Sunday, July 18, 2010

பேரவை விழாவில் முத்திரை பதித்த பனைநிலம்

கனெக்டிகட்டில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவில் நம் சங்கத்தின் சார்பில் சுமார் 15 பேர் கலந்துகொண்டோம். சுமார் 2000 பேர் வந்திருந்த விழாவில் இந்தப் பதினைந்து பேர் குழு பதித்த முத்திரை பலமானது, நம் சங்கத்துக்குப் பெயர் சேர்த்தது! முதல் நாள் நிகழ்ச்சியில் நம் சங்கம் நிகழ்த்திய "யார் தமிழர்" தெருக்கூத்து நடைபெற்றது. இதன் முழு வசனம் மற்றும் பாடல்களை வேண்டுவோர் பனைநிலத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நம் கலை இளவரசன் வருவதாக இருந்து பிறகு வரவியலாமல் போனது மாபெரும் வருத்தமென்றாலும், ஒருவாறு சமாளித்துவிட்டோம். ஹரியும், சந்தோஷும் ஒரு புறம் நின்று எடக்கு மடக்காகக் கேள்விகளைப் பாடியும், குத்தாட்டம் ஆடியும் கேட்டுக் கொண்டிருக்க அதற்குத் தக்க பதில்களை சூரியன், சுந்தரவடிவேல் மற்றும் அசத்தல் நடிகர் தாமரையாரும் பதில் சொல்ல, நடுவே வந்து இளங்கோ, சிபி, மாசிலன், நெல்லி மற்றும் ராஜசேகர் ஆகியோர் தம் பங்குக்குக் கலக்கிச் செல்ல, பிறகு பறை இசையும், பாடல்களுமாய்த் தெருக்கூத்து முடிந்தது. மேடையின் பின்னேயிருந்து எங்களை உற்சாகப்படுத்திய முனைவர் தண்டபானி மற்றும் ஜானகிக்கு எங்கள் நன்றிகள். இத் தெருக்கூத்தின் ஆக்கத்திலும், வெற்றியிலும், இதில் நடித்த அத்தனை பேருக்கும், பார்த்துக் கருத்துக்களைக் கூறிய அத்தனை நண்பர்களுக்கும் பங்குண்டு. அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல! இன்னும் சற்று நேரம் பறையடித்திருக்கலாம் என்ற ஒரு சிறு குறை கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருந்தது. அக்குறையினை அடுத்து வந்த இரு நாட்களிலும் தீர்த்துவிட்டோம். எப்படி என்கிறீர்களா? Boycott Sri Lanka என்றொரு சிறு கடையை USTPAC அங்கே வைத்திருந்தது. அங்கே Boycott Sri Lanka என்று அச்சடித்த சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டோம். அக்கடையின் நண்பரைக் கொஞ்சம் சட்டைகளையும் காரொட்டிகளையும் (bumper stickers) எடுத்துவரச் சொன்னோம். நாங்கள் பறையடிக்க, அவர் தெருவில் கூவிக் கூவிச் சட்டைகளை விற்க மக்கள் அனைவரையும் அது கவர்ந்தது. கடையில் சென்று சட்டையை வாங்க முன்வராத பலரும் கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அப்படியே அடித்துக் கொண்டே உணவருந்துமிடத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். இறுதியில் USTPAC நண்பர் தழுவிக் கொண்டார். பறையொலியில் வாட்டர்பரியின் தெருக்கள் துள்ளின. கடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்த்தனர். நின்றவர்கள் சற்றே ஆடினர். ஆடியவர்களுக்கு மேலும் பரவசம். சிலர் பறையைத் தொட்டனர், சிலர் அடித்துப் பார்க்கலாமா என்றனர். தமிழர்களின் ஆதி இசையான பறை, தொல்காப்பியத்திலும் சொல்லப் படுவது. ஒரு சிறு கருவி இத்தனை உள்ளங்களையும் ஆட்டுவிப்பதால்தான் அது இத்தனைக் காலங்களையும் கடந்து வாழ்கிறது. முதல் நாளன்றே அமைப்பாளர்களில் ஒருவர் வந்து, நாளை மதுரைவீரன் தெருக்கூத்து நடக்கப் போகிறது, அதிலே மதுரைவீரனை ஊர்வலமாக அழைத்துவரும் ஒரு காட்சி வரும். அதிலே உங்கள் குழு பறையடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது ஒரு பெரும் அங்கீகாரமாக எமக்குப் பட்டது.

நம் சங்கத்தினர் பலரும் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்வு 'இலக்கிய வினாடி வினா'. இது பலருக்கும் புதிய இலக்கியச் செய்திகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்தப் பல்லூடக நிகழ்ச்சி அனைவரையும் ஆவலோடு அமர்ந்து பார்க்க வைக்கும் சுவை மிகுந்தது. இவ்வாண்டு வீ.ப.கா. சுந்தரம் அணி மற்றும் விபுலானந்தர் அணி என்ற இரு அணிகள் இருந்தன. கடுமையான போட்டியில் விபுலானந்தர் அணி வென்றது. இருப்பினும் நிகழ்ச்சியில் யாரோ குறிப்பிட்டது போல, யார் வென்றாலும் வெற்றி தமிழுக்கே என்பது பொருத்தமாகத் தோன்றியது. குழந்தைகள் திருக்குறள் போட்டி, தமிழ்த் தேனீ வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தினை முனைவர் தண்டபானி அவர்கள் நிகழ்த்தினார்கள். நிறைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த ஆண்டு இன்னும் பலரும் வருவார்கள் எனத் தோன்றுகிறது.

அடுத்த நாள் மதுரைவீரன் தெருக்கூத்து! நாங்கள் பறையை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என ஒத்திகை பார்க்க ஒத்திகைக் கூடத்துக்குச் சென்றோம். அங்கே குழந்தைகள், ஆடவர், பெண்டிர் என ஒரு பெரும் குழு ஊர்வலத்தில் ஆடிக் கொண்டு செல்லத் தம்மைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பறையிசையினைக் கேட்டவுடனேயே துள்ளல். அனைவரும் ஆடிக் களித்தனர். நியூஜெர்சியிலிருந்து செல்வன் என்றொரு நண்பர் வந்திருந்து பறையினை எங்களோடு இணைந்துகொண்டு அடித்தார். அவர் ஒரு அருமையான இசைஞர். ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு ஒத்திகைக் கூடத்துக்கு வந்த இளையோர் சங்கத்தினர் ஒரு பதினைந்து பேர் பறையிசைக்கச் சொல்லிக் கேட்டு ஆடி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் இசைக்கவும் ஆர்வம் காட்டினர். இளையோர்களிடத்தில் இவ்விசைக்கு இருக்கும் பெருமதிப்பையும், ஆர்வத்தையும் உணர முடிந்தது. அடுத்த ஆண்டு அவர்களுக்காகத் தனியாக ஒரு நடனத்துக்கு இசைப்போம் என்று கூறிவந்திருக்கிறோம்.

மதுரைவீரன் தெருக்கூத்து அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நடிகர்களின் வேடமும், துள்ளலும், சுழற்சியும், வசனங்களும், பாடல்களும் காண்பவரை இழுத்தன. சிலருக்குப் புதுமை. சிலருக்கு அந்தக் கால நினைவுகள். குழந்தையாக இருந்த மதுரைவீரன் பெரியவனாகி மேடையிலே தோன்றவேண்டும். அப்போது மேடையின் பின்புறத்தே இருந்து தோன்றாமல், பார்வையாளர்களின் கடைசி வரிசையிருக்கும் வாசல் வழியாக வருவதாக ஏற்பாடு. அங்குதான் நம் பறையும் காத்திருக்கிறது. 'இதோ வருகிறார் மதுரைவீரன்' என்று மேடையிலே வசனம் வந்ததும், அதிர ஆரம்பித்தது பறை. மேடையைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் மொத்தமும் பின்னே திரும்பியது. மதுரைவீரன் வேடத்தோடு நின்று ஆட, முன்னே பறையும், தவிலும் ஒலிக்க, கூட்டம் ஆட அது ஒரு பெரும் ஊர்வலத்தைக் கண் முன் நிறுத்தியது. பார்வையாளர்களில் பலரும் ஆடுவதற்கு ஓடி வந்தனர். அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில் மேடையிலே ஒரு அம்மாவுக்குச் சாமி வந்துவிட்டது (அல்லது அப்படி ஆடினார்!). ஒருவாறாகக் கூட்டத்தைக் கடந்து மதுரைவீரனை மேடையில் ஏற்றிவிட்டோம் நாங்கள் இறங்கிக் கொள்ளக் கூத்து தொடர்ந்தது.

அதன் பிறகு இன்னிசை நிகழ்ச்சிக்கு நடுவே அடுத்த ஆண்டு பேரவை விழாவுக்கு நம் பனைநிலம் தமிழ்ச் சங்கத்துக்கு அனைவரையும் வரவேற்பதற்காக நம் சங்கத்தின் சார்பாகச் சென்றிருந்தவர்கள் மேடையேறினோம். பறையோடுதான். அடுத்த ஆண்டு பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவையின் புதிய துணைத்தலைவருமான முனைவர் தண்டபானி அவர்கள் சுருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் நமது அழைப்பிதழை விடுத்தார். வணக்கம் கூறி மேடையிலிருந்து அகல முயன்றோம். கூட்டம் விடவில்லை, மேளம், பறை என்று குரலெழுப்ப மறுபடியும் ஒரு முழக்குப் போட்டுவிட்டுத்தான் இறங்கினோம்!

பல சங்கங்களிலிருந்து வந்திருந்த நண்பர்களும், புதிதாய்க் கிடைத்த நண்பர்களும் நம்மூர்த் திருவிழாவுக்கு வரவும், நம்முடன் சேர்ந்து இவ்விழாவை ஒழுங்கு செய்யவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஒரு சிறந்த விழாவைக் கண்டு களித்த மனநிறைவோடும், நம் பனைநிலத்தின் முத்திரையை அவ்விழாவில் பதித்த பெருமிதத்தோடும், சீரும் சிறப்புமாக நம்மூர் விழா நடந்தேறும் என்ற உறுதியோடும் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்துக்கும், பேரவைக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினோம்!

முக்கியமான பின் குறிப்பு: வரும் ஆகஸ்டு 8ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை பனைநிலத்தின் கோடை விழா நிகழ இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். இவ்விழாவின்போது வரும் பேரவை விழாவினைச் சிறப்பாக நடத்துதற்குரிய திட்டக் கூட்டமும் நிகழும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.                               ========================================================================எழுதியவர்: பனையேறி (கண்ணன் வராததால் படங்கள் இல்லை :))