Wednesday, November 10, 2010

Charleston, S.C. Named Friendliest City in America: அட! நம்மூரு!

எங்க ஊரு ரொம்ப நட்பான ஊரு, அதாங்க ப்ரெண்ட்லியான ஊருன்னு மறுபடியும் பேரு வாங்கியிருக்குங்கோ! செய்தியை இங்க பாருங்க:  எங்க ஊருக்கு இதெல்லாம் சாதாரணமுங்க! இங்க வந்து பாருங்க, அப்ப தெரியும் நாங்க எம்புட்டு பாசக்கார பயபுள்ளங்ய அப்படின்னு! அப்ப, பெட்னா 2011க்கு உங்களை நம்ம ஊருல பாக்கலாம்னு சொல்லுங்க!

Sunday, October 31, 2010

பேரவைத் திருவிழா 2011 - ஏற்பாடுகள் - தொடக்கக் கூட்டம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24ஆவது ஆண்டுவிழாவினை நடத்தும் இனிய பொறுப்பினை, பேரவை எங்களது பனைநிலத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்திருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குன்றாது என்பதனைப் போல, சிறிய சங்கமாக இருந்தாலும் எங்களது ஒற்றுமையையும், செயலூக்கத்தையும் முன்வைத்து எங்களது தமிழ்ச் சங்கத்தை இப்பணிக்காகத் தேர்ந்தெடுப்பதாகப் பேரவை தெரிவித்திருந்தது. இது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி. விழாவுக்கு இன்னும் 7-8 மாதங்கள் உள்ள நிலையில் நேற்று ஒரு கூட்டத்திற்கு எங்கள் தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டமானது, இதுவரை செய்யப்பட்ட வேலைகள் மற்றும் இனிவரும் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கான கூட்டமாகும். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளப் பேரவையின் முன்னாள் தலைவர், இந்நாள் தலைவர், அகஸ்டா, கொலம்பியா, சார்லெட், ராலே, கிரீன்வில் மற்றும் மினசோட்டா ஆகிய தமிழ்ச் சங்கங்களைச் சார்ந்த நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள். 

அறிமுகப் படலம்
விழாவானது மதியவுணவுடன் தொடங்க ஏற்பாடாகியிருந்தது. பெரும்பாலான உணவுகளை நண்பர்களே தயாரித்திருந்தாலும், சிலவற்றை உள்ளூர் உணவகத்திலிருந்து ஏற்பாடு செய்திருந்தோம். அது வருவதற்குச் சற்றே தாமதமானதால் வந்திருந்தோர் அனைவரையும் மேடைக்கு வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டினோம். ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து சுருக்கமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டது காண்பதற்கு இனிமையாக இருந்தது. ஒவ்வொருவரும் வரும்போதும், பேசும்போதும், செல்லும்போதும் நகைச்சுவையோ, பெருமிதமோ, மகிழ்வோ, புதுமையோ ஏதோவொன்று அந்த அரங்கில் ததும்பியதைக் காணமுடிந்தது. சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்த உணவகத்துக்காரர் காரை சற்றே விரைவாக ஓட்டிவிட்டார்போலிருக்கிறது. அவரைக் காவலரொருவர் நிறுத்தி டிக்கட்டைக் (தண்டம்) கொடுத்து அனுப்பிவிட்டாரென்று செய்தி வந்தது. கிடைத்த இடைவெளியை நிரப்ப யுவா வந்து இரண்டு பாடல்களைப் பாடினார். பிறகு நண்பர் பழமைபேசி தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிச் சிலநேரம் உரையாற்றினார். வலைப்பதிவுகளின் தேவைகளைக் குறித்து அறிந்துகொள்ள இச்சிற்றுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நேரத்திலேயே உணவும் வந்துவிட விருந்து தொடங்கியது. அறுசுவை உண்டி அருமையாயிருந்தது. கண்ணன் ஆர்வம் பொங்க, தனது புகைப்படப் பெட்டியில் லென்சுகளை மாற்றி மாற்றிப் போட்டுப் படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். 

கூட்ட நிகழ்வுகள்
தமிழ்த்தாய் வாழ்த்துடனும், அனைவருக்குமான வரவேற்புடனும் கூட்டத்தினை பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் ஆனந்தி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பேரவை விழா 2011க்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி குப்புசாமி அடுத்து வந்து விழாவுக்காக எங்களது தமிழ்ச்சங்கம் செய்து முடித்திருக்கும் பணிகளையும், இனி செய்யவேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார். அப்பணிகளின் மேல் விபரங்களை முனைவர் சுந்தரவடிவேல், திரு நதீம் பாஷா, மருத்துவர் அன்புக்கரசி ஆகியோர் தொகுத்தளித்தனர். இதுவரை தொடங்கப்பட்டுள்ள பணிகள்: 

அரங்கம்: நமது விழா ஜூலை 1 முதல் ஜூலை 4 வரை நடக்கப் போகிறது. விழாவுக்கான அரங்கமாக கில்யார்டு அரங்கம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2700 பேர் அமரக்கூடிய அரங்கினை நிரப்புவது நம் குறிக்கோள். இந்த விழா நடப்பதற்கான அனைத்து வசதிகளுடனும் சார்லஸ்டன் மைய நகரில் அமைந்திருக்கும் அழகிய அரங்கம் இது. 

நட்சத்திர மாலை நடக்குமிடம்: புகழ்பெற்ற தென்கரோலினா மீனகம். ஜூலை 1, 2011 மாலை 6-11  மணியளவில் இங்குதான் கொடையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் வரவேற்பு நடக்கவுள்ளது. 

சமையலகம் மற்றும் உணவு ஏற்பாடுகள்:
சார்லஸ்டனில் உள்ள டுவால் என்ற புகழ்வாய்ந்த நிறுவனம். இவர்கள் நாம் தேர்ந்தெடுக்கவிருக்கும் பாரம்பரிய தென்னிந்திய உணவகத்துடன் இணைந்து உணவு ஏற்பாடுகளைச் செய்வார்கள். 

வாணிகக் கண்காட்சி:
அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு வாணிக நிறுவனங்களை வரவழைத்து ஒன்றுகூட்டி, வாணிக உறவுகளை மேம்படுத்தும் ஒரு முயற்சி. முனைவர் விஸ்வநாதன் மற்றும் திரு நதீம் பாஷா இருவரது உழைப்பாலும் மெருகேறி வருகிறது. 

தொடர்மருத்துவக் கல்வி: இது தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்துடன், பேரவை இணைந்து நடத்தும் ஒரு மருத்துவக் கல்வி நிகழ்ச்சி. பெரும்பாலான மருத்துவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சி. இதில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைப் பேரவையின் சார்பில் மருத்துவர் குப்தாவும், நமது தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மருத்துவர் அன்புக்கரசியும் ஒழுங்கு செய்கிறார்கள். வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைப் பற்றிய கருத்தரங்கமாக இது இருக்கும்.

ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி அவர்கள், பல்வேறு விழா ஏற்பாட்டுக் குழுக்களிலும் நமது சங்கத்தவர்களும், அண்டைய தமிழ்ச் சங்கத்தின் நண்பர்களும் முன்வந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினார். 

அடுத்ததாக பேரவையின் தலைவர் முனைவர் பழனி சுந்தரம் உரையாற்றினார். அவர் பேரவையின் வரலாறு, இதுவரை நிகழ்ந்த விழாக்களிலிருந்து கற்ற பாடங்கள், கவனமாக இருக்க வேண்டிய இடங்கள், நிதி நிலை பற்றிய விழிப்புணர்வு, பேரவை விழாக்களின் சிறப்பம்சம் ஆகியன குறித்து விரிவாக உரையாற்றினார். இவரது உரை பலருக்கும் பேரவையினைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள உதவியது. 

பிறகு பேச வந்தவர் பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா. செயல்வீரர் என்று புகழப்படுபவர். இவர் பேசியது ஐந்து மணித்துளிகளேயானாலும், தான் சொல்ல வந்ததை அழுத்தமாகப் பதியவைத்துவிட்டுச் சென்றார். மொழிக்காகவும், இனத்துக்காகவும், மனிதவுரிமைக்காகவும் நம் உழைப்பும், நேரமும், நிதியும் பயன்படுதலே நம் வாழ்விற்கு நிறைவையும், அழகையும், அர்த்தத்தையும் தரும் என்பது இவர் சொன்ன செய்தியாக இருந்தது.

நிதி திரட்டல்

பேரவை விழாவுக்கு நிதி திரட்டுதலும் இக்கூட்டத்தில்தான் தொடங்கியது. கொடையினை முனைவர் முத்துவேல் செல்லையா முதலில் வழங்க, பலரும் வள்ளல், கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல் என்ற நிலைகளில் தத்தமது நன்கொடைக்கான உறுதியை வழங்கினார்கள். சன் பிக்சர்ஸ் மற்றும் மருத்துவர் அரசி ஆகியோர் ஆதரவில் நிகழ்ந்த எந்திரன் திரையிடலின் மூலமாகக் கிடைத்த $1300க்கான காசோலையைத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் இப்பேரவை விழாவுக்காக அன்பளித்தார்கள். வெளியூர் நண்பர்கள் பலரும் நிதி வழங்கும் படிவத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார்கள். இத்தனை கொடையுள்ளங்களையும் கண்டபோது, முனைவர் பழனி சுந்தரம் கூறிய திருக்குறள் நினைவுக்கு வந்தது
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"


பல செயல்திட்டங்களுடனும், நிறைவுடனும், பணிபுரிந்திடத் துடிக்கும் ஊக்கத்துடனும் அனைத்து நண்பர்களும் அமைந்த மனநிலையில், திருமதி வளர்மதி நன்றி நவில, மணம் மிக்க காபியுடன் விழா இனிது நிறைவு பெற்றது. இனிவரும் நாட்களில், உங்களுக்குப் பேரவைத் திருவிழாவினைக் குறித்த செய்திகளை வழங்கிக் கொண்டே இருப்போம். வருகைதரத் தவறாதீர்கள்! 


நமது நண்பர் பழமைபேசி இக்கூட்டத்தைப் பற்றிச் சுடச் சுட எழுதிய இடுகையை இங்கே காணலாம். 
நண்பர் கண்ணன் எடுத்த படங்களில் சிலவற்றை இங்கே காணலாம். 
நன்றி!

எழுதியவர்: பனையேறி

Sunday, July 25, 2010

அனைவரும் வாருங்கள்! கோடையில் ஆடுங்கள்!

என்னடா இந்த தடவை வெய்யில் இந்தக் கொதி கொதிக்கிது, இதுல போயி ஆடுங்கன்னு பனையேறி சொல்லுறாரே, எதுனா சதி இருக்கான்னு சொல்லுவீங்க. அதுக்காகத்தான் அருமையா நிழல் இருக்கிற ஒரு சோலைக்குள்ள நம்ம கோடை விழா ஏற்பாடாகி இருக்கு. வெய்யில் வேணும்னாலும் இருக்கு, நெழல் வேணும்னாலும் இருக்கு. உங்களுக்குப் புடிச்ச எடத்துல விளையாடலாம். மோரும், நீரும், பழரசங்களும் பருக இருக்கும். பழகத் தோழர்கள் இருப்பார்கள். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உற்சாகமளிக்கும் விளையாட்டுக்கள் இருக்கும். யாரோ கபடி, கைப்பந்து என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் என்னென்ன விளையாட்டெல்லாம் முளைக்குமோ யார் கண்டது! கூடவே வரும் ஆண்டு பேரவை நிகழ்ச்சியைக் குறித்த சிறு கலந்துரையாடலும் இருக்கும். அக்கம்பக்கத்து மாநிலங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுங்கள். அனைவரையும் அழைத்து வாருங்கள்! சந்திப்போம் கோடை விழாவில்! உங்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களையும், உணவுகளையும் அனைவருடனும் பகிரலாம்!

எங்கே:
Palmetto Islands County Park, Big Oak Shelter
444 Needlerush Pkwy
Mount Pleasant, SC 29464
எப்போது: ஆகஸ்ட் 8, ஞாயிறு காலை 10:00 முதல் மாலை 5:00 வரை   
தொடர்புக்கு:     843 737 1296

Sunday, July 18, 2010

பேரவை விழாவில் முத்திரை பதித்த பனைநிலம்

கனெக்டிகட்டில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவில் நம் சங்கத்தின் சார்பில் சுமார் 15 பேர் கலந்துகொண்டோம். சுமார் 2000 பேர் வந்திருந்த விழாவில் இந்தப் பதினைந்து பேர் குழு பதித்த முத்திரை பலமானது, நம் சங்கத்துக்குப் பெயர் சேர்த்தது! முதல் நாள் நிகழ்ச்சியில் நம் சங்கம் நிகழ்த்திய "யார் தமிழர்" தெருக்கூத்து நடைபெற்றது. இதன் முழு வசனம் மற்றும் பாடல்களை வேண்டுவோர் பனைநிலத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நம் கலை இளவரசன் வருவதாக இருந்து பிறகு வரவியலாமல் போனது மாபெரும் வருத்தமென்றாலும், ஒருவாறு சமாளித்துவிட்டோம். ஹரியும், சந்தோஷும் ஒரு புறம் நின்று எடக்கு மடக்காகக் கேள்விகளைப் பாடியும், குத்தாட்டம் ஆடியும் கேட்டுக் கொண்டிருக்க அதற்குத் தக்க பதில்களை சூரியன், சுந்தரவடிவேல் மற்றும் அசத்தல் நடிகர் தாமரையாரும் பதில் சொல்ல, நடுவே வந்து இளங்கோ, சிபி, மாசிலன், நெல்லி மற்றும் ராஜசேகர் ஆகியோர் தம் பங்குக்குக் கலக்கிச் செல்ல, பிறகு பறை இசையும், பாடல்களுமாய்த் தெருக்கூத்து முடிந்தது. மேடையின் பின்னேயிருந்து எங்களை உற்சாகப்படுத்திய முனைவர் தண்டபானி மற்றும் ஜானகிக்கு எங்கள் நன்றிகள். இத் தெருக்கூத்தின் ஆக்கத்திலும், வெற்றியிலும், இதில் நடித்த அத்தனை பேருக்கும், பார்த்துக் கருத்துக்களைக் கூறிய அத்தனை நண்பர்களுக்கும் பங்குண்டு. அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல! இன்னும் சற்று நேரம் பறையடித்திருக்கலாம் என்ற ஒரு சிறு குறை கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருந்தது. அக்குறையினை அடுத்து வந்த இரு நாட்களிலும் தீர்த்துவிட்டோம். எப்படி என்கிறீர்களா? Boycott Sri Lanka என்றொரு சிறு கடையை USTPAC அங்கே வைத்திருந்தது. அங்கே Boycott Sri Lanka என்று அச்சடித்த சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டோம். அக்கடையின் நண்பரைக் கொஞ்சம் சட்டைகளையும் காரொட்டிகளையும் (bumper stickers) எடுத்துவரச் சொன்னோம். நாங்கள் பறையடிக்க, அவர் தெருவில் கூவிக் கூவிச் சட்டைகளை விற்க மக்கள் அனைவரையும் அது கவர்ந்தது. கடையில் சென்று சட்டையை வாங்க முன்வராத பலரும் கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அப்படியே அடித்துக் கொண்டே உணவருந்துமிடத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். இறுதியில் USTPAC நண்பர் தழுவிக் கொண்டார். பறையொலியில் வாட்டர்பரியின் தெருக்கள் துள்ளின. கடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்த்தனர். நின்றவர்கள் சற்றே ஆடினர். ஆடியவர்களுக்கு மேலும் பரவசம். சிலர் பறையைத் தொட்டனர், சிலர் அடித்துப் பார்க்கலாமா என்றனர். தமிழர்களின் ஆதி இசையான பறை, தொல்காப்பியத்திலும் சொல்லப் படுவது. ஒரு சிறு கருவி இத்தனை உள்ளங்களையும் ஆட்டுவிப்பதால்தான் அது இத்தனைக் காலங்களையும் கடந்து வாழ்கிறது. முதல் நாளன்றே அமைப்பாளர்களில் ஒருவர் வந்து, நாளை மதுரைவீரன் தெருக்கூத்து நடக்கப் போகிறது, அதிலே மதுரைவீரனை ஊர்வலமாக அழைத்துவரும் ஒரு காட்சி வரும். அதிலே உங்கள் குழு பறையடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது ஒரு பெரும் அங்கீகாரமாக எமக்குப் பட்டது.

நம் சங்கத்தினர் பலரும் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்வு 'இலக்கிய வினாடி வினா'. இது பலருக்கும் புதிய இலக்கியச் செய்திகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்தப் பல்லூடக நிகழ்ச்சி அனைவரையும் ஆவலோடு அமர்ந்து பார்க்க வைக்கும் சுவை மிகுந்தது. இவ்வாண்டு வீ.ப.கா. சுந்தரம் அணி மற்றும் விபுலானந்தர் அணி என்ற இரு அணிகள் இருந்தன. கடுமையான போட்டியில் விபுலானந்தர் அணி வென்றது. இருப்பினும் நிகழ்ச்சியில் யாரோ குறிப்பிட்டது போல, யார் வென்றாலும் வெற்றி தமிழுக்கே என்பது பொருத்தமாகத் தோன்றியது. குழந்தைகள் திருக்குறள் போட்டி, தமிழ்த் தேனீ வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தினை முனைவர் தண்டபானி அவர்கள் நிகழ்த்தினார்கள். நிறைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த ஆண்டு இன்னும் பலரும் வருவார்கள் எனத் தோன்றுகிறது.

அடுத்த நாள் மதுரைவீரன் தெருக்கூத்து! நாங்கள் பறையை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என ஒத்திகை பார்க்க ஒத்திகைக் கூடத்துக்குச் சென்றோம். அங்கே குழந்தைகள், ஆடவர், பெண்டிர் என ஒரு பெரும் குழு ஊர்வலத்தில் ஆடிக் கொண்டு செல்லத் தம்மைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பறையிசையினைக் கேட்டவுடனேயே துள்ளல். அனைவரும் ஆடிக் களித்தனர். நியூஜெர்சியிலிருந்து செல்வன் என்றொரு நண்பர் வந்திருந்து பறையினை எங்களோடு இணைந்துகொண்டு அடித்தார். அவர் ஒரு அருமையான இசைஞர். ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு ஒத்திகைக் கூடத்துக்கு வந்த இளையோர் சங்கத்தினர் ஒரு பதினைந்து பேர் பறையிசைக்கச் சொல்லிக் கேட்டு ஆடி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் இசைக்கவும் ஆர்வம் காட்டினர். இளையோர்களிடத்தில் இவ்விசைக்கு இருக்கும் பெருமதிப்பையும், ஆர்வத்தையும் உணர முடிந்தது. அடுத்த ஆண்டு அவர்களுக்காகத் தனியாக ஒரு நடனத்துக்கு இசைப்போம் என்று கூறிவந்திருக்கிறோம்.

மதுரைவீரன் தெருக்கூத்து அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நடிகர்களின் வேடமும், துள்ளலும், சுழற்சியும், வசனங்களும், பாடல்களும் காண்பவரை இழுத்தன. சிலருக்குப் புதுமை. சிலருக்கு அந்தக் கால நினைவுகள். குழந்தையாக இருந்த மதுரைவீரன் பெரியவனாகி மேடையிலே தோன்றவேண்டும். அப்போது மேடையின் பின்புறத்தே இருந்து தோன்றாமல், பார்வையாளர்களின் கடைசி வரிசையிருக்கும் வாசல் வழியாக வருவதாக ஏற்பாடு. அங்குதான் நம் பறையும் காத்திருக்கிறது. 'இதோ வருகிறார் மதுரைவீரன்' என்று மேடையிலே வசனம் வந்ததும், அதிர ஆரம்பித்தது பறை. மேடையைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் மொத்தமும் பின்னே திரும்பியது. மதுரைவீரன் வேடத்தோடு நின்று ஆட, முன்னே பறையும், தவிலும் ஒலிக்க, கூட்டம் ஆட அது ஒரு பெரும் ஊர்வலத்தைக் கண் முன் நிறுத்தியது. பார்வையாளர்களில் பலரும் ஆடுவதற்கு ஓடி வந்தனர். அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில் மேடையிலே ஒரு அம்மாவுக்குச் சாமி வந்துவிட்டது (அல்லது அப்படி ஆடினார்!). ஒருவாறாகக் கூட்டத்தைக் கடந்து மதுரைவீரனை மேடையில் ஏற்றிவிட்டோம் நாங்கள் இறங்கிக் கொள்ளக் கூத்து தொடர்ந்தது.

அதன் பிறகு இன்னிசை நிகழ்ச்சிக்கு நடுவே அடுத்த ஆண்டு பேரவை விழாவுக்கு நம் பனைநிலம் தமிழ்ச் சங்கத்துக்கு அனைவரையும் வரவேற்பதற்காக நம் சங்கத்தின் சார்பாகச் சென்றிருந்தவர்கள் மேடையேறினோம். பறையோடுதான். அடுத்த ஆண்டு பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவையின் புதிய துணைத்தலைவருமான முனைவர் தண்டபானி அவர்கள் சுருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் நமது அழைப்பிதழை விடுத்தார். வணக்கம் கூறி மேடையிலிருந்து அகல முயன்றோம். கூட்டம் விடவில்லை, மேளம், பறை என்று குரலெழுப்ப மறுபடியும் ஒரு முழக்குப் போட்டுவிட்டுத்தான் இறங்கினோம்!

பல சங்கங்களிலிருந்து வந்திருந்த நண்பர்களும், புதிதாய்க் கிடைத்த நண்பர்களும் நம்மூர்த் திருவிழாவுக்கு வரவும், நம்முடன் சேர்ந்து இவ்விழாவை ஒழுங்கு செய்யவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஒரு சிறந்த விழாவைக் கண்டு களித்த மனநிறைவோடும், நம் பனைநிலத்தின் முத்திரையை அவ்விழாவில் பதித்த பெருமிதத்தோடும், சீரும் சிறப்புமாக நம்மூர் விழா நடந்தேறும் என்ற உறுதியோடும் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்துக்கும், பேரவைக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினோம்!

முக்கியமான பின் குறிப்பு: வரும் ஆகஸ்டு 8ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை பனைநிலத்தின் கோடை விழா நிகழ இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். இவ்விழாவின்போது வரும் பேரவை விழாவினைச் சிறப்பாக நடத்துதற்குரிய திட்டக் கூட்டமும் நிகழும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.                               ========================================================================எழுதியவர்: பனையேறி (கண்ணன் வராததால் படங்கள் இல்லை :))

Sunday, January 31, 2010

பனைநிலம் தமிழ்ச்சங்கப் பொங்கல் விழா 2010




வீட்டு முற்றத்தை சாணம் கொண்டு மெழுகி அலங்கரிக்க!

காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க !
ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க!
செவ்விதழில் செங்கரும்பு தித்திக்க !
பொலிவுடனே பொங்கியதே பொங்கல்
நம் மனப்பானை மகிழ்வுடனே பொங்கிடவே
சார்லஸ்டன் மக்கள் அனைவரும் ஆனந்தமாக கொண்டாடினோமே!

-பொறுங்க பொறுங்க!
இப்பிடியெல்லாம் சார்லச்டன்ல பொங்கல் விழா நடந்ததுன்னு சொல்லணும்னு ஒரு ஆசைதான். ஆனா அமெரிக்காவில இப்பிடியெல்லாம் காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க, ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க, பொங்கல்விழாவ நடத்துனா இந்தஊரு போலீஸ்காரங்க அவங்களோட வாகனங்களோட அலாரம் கிணுகிணுக்க, நம்ம இதயத்துடிப்பு படபடக்க, நாடி நரம்பெல்லாம் துடிதுடிக்க அப்பிடியே அள்ளிட்டு போயிருவாங்க! அதனால மகாசனங்களே இதெல்லாம் இல்லாமத்தான் நாம பொங்கல் விழாவை இங்க நடத்தியாகணும்.

சரி! அதுக்காக அப்பிடியே நாம விட்டுற முடியுமா...நம்ம ஆளுங்க எங்க போனாலும் நம்ம பண்பாட்டு அடையாளங்கள மறந்துற முடியுமா?கலாச்சாரத்தை கொஞ்சமாவது பிரதிபளிக்கணும் இல்லையா?...அதுவும் நம்ம சார்லஸ்டன் பனைநிலம் தமிழ்ச் சங்கம்னா சும்மாவா?

பொங்கல்விழா பரபரப்பு பலவாரங்களுக்கு முன்னாடியே ஆரம்பம் ஆயிடுச்சு! கலைநிகழ்ச்சிகள் அருமையாக வர திட்டம் போட்டாச்சு. அறுசுவை உணவுப் வகைகளாகட்டும், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளாகட்டும், பட்டிமன்றமாகட்டும், பாட்டுமன்றமாகட்டும், குழந்தைகளோட நிகழ்ச்சிகளாகட்டும், எல்லாம் அருமையா தயாராகிட்டு இருந்தது.

பொங்கல்விழா நடக்கிற சனிக்கிழமை வந்திடுச்சு.வருணபகவான் வழக்கம்போல கோவிச்சுட்டார். நம்மளுக்கு வார விடுமுறைன்னாலே அவருக்கு கொஞ்சம் பொறுக்காது - அப்பிடியே வானத்திலிருந்து இறங்கிவந்து குசலம் விசாரிச்சுட்டு போவார். இந்த மாதிரி விழான்னா கேட்கவா வேணும் - அவரும் ஒரு ஆட்டம் போட்டுட்டார். அதப்பாத்து நம்ம பயப்பட்டுருவோமா என்ன?...இடியா, புயலா, மழையா,பனியா நம்மை ஒன்றும் செய்யாதே.ன்னு! ஜோரா வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

இந்த தடவையும் டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே வித்யா - கணேஷ் உதவியுடன் தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம். மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான வசதி, ஒலி, ஒளி அமைப்பு, மற்றும் உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம். அஞ்சு மணிக்கே ஆளுக அசத்தலா வேலைகள பாக்க ஆரம்பிச்சாச்சு. கொஞ்ச நேரத்தில பொங்கல் திருவிழாக்கூட்டம்.....எங்க பாத்தாலும் கலகலப்பா இருந்துச்சு.

இந்ததடவை அறுசுவை உணவு விருந்து விழா ஆரம்பமே அளிக்கப்பட்டது. மக்கள் தூதுகலத்தோட பதார்த்தங்களை ரசிச்சு ருசிச்சுட்டாங்க. வழக்கம் போல கணவன்மார்கள் பரிதாமாக பந்திக்காக காத்திருக்க, மனைவிமார்கள் பந்திக்கு முந்தி ஒரு கட்டு கட்டுனாங்க! ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க! அதுசரி ஆம்பிளைங்க? மிச்சம் சொச்சம் எதுவும் கிடைக்காம போயிருமா என்ன. நம்பிக்கை தான் வாழ்க்கை இல்லையா? அதுக்கு பிறகு வந்த சில கணவன்மார்களுக்கு மிச்சம் மீதி கூட கிடைக்கலேன்னு 'வருத்தப்படாத வாலிபர்கள்' பலபேரு பரவலா பேசிக்கிட்டாங்க.




அதைவிட அருமையான விருந்து கலைநிகழ்ச்சிகளோட வடிவில் விழா மேடையில காத்துகிட்டு இருந்தது. ஆனந்தி விழாவோட முன்னுரையை அளித்தார். விழாவை செந்தில் மற்றும் வானதி அருமையா தொகுத்து வழங்குனாங்க.







தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்துவிளக்கு ஏற்றி விழாவ தொடங்கினாங்க. கடவுள் வாழ்த்தாக திருக்குறளை இனிமையா அஸ்ரிதா, அமிர்தா, மாசிலன், மற்றும் கோகுல் பாடினது செவிக்கு இசையா ஒலித்தது. திருக்குறள் உலகத்துக்கே பொதுமறை. நம்ம குழந்தைகளுக்கு அது ஒரு ஊக்கமறையா இருக்குதுன்னு அதிலிருந்தே தெரிஞ்சது. அதற்கடுத்தபடியாக அவர்களே நாட்டுபுறப் பாடலுக்கு நடனம் ஆடி நாட்டுப்புறத்தையே நம்ம கண்ணுக்கு முன்னாடி வந்து நிறுத்துனாங்க.



கின்னஞ்சிறு சிட்டுக்கள் குட்டி குட்டி பாடல்களை மெட்டு மெட்டில்லாமல் பாடினாலும் எட்ட எட்ட இருக்கும் சொர்க்கம்கூட நம்ம பக்கத்துல வந்திரும் இல்லையா? அதைத்தான் நம்ம சிட்டுக்கள் பூரணி, ஜனனி, மோகன், இனியன் மற்றும் ஷிவானி அவங்கெல்லாம் வண்ணத்துப்பூச்சி பாடலை அழகா பாடினாங்க.




அதற்கடுத்து அமிர்தா மற்றும் அதிதி மாறுவேட நிகழ்சியில, புலியாவும், கிராமியப்பெண்ணாகவும் வந்து அசத்துனாங்க.



குழல் இனிது யாழ் இனிது, அதனினும் இனிது நம் பிரணாப் மற்றும் கோகுலுடைய வயலின் இசை இனிது. அவங்க வயலினுடைய இசை கேட்டு நம்ம மக்கள் மயங்கிட்டாங்க.






அடுத்து சிறுமி நிவேதாவோட நடனம். அவங்களோட அருமையான ஆட்டத்தைப் பாத்துகிட்டு இருந்த நம்ம சின்னப்பசங்க சும்மா இருப்பங்களா; விழா அரங்கத்துல அவங்களும் ஒரு ஆட்டம் போட்டாங்க. இந்தக் குழந்தைகளோட நிகழ்ச்சிகளைப் பார்த்து நம்ம மனசும் குழந்தைகளாவே மாறிடுச்சு.





அதுசரி, ஆட்டம் பாத்தாச்சு பாட்டு? இப்போ பாருங்க...ஒண்ணா ரெண்டா - நாலு பாடல்கள். கார்த்திகா, செந்தில், யுவராஜ் மற்றும் பிரகாஷ் தனித்தனியா பாடல்களைப் பாடி பார்வையாளர்களை இசைவெள்ளத்தில மூழ்கடிச்சாங்க.


















இசைவெள்ளத்தில மூழ்கி முத்தெடுக்க போன நம்மள அப்பிடியே மீட்டு வந்ததுதான் நாடகம். உழவர்களோட பிரச்சினைகளைப் பற்றிய இந்த நாடகத்தில் யுவராஜு, குமரன், பத்மநாபன், மற்றும் உதய் இணைந்து நடித்தது நம்முடைய கவனத்தை கவரும் வண்ணம் இருந்தது.





இந்த பொங்கல் நிகழ்ச்சிகளை சுவராசியப் படுத்துவதற்காகவே வினாடி விடை நிகழ்ச்சிகள் இடையே வழங்கப்பட்டது. வினாடி வினா பரிசு மழையில நனைவதற்காக குடைகளை வீசி எறிஞ்சுட்டு விடைகளை நிரப்பிகிட்டு இருந்தாங்க (எதுகை மோனையா இருக்குறதுக்காக, குடை, விடை அப்பிடின்னு இப்பிடின்னு இடையில வார்த்தைகள் வரும், அதெல்லாம் கண்டுக்காதீங்க மகா சனங்களே!). நிறைய வடைகளைச் சாப்பிட்டு மன்னிக்கவும் நிறைய விடைகளை சரியாகச் சொல்லி பரிசுகளை அள்ளிட்டு போனவங்க இளங்கோ மற்றும் பாட்ஷா.

நம்மூரு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது வந்து ஓரளவு சந்தோசமா இருக்கிற கணவன் மனைவிகளுக்கு இடையே குழப்பம் சச்சரவு உருவாக்குகிற நிகழ்ச்சி எது தெரியுமா?...கண்டுபிடுச்சுட்டீங்க....அதேதான் - ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சி. இதுவரை ஜோடிகளுக்கு குழப்பமே எதுவும் வரல்லயேன்னு, மூளையை கொஞ்சம் கசக்கி ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சிய தயாரிச்சிருந்தாங்க 'குழப்பப்படாத வாலிபர் சங்க' அன்பர்கள் . ஒவ்வொரு வீட்டுக்கும் வீடியோவோட படையெடுத்து கணவன் மனைவியை கேள்விக்கணைகளை தொடுத்து, பதிவு பண்ணி அதை சுவராசியமா குறுகிய காலத்துல ஸ்ரீநிவாசன், பிரியா, யுவராஜ், மற்றும் குமரன் குழுவினர் தயாரிச்சிருந்தாங்க.


அடுத்ததா வந்ததுதான் பட்டிமன்றம். பட்டிமன்றத்த பாட்டிமன்றமா மாத்திரக்கூடாதுன்னு கலகலப்பா இருக்கிற மாதிரி ஒரு தலைப்பு - "இல்வாழ்க்கையில் அதிகம் விட்டுக்கொடுப்பது ஆண்களா பெண்களா" ? தன் வாழ்க்கையே ஆன்மீகத்துக்காக விட்டுக்கொடுத்திருந்த சந்தோஷ்தான் நடுவர். ஆண்களே என்கிற அணியில செந்தில், ஹரி, மற்றும் யுவராஜு . பெண்களே அப்பிடின்ற அணியில உமா, வினு, மற்றும் சுபத்ரா. ஆரம்பம் முதலே அனல் பேச்சு. அதைகேட்டு பார்வையாளர்களோட மூச்சே நின்னு போச்சு.ன்னு சொல்ற அளவுக்கு இருந்தது இவர்களுடைய சொல்வீச்சு. இதப்பாத்தா சங்ககாலப் புலவர்கள் பலகூடி அருந்தமிழ்கவி ஆராய்ந்து, சொல்வித்தை விளையாடி பைந்தமிழ் வளர்த்த சான்றோர்கள் சபைபோல இருந்தது (சரி, சரி....ரெம்ப அதிகமா போயிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?! மிகைப்படுத்தாம சொல்லிர்றேன். உண்மையிலேயே ரசிக்கத்தக்க வண்ணம் இருந்தது!). முடிவில் நாட்டாமை சந்தோஷ், இல்லற வாழ்வில் ஆண் பெண் இருவருமே விட்டுக்கொடுப்பதால் இல்லற வாழ்வு வளம் பெரும் என தீர்ப்பு வழங்கினார். 





பிறகு குழந்தைகளுக்கான பரிசுச் சான்றிதல் வழங்குதல் - பரிசுகளை சண்முகராஜன் அய்யா வழங்கினார். நிறைவாக சேர்ந்து சிறுவர், சிறுமியர் அனைவரும் ஒரு கலக்கல் ஆட்டம் போட்டாங்க பாருங்க...அதைப்பார்த்த நம்ம மனசும் ஒரு ஆட்டமா, பாட்டமா பாடி மகிழ்ந்தது.







ஆக மொத்தத்தில பொங்கல் நிகழ்ச்சிகள் அத்தனையும் பார்த்து, ரசிச்சு, ருசிச்சு, கேட்டு, அறுசுவை உணவுகளை உண்டு, நம்ம மனசு செங்கரும்பக் காட்டிலும் சிறப்பா தித்திச்சது. பொங்கலைக்காட்டிலும் பலமடங்கு பொங்கி வழிஞ்சது. நம்ம உழவர்களோட பெருமிதமும், பூரிப்பும் நம்மோட இதயத்துல வந்து கலந்தது.

மக்களே, இன்னும் அருமையான ஒளிப்படங்களை நம்ம கண்ணன் எடுத்து கொடுத்திருக்காரு. அப்பிடியே நம்ம பனைநிலம் வலைத்தளத்திற்கு போயி எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்திருங்க!...(பனைநிலம் வலைத்தளம் செல்ல)

உங்க எல்லாருக்கும் மறுபடியும் உளங்கனிந்த இனிய பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் .

(மீண்டும் அடுத்த வலையேற்றத்தில் சந்திப்போம்)

என்றும் அன்புடன்


செந்தில்







(படங்கள்: கண்ணன்)