ?" என்பதுதான் தலைப்பு. நாங்களே இரு அணிகளைப் பிரித்துக் கொண்டு தயாரிக்க ஆரம்பித்தோம். முல்லையின் பாடங்கள் உதவியாக இருந்தன .


அடுத்த நாள் மாலையைக் கவிதை மாலையாக ஆக்கிவிட்டோம். அதில் முல்லை எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து சில கவிதைகளை வாசிப்பதாகவும் மற்றும் வருகின்ற நண்பர்கள் தாங்கள் எழுதிய ( அல்லது எழுத முயற்சித்த) கவிதைகளைக் கொண்டுவந்து வாசிப்பதாகவும் ஏற்பாடு . சூரிய வார்ப்புக்கள் என்ற தனது கவிதைத் தொகுப்பிலிருந்து (கண்ணதாசன் அதற்கு வாழ்த்துரை எழுதியிருக்கிறார் ) சில கவிதைகளை வாசித்துக் காட்டினார். அவற்றுள் விறகுக்காரி என்ற கவிதையைத் தான் விரும்புவதாகவும் அதை எழுதிய பின்புலத்தையும் எங்களுக்குச் சொன்னார் . நம் நண்பர்களில் சிலர் கவிதை தெரியாது என்று சொல்லிவிட்டு வெளுத்து வாங்கினார்கள். எங்களுக்கும் கவிதை வரும் என்பது அன்றுதான் தெரிந்தது . எங்களை ஊக்குவிப்பதற்காக அடுத்த நாள் "நாளை " என்ற தலைப்பில் சில கவிதைகளை எழுதிக்கொண்டு வரச்சொன்னார் முல்லை. சரி என்று அனைவரும் விடைபெற அன்றைய கவிதை மாலை நிறைவுற்றது.


அடுத்த நாள் எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சியும் கலக்கமும் கலந்த உணர்வாக இருந்தது. ஏனென்றால் அன்றைக்குத்தான் பட்டிமன்றம், கவிதை வாசிப்பு மற்றும் முல்லையுடன் நாங்கள் கழிக்கும் கடைசி மாலை. அது எங்கள் Isle of Palms கடற்கரையில் நடந்தது . இரவுணவையும் அங்கேயே எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம். அழகுக் கடற்கரை, சுடரும் நிலவு, ஆடும் அலைகள், வீசும் காற்று, கடற்கரை மணலில் விளையாடும் பிள்ளைகள் என்று அந்தச் சூழல் இனிமையாக இருந்தது.


ஆளுக்குக் கொஞ்சம் சுண்டலுக்குப் பின் முல்லையின் தலைமையில் கவிதைகள் வாசிக்கப்பட்டன. சில உடனடிக் கவிதைகளும் எழுந்தன . பிறகு ஒரு எளிமையான, சுவையான உண்டிக்குப் பின் பட்டிமன்றம் ஆரம்பமாகியது. அப்போது மாலைச் சூரியன் மறைந்துவிட்டிருந்தான் . பேசுபவர்களுக்கு நேரம் முடிந்து மணியடிக்க நடுவர் முல்லையிடம் மணி இல்லை . அதனால் ஒரு கைவிளக்கை அடித்து சைகை காட்டிக்கொண்டிருந்தார். இரு அணிகளும் பலமாக வாதிட்டன . ஒரே ஆரவாரமும் , ஆவேசமும், கிண்டலும், கைத் தட்டலுமாகக் கும்மாளம் நடந்தது. நடுவரின் தீர்ப்பும் வந்தது. வெற்றி தோல்வி எங்களுக்கு முக்கியமாகப் படவில்லை. வாதங்களில் வைக்கப்பட்ட கருத்துக்களைச் சுற்றியே எண்ணங்கள் அலைந்தன.


மொத்தத்தில் முத்தான நாட்கள். முல்லை நடவரசு அவர்கள் இங்கு வரும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு (FeTNA) எங்கள் அன்பான நன்றி. மேலும் எங்களுக்கு முன் நிகழ்ச்சிகள் நடத்தி அவரை எங்களூருக்குச் சிறப்பாக வழியனுப்பிய நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்துக்கும், எங்களுக்குப் பின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து அவரை வரவழைத்துக் கொண்ட ஹ்யூஸ்டன் பாரதி கலை மன்றத்துக்கும் எங்கள் நன்றி (குறிப்பாக பாரதி கலைமன்றம் எங்களிருவருக்கிடையேயான பயணச்செலவை ஏற்றுக்கொண்டு ஒரு இளைய தமிழ்ச் சங்கத்தை அன்புடன் நடத்தியதற்கு:))

எங்களுக்குள் இருந்த தமிழார்வச் சுடரைத் தூண்டிவிட்டுச் சென்றிருக்கும் முல்லை நடவரசு அவர்களை நாங்கள் நன்றியுடன் நினைத்துக்கொள்வோம். அவருக்கு அன்புடன் நாங்கள் கொடுத்திருக்கும் பரிசு ஒரு வலைப்பதிவு: முல்லை நடவரசின் தமிழ்ச் சோலை (http://nadavarasu.blogspot.com). இதன் மூலம் அவர் எங்கிருந்தாலும் எங்களோடு பேசிக்கொண்டிருப்பார்!