Saturday, January 26, 2008

பனையேறிக்கும் வீட்டுக்காரப் பெருச்சாளிக்கும் நடக்கும் தகராறு - பாகம் 1

நீங்க வாடகை வீட்டுல குடியிருக்கீங்களா? அப்படின்னா கண்டிப்பா இதப் படிங்க.
இந்தப் பனையேறியும் குடியும் குடித்தனமுமா இத்தனை காலமும் ஊரு ஊரா ஓடி ஓடி வாடகை வீட்டுலதான் இருந்துட்டு இப்பதான் எலி வளைன்னாலும் தனி வளைன்னு ஒரு வீடு வாங்கி ஒதுங்கியிருக்கான். ஆனாலும் பாருங்க, இந்த வாடகை வீட்டுக்காரப் பெருச்சாளி நம்மள தொரத்து தொரத்துன்னு தொரத்துது. வெவரமா சொல்லுறேன்.

போன அக்டோபர் மாசம் வாடகை வீட்டக் காலி பண்ணிட்டு, புது வீட்டுக்கு வந்தோம். ஆனா காலி பண்ணுற நேரத்துல பாருங்க, அந்த வீட்டுக்காரங்ய மேல ஏதோ ஒரு நம்பிக்கையில, சாவிய மட்டும் குடுத்துப்புட்டு, பாத்துக்கங்கய்யான்னு கெளம்பிட்டோம். நாங்க என்ன பண்ணியிருக்கனுமுன்னா, அவனுகளக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போயி, இந்தா இதான் நீ குடுத்த வீடு, எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க அப்படின்னு அவங்கிட்ட காட்டிட்டுப் போயிருக்கனும். இதுக்கு முன்னாடி இருந்த அத்தனை வீட்டுலயும் அப்படிச் செய்யல. அவனுகளும் செக்குரிட்டி டெபாசிட்டை முழுங்காம, அல்லது கொஞ்சமா முழுங்கிட்டு குடுத்துட்டாங்ய. ஆனா இந்தப் பயலுக இருக்காங்ய பாருங்க. செக்குரிட்டி டெபாசிட்டு 150 டாலர் திரும்பி வரவே இல்ல. அவனுககிட்டேருந்து ஒரு கடுதாசியும் வரல. நாங்களும் நெனச்சுப் பாக்குறதோட சரி. கேக்காமலே விட்டுக்கிட்டு சோம்பேறியாத் திரிஞ்சோமா. ஒரு நா வருது ஒரு கடுதாசி. எங்கேருந்து? கலெக்ஷன் ஏஜென்சிகிட்டேருந்து. அவன் சொல்லுறான், நீ உன்னோட ஊட்டுக்காரனுக்கு 945 டாலர் கட்டுடான்னு. எதுக்குடான்னு கூப்பிட்டுக் கேட்டா, உன்னோட கார்ப்பெட்டை மாத்துனோம். அதுக்குத்தான். அடப் பாவிகளா. பனையேறிக்கு அச்சு அச்சுன்னு தும்முதேன்னு சொல்லி ரெண்டு நாளக்கி ஒருக்கா அந்த வேக்யூம் க்ளீனரைப் போட்டு நா, எம் பொண்டாட்டி, புள்ளகுட்டி எல்லாரும் சர்ர்ர்புர்ர்ர்ருன்னு உறிஞ்சி உறிஞ்சி தூசி தூசியாக் குப்பையில கொட்டுனது என்ன? கார்ப்பெட்டுல சோறு போட்டு சாப்பிட முடியாட்டியும், கீழ விழுகுற ரஸ்க்கை டவுசர்ல தொடச்சுட்டு சாப்புர்ற அளவுக்கு சுத்தமா வச்சிருந்தமுய்யா. என்ன செய்வான் பனையேறி? ஒடனே எகிறிக் குதிச்சான். எங்க? ஊட்டுக்குள்ளதான் குதிக்கிறதெல்லாமுன்னு ஊட்டுக்காரம்மா சொல்லும். அதெல்லாம் கண்டுக்கிடாதீங்க. நானும் கலெக்ஷன் காரன்கிட்ட எகிறிப் பாத்தேன், கேட்டுப் பாத்தேன், கெஞ்சிப் பாத்தேன், சாபம் கூட வுட்டேன். ம்கூம், எந்த ஊரு வந்து பாருன்னுட்டானே. மசியல. சரி போனா போற, இன்னக்கே கட்டுனா 20% கழிச்சுத் தாறேன்னான். அடப் பாவிகளா, ஏண்டா பனையேறியோட காசுக்கு இப்படிப் பறக்குறீங்கன்னு நானும், சரிடா யோசிச்சுச் சொல்லுறேன்னு சொல்லிட்டு இன்று போய் நாளை பா அப்படின்னு அனுப்பிட்டேன். எனக்குத் தாங்கல. இருந்த பழைய ஒயினையெல்லாம் ஊத்திக் குடிச்சும் கோவம் அடங்கல.

சரின்னு நெட்டுல கொடஞ்சு, நம்ம சுத்துப்பட்டுப் பயக்களைக் கேட்டுப் பாத்தேன். ஒரு அம்மா சொல்லிச்சு, நீ வாதாடிக்கு ஒரு மணி நேரத்துக்கு 200 டாலர் குடுக்கணும். அதுக்குப் பேசாம அவன் கேக்குறதக் கட்டிரலாம்னுச்சு. இன்னொருத்தரு சொன்னாரு நீ Small Claims Court, Better Business Bureauக்குப் போன்னு. இந்த Small Claims Court இருக்கு பாருங்க, அதுல நீங்க யாருகிட்ட இருந்தாச்சும் காசு வாங்கணும்னாதான் புகார் குடுக்கலாம், அதுவும் $7500க்குள்ள இருக்கணும். எவனாச்சும் உங்க காசைப் புடுங்க வந்தா நீங்க அங்க போக முடியாது.

நெட்டுல போட்டிருக்கான், வெவரமா, அதாவது வீட்டுக்காரங்க உங்களோட செக்குரிட்டியை வீடு காலி பண்ணின, அல்லது நீங்க கேட்ட 30 நாளைக்குள்ள குடுத்துரனும்னு. ஆனா எங்காளு என்ன பண்ணினான்? கிட்டத்தட்ட 3 மாசம் கழிச்சு கலெக்ஷன் ஏஜென்சி மூலமா கடுதாசி அனுப்புறான். அ...இன்னொன்னும் மறந்துட்டனே, 150 டாலரா வாங்குன செக்குரிட்டியை, அந்தா பெரிய செக்கை, மறைச்சுட்டு, 100 டாலருதான்னு சொல்லுறான் அந்தப் புண்ணாக்கு. பாத்தா South Carolina Department of Consumer Affairs லயும் புகார் செய்யலாமுன்னு பாத்தேன். நம்ம நண்பர் ஒருத்தரு சொன்னாரு இன்னொருத்தரும் அங்கதான் முந்தி ஒருக்க முறையிட்டு நீதி வாங்குனாருன்னு. ஒடனே அவங்களுக்கு இந்த மாதிரி, இன்ன வெவரம், இதான் நடந்துச்சுன்னு வெலாவரியா எழுதிப்புட்டு ஒக்காந்திருக்கேன். பதில் தெரியுறப்ப பாகம்-2 ஐப் போடுறேன்.

ஆனா ஒன்னு, வாடகை வீட்டுல இருக்குறவங்க அந்தந்த மாநிலத்து விதிமுறைகளை நல்லாப் படிச்சுக்கங்க (ஹி ஹி சொல்வது யார்க்கும் எளியவாம்). அல்லது சுருக்கமா சொல்லுறேன் கேட்டுக்கங்க,

கார்ப்பெட்டுக்கோ, சுவத்துக்கோ, சன்னலுக்கோ, இன்ன பிற வஸ்துக்களுக்கோ 'சாதாரணமா' நடக்குற தேய்மானத்துக்கு (normal wear and tear) நீங்க காசு கட்ட வேண்டியது இல்லை. புள்ளைக பெயிண்டைக் கரைச்சு கார்ப்பெட்டுல ஊத்துனாக்கூட அது 'சாதாரணம்' அப்படிங்கறாங்க.

வீடு எடுக்குறப்ப நல்லா உத்து உத்துப் பாருங்க, எதாச்சும் ஓட்டை ஒடைசல் இருந்தா எழுதி ரெண்டு பேரும் கையெழுத்துப் போட்டு வச்சுக்கங்க. அட நீங்களும் ஒங்க வீட்டுக்காரம்மா/ய்யா இல்லங்க, வீட்டு முதலாளியச் சொல்லுறேன்.

அதே மாதிரி வீட்டைக் காலி பண்ணுறப்போ அந்த ஆளுகளைக் கூட்டிட்டு வந்து காட்டுங்க. அப்பயும் ஒரு கையெழுத்தை வாங்கிக்கங்க.

எந்த வீட்டுக்காரனையும் நம்பாதீங்க, பூராப் பயலும் சமயம் கெடச்சா ஏய்ச்சுப்புடுவாங்ய.

மறக்காம செக்குரிட்டியக் குடுடா புண்ணாக்குன்னு கேளுங்க (ஆனா ஏடாகூடமாப் பேசிடாதீங்க, ஆமா). 30 நாளைக்குள்ள செக்கு உருளலைன்னா கூப்பிட்டுக் கேளுங்க. பனையேறியாட்டம் சோம்பேறியா இருந்துட்டு அப்புறமா குதிக்காதீங்க.

சரியா, அப்ப வர்ட்டா!