Sunday, January 27, 2008

பனைநிலம் தமிழ்ச்சங்கப்பொங்கல் விழா2008

.

இடம் - தமிழ் மண்ணிலிருந்து கிட்டத்தட்ட பல்லாயிரகணக்கான காத தூரங்கள்.

நேரம் - அந்தி மயங்கும் மாலை நேரம்

வானிலை - அங்கிங்கெனாதபடி எங்கு காணினும் மழைத்தாண்டவம், ஊனிலிருந்து உயிரையே பிரித்தெடுக்கும் ஊழிக்காற்று வேறு...சொல்லவா வேண்டும். வெளியில் ஒரு வாகன, பாமர நடமாட்டம் கூட இல்லை. கல்கியின் வந்தியத்தேவனே இங்கு வந்திருந்தாலும் அவனையும் புரவியையும் களைத்து துவண்டிடச்செய்யும் வானிலை.

ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் என்ன ஆயகலைகளின் அணிவகுப்பு, தமிழ்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு.

வாங்க இந்த சார்லஸ்டன் மாணவர் மைய அரங்கில் என்ன நடக்கிறதென்னு பார்த்துடலாம்.

நம்ம இப்போ பார்க்கிறது கனவா...நனவா....அட நம்ம சார்லஸ்டன் தமிழ்மக்கள் பொங்கல் விழாவை இவ்வளவு சீரும் சிறப்புமா கொண்டாடிக்கிட்டு இருக்காங்களே. இத்தனை அருமையான நிகழ்ச்சிகளா.

விழா இன்னும் கொஞ்ச நேரத்தில ஆரம்பமாகப்போகுது....அப்படியே ஒரு மூலையில நம்ம உக்கார்ந்துக்கலாம், என்ன சொல்றீங்க.

விழா ஏற்பாடுகளை மக்கள் பம்பரமா சுறுசுறுப்பா ஓடியாடி செய்றாங்க. அங்க பாருங்க சுறுசுறுப்பா ஒலிபெருக்கி மற்றும் மின்னணுக்கருவிகள் அத்தனையிலயும் புகுந்து கலக்கு கலக்கிட்டு இருக்காரே அவருதான் நம்ம தண்டபாணி சார். அவருக்கு மேல புகுந்து வேல பார்க்கிறது வசந்த். அந்தபக்கம் பார்த்தா குழந்தைகளையும் பெரியமனுசங்களையும் சமாளிச்சிக்கிட்டு விழா ஏற்பாடுகளையும் கவனிச்சிக்கிட்டு இருக்காரே அவர்தான் சுந்தர். அட வழக்கம் போல வேலைகளை இழுத்து போட்டு செய்றாரே அதுதான் சந்தோஷ். பாபா சூர்யன், சிவா கோஷ்டிகள் வேறு பறந்து பறந்து வேலை செய்றத பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கு. ஆகா வந்திட்டாரய்யா வந்திட்டாரு. காமிராவும் கையுமா...இல்ல இல்ல காமிராவே கையா வந்திட்டாரு காமிரா-கண்ணன்.

அந்த பக்கம் பார்த்தா, பெண்கள் குழு கோலாட்டம் ஒத்திகை விறுவிறுன்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த பக்கம் பாருங்க ஒயிலாட்டம், நாடகம் ஒத்திகை பலமா போய்க்கிட்டு இருக்கு. அடடா...என்ன விறுவிறுப்பு. இன்னும் கொஞ்சம் மக்கள் உணவு ஏற்பாடுகளில் மூழ்கி இருக்காங்க. விழா நேரம் நெருங்க நெருங்க ஒரே பரபரப்பு. இங்க பார்க்கிறப்ப அத்தனை பேரும் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சேலையில இருக்கிறது கண் கொள்ளாக்காட்சி.

இதோ ஆரம்பிச்சிடுச்சு. தொகுப்பாளினி வினு அவங்க வந்து தமிழத்தாய் வாழ்த்துக்களோட ஆரம்பிக்க அழைப்பு விடுக்கிறாங்க. அதுக்கு அடுத்தபடியா வினு அவங்க நிகழ்ச்சி என்னன்னு வழக்கம் போல அறிவிப்பாங்கன்னு பார்த்தா, ஆனந்தியைப்பார்த்து ஏதோ உங்ககிட்ட சந்தேகம் இருக்கிறமாதிரி தெரியுது என்னன்னு வந்து முன்னாடி சொல்லுங்கன்னு கூப்பிட்டு கேட்க, அதுக்கு ஆனந்தி, பொங்கல் மற்றும் தமிழக கலாச்சாரத் தொடர்பு பற்றி கேள்வியா கேட்க, அதுக்கு வினு அழகா பதில் சொன்ன அப்புறம் தான் தெரிஞ்சது அது திட்டமிட்டு செய்திருக்கிற தொகுப்பு நிகழ்ச்சின்னு. வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காம, பொங்கல் பத்தி சிறு சிறு தகவல்துளிகளை சுவராஷ்யமா செந்தில் எழுதி அதை வினு-ஆனந்தி தொகுப்பாளினிகள் அருமையா வழங்கிருக்காங்கன்னு தெரிந்தது. அதுவும் பொங்கலுக்கு முதல் நாள்தான் செந்தில் போய் வினு மற்றும் ஆனந்தி வடைசுடும் கோலாகலமான நிகழ்ச்சிக்கு மத்தியில் வசனம் சொல்லி அவங்க அதை தூக்கம் கெட்டு விடிய விடிய பரிட்சை மனப்பாடம் செய்தாங்கன்னு சுவையான கிசுகிசு வேற நமக்கு கிடைத்தது.



விழாவை இரத்தின சுருக்கமாகவே இப்போ சொல்றேன். சுந்தர் முன்னுரையுடன் தொடங்கி வைக்கிறார். அதற்கு அடுத்த படியாக குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சி என்கிற பாடல்...அதுக்கு குழந்தைகள் ஆகாஷ், அமிர்தா, மாசிலன், சிபி, கோகுல், அஸ்ரிதா, கண்கவரும் வண்ணங்களாக அணிவகுத்து பாடல்பாடி மகிழ்வித்தார்கள். அடுத்தபடியாக, குழந்தைகள் சிட்டா சிட்டாங்குருவின்ற பாட்டுக்கு அருமையாக நடித்து கலக்குனாங்க.


அதற்கு அடுத்தபடியாக ஹரி அவங்க அம்மா லட்சுமி அவர்கள் அயல்நாடுகளில் தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பற்றி அழகாக பேசினார். பலகுரல் வித்தைகள் நிகழ்ச்சியில் யுவ்ராஜ் பலவித்தைகளை காட்டி பேசி மகிழ்வித்தார். பல திரைப்பட நடிகர்களின் குரல்களை நம்ம கண்.... இல்ல இல்ல காதுக்குள்ளேயே கொண்டு வந்து நிறுத்தினார். அதற்கடுத்தபடியாக மாறுவேடப்போட்டி. குழந்தைகள் பாரதியார், ஒளவியார், உழவர், தமிழ் ஆசிரியை, வீரபாண்டிய கட்டபொம்மன், திருவள்ளுவர் போன்று முறையே கோகுல், அஸ்ரிதா, மாசிலன், அமிர்தா, சிபி, ஆகாஷ் அவர்கள் அருமையாக வேடம் அணிந்து வசனங்களையே சிறப்பாக பேசி நடித்து பார்வையாளர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டனர்.


அதற்கு அடுத்தபடியாக ஒரு நாடகம். செந்தில் இயக்கி அதில் இறைவனாக செந்திலும், தருமியாக யுவ்ராஜ், நக்கீரராக சந்தோஷ், மற்றும் மன்னராக குமரனும் நடித்திருந்தார்கள். அது நவீன திருவிளையாடற்புராணத்தின் அடிப்படையில் நகைச்சுவை கலந்து மஹாராணியின் முதுமை தீர்க்கும் மருந்துக்கு இறைவன் ச்டெம் செல் அறிவியல் ஆராய்ச்சி ரகசியத்தினை தருமி போன்ற மாணவரிடம் கொடுத்து ஒரு மில்லியன் டாலர்கள் பரிசினை பெற உதவுவதாகவும், அதை நக்கீரன் தடுப்பதாகவும், இறைவன் வந்து வாதிடுவதாகவும் இருந்தது. நாடகம் வித்தியாசமாக, நகைச்சுவையாக, அம்சமாக இருந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.


இப்போ வர்றாங்களே அதுதான் மகளிர் கோலாட்ட குழு. அடடடா...ஒன்றா இரண்டா...20 நாள் வீட்டு வேலைகளை விட்டு, வினுவோட ஒருங்கிணைப்பில் கோலாட்ட குச்சிகளுக்கு பதிலா, சமையல் கரண்டிகளை வச்சு எல்லாரையும் பயமுறுத்தி ஒத்திகை மேல ஒத்திகை பார்த்திருக்காங்க. அந்த ஆடல் குழுவில் வினு, ஆனந்தி, வளர், சுபத்ரா, யசோதா, திருமகள், கலைவாணி, ஜானகி, உமா, வித்யா கலந்து அமர்க்களப்படுத்திட்டாங்க. அதுவும், ஆடல் நிகழ்ச்சியை நீங்க, உற்றுப்பாருங்க அவங்களோட கடின உழைப்பு ஒவ்வொரு அசைவிலயும் தெரியுதில்லையா. ஆட்டத்தை பார்த்துகிட்டே இருந்ததில இந்த ஆறு நிமிடங்கள் போனதே தெரியல்ல.


அடுத்து என்னன்னு பார்ப்போமா. ஆஹா, வந்திட்டாங்கய்யா...வந்திட்டாங்க. வேட்டியும் சட்டையுமா, வெள்ளையும், சொள்ளையுமா நம்ம ஆடவர் அணிதான். இந்த அணியிலிருந்த சுந்தர், சூர்யன், வசந்த், குமரன், யுவ்ராஜ், சந்தோஷ் மற்றும் செந்தில் அத்தனை பேரும் கலக்கிட்டாங்க. சுந்தரோட விருப்பத்தில் உருவான இந்த ஒயிலாட்டம் ரொம்ப அருமையாக, கண்ணைக்கவரும் வண்ணமா இருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆர்ப்பரிப்பு, உற்சாகம், கைத்தட்டல் ஆட்டம் முடிஞ்சும் ரெம்ப நேரமாக குறையவேயில்லை.

அதற்கடுத்தாற்போல பாம்பே விஸ்வநாத், ஸ்ரீதர், கார்த்திகா அவர்களின் பாடல்கள், பொங்கலில் சேர்க்கப்பட்ட முந்திரியாக சுவைத்தது.

பிறகு கலை நிகழ்ச்சிகள் பல வரிசையில் இருந்தும் நேரம் இல்லாததனால் அப்பிடியே உணவுக்கு அழைப்பு வந்திடுச்சு. ஆஹா உணவுப்பந்தல்ல பலவகை அறுசுவை உணவுகள். அது வித்யா, திருமகள், சுபத்ரா, வளர்மதி அவங்களோட ஏற்பாட்டில் அனைத்து மக்களும் அவங்கவங்களோட கைவரிசையைக்காட்டியிருந்தனர். உணவிற்கு பிறகு குழந்தைகளுக்கு பரிசுப்பொருள்கள் மற்றும் பனை நிலம் உறுப்பினர் அட்டைகளை கணேஷ் வழங்கினார்.

அதக்கப்புறமும் விழா அரங்கில குழந்தைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு புகுந்து விளையாண்டுகிட்டிருந்தாங்க.

ஆக மொத்தத்தில இந்த பனை நிலம் 2008 பொங்கல் விழா ஒரு கலாட்டா கல்யாணம். அழகாக பரிமாறப்பட்ட அறுசுவை உணவு. நம்ம மக்கள் நெஞ்சில் என்றென்றும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் கலைக்காவியம்.



.கந்தன். கருத்து உதவி - இனியன்
படங்கள் - மாயோன்
.......................................................................