Sunday, October 31, 2010

பேரவைத் திருவிழா 2011 - ஏற்பாடுகள் - தொடக்கக் கூட்டம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24ஆவது ஆண்டுவிழாவினை நடத்தும் இனிய பொறுப்பினை, பேரவை எங்களது பனைநிலத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்திருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குன்றாது என்பதனைப் போல, சிறிய சங்கமாக இருந்தாலும் எங்களது ஒற்றுமையையும், செயலூக்கத்தையும் முன்வைத்து எங்களது தமிழ்ச் சங்கத்தை இப்பணிக்காகத் தேர்ந்தெடுப்பதாகப் பேரவை தெரிவித்திருந்தது. இது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி. விழாவுக்கு இன்னும் 7-8 மாதங்கள் உள்ள நிலையில் நேற்று ஒரு கூட்டத்திற்கு எங்கள் தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டமானது, இதுவரை செய்யப்பட்ட வேலைகள் மற்றும் இனிவரும் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கான கூட்டமாகும். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளப் பேரவையின் முன்னாள் தலைவர், இந்நாள் தலைவர், அகஸ்டா, கொலம்பியா, சார்லெட், ராலே, கிரீன்வில் மற்றும் மினசோட்டா ஆகிய தமிழ்ச் சங்கங்களைச் சார்ந்த நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள். 

அறிமுகப் படலம்
விழாவானது மதியவுணவுடன் தொடங்க ஏற்பாடாகியிருந்தது. பெரும்பாலான உணவுகளை நண்பர்களே தயாரித்திருந்தாலும், சிலவற்றை உள்ளூர் உணவகத்திலிருந்து ஏற்பாடு செய்திருந்தோம். அது வருவதற்குச் சற்றே தாமதமானதால் வந்திருந்தோர் அனைவரையும் மேடைக்கு வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டினோம். ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து சுருக்கமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டது காண்பதற்கு இனிமையாக இருந்தது. ஒவ்வொருவரும் வரும்போதும், பேசும்போதும், செல்லும்போதும் நகைச்சுவையோ, பெருமிதமோ, மகிழ்வோ, புதுமையோ ஏதோவொன்று அந்த அரங்கில் ததும்பியதைக் காணமுடிந்தது. சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்த உணவகத்துக்காரர் காரை சற்றே விரைவாக ஓட்டிவிட்டார்போலிருக்கிறது. அவரைக் காவலரொருவர் நிறுத்தி டிக்கட்டைக் (தண்டம்) கொடுத்து அனுப்பிவிட்டாரென்று செய்தி வந்தது. கிடைத்த இடைவெளியை நிரப்ப யுவா வந்து இரண்டு பாடல்களைப் பாடினார். பிறகு நண்பர் பழமைபேசி தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிச் சிலநேரம் உரையாற்றினார். வலைப்பதிவுகளின் தேவைகளைக் குறித்து அறிந்துகொள்ள இச்சிற்றுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நேரத்திலேயே உணவும் வந்துவிட விருந்து தொடங்கியது. அறுசுவை உண்டி அருமையாயிருந்தது. கண்ணன் ஆர்வம் பொங்க, தனது புகைப்படப் பெட்டியில் லென்சுகளை மாற்றி மாற்றிப் போட்டுப் படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். 

கூட்ட நிகழ்வுகள்
தமிழ்த்தாய் வாழ்த்துடனும், அனைவருக்குமான வரவேற்புடனும் கூட்டத்தினை பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் ஆனந்தி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பேரவை விழா 2011க்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி குப்புசாமி அடுத்து வந்து விழாவுக்காக எங்களது தமிழ்ச்சங்கம் செய்து முடித்திருக்கும் பணிகளையும், இனி செய்யவேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார். அப்பணிகளின் மேல் விபரங்களை முனைவர் சுந்தரவடிவேல், திரு நதீம் பாஷா, மருத்துவர் அன்புக்கரசி ஆகியோர் தொகுத்தளித்தனர். இதுவரை தொடங்கப்பட்டுள்ள பணிகள்: 

அரங்கம்: நமது விழா ஜூலை 1 முதல் ஜூலை 4 வரை நடக்கப் போகிறது. விழாவுக்கான அரங்கமாக கில்யார்டு அரங்கம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2700 பேர் அமரக்கூடிய அரங்கினை நிரப்புவது நம் குறிக்கோள். இந்த விழா நடப்பதற்கான அனைத்து வசதிகளுடனும் சார்லஸ்டன் மைய நகரில் அமைந்திருக்கும் அழகிய அரங்கம் இது. 

நட்சத்திர மாலை நடக்குமிடம்: புகழ்பெற்ற தென்கரோலினா மீனகம். ஜூலை 1, 2011 மாலை 6-11  மணியளவில் இங்குதான் கொடையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் வரவேற்பு நடக்கவுள்ளது. 

சமையலகம் மற்றும் உணவு ஏற்பாடுகள்:
சார்லஸ்டனில் உள்ள டுவால் என்ற புகழ்வாய்ந்த நிறுவனம். இவர்கள் நாம் தேர்ந்தெடுக்கவிருக்கும் பாரம்பரிய தென்னிந்திய உணவகத்துடன் இணைந்து உணவு ஏற்பாடுகளைச் செய்வார்கள். 

வாணிகக் கண்காட்சி:
அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு வாணிக நிறுவனங்களை வரவழைத்து ஒன்றுகூட்டி, வாணிக உறவுகளை மேம்படுத்தும் ஒரு முயற்சி. முனைவர் விஸ்வநாதன் மற்றும் திரு நதீம் பாஷா இருவரது உழைப்பாலும் மெருகேறி வருகிறது. 

தொடர்மருத்துவக் கல்வி: இது தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்துடன், பேரவை இணைந்து நடத்தும் ஒரு மருத்துவக் கல்வி நிகழ்ச்சி. பெரும்பாலான மருத்துவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சி. இதில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைப் பேரவையின் சார்பில் மருத்துவர் குப்தாவும், நமது தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மருத்துவர் அன்புக்கரசியும் ஒழுங்கு செய்கிறார்கள். வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைப் பற்றிய கருத்தரங்கமாக இது இருக்கும்.

ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி அவர்கள், பல்வேறு விழா ஏற்பாட்டுக் குழுக்களிலும் நமது சங்கத்தவர்களும், அண்டைய தமிழ்ச் சங்கத்தின் நண்பர்களும் முன்வந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினார். 

அடுத்ததாக பேரவையின் தலைவர் முனைவர் பழனி சுந்தரம் உரையாற்றினார். அவர் பேரவையின் வரலாறு, இதுவரை நிகழ்ந்த விழாக்களிலிருந்து கற்ற பாடங்கள், கவனமாக இருக்க வேண்டிய இடங்கள், நிதி நிலை பற்றிய விழிப்புணர்வு, பேரவை விழாக்களின் சிறப்பம்சம் ஆகியன குறித்து விரிவாக உரையாற்றினார். இவரது உரை பலருக்கும் பேரவையினைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள உதவியது. 

பிறகு பேச வந்தவர் பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா. செயல்வீரர் என்று புகழப்படுபவர். இவர் பேசியது ஐந்து மணித்துளிகளேயானாலும், தான் சொல்ல வந்ததை அழுத்தமாகப் பதியவைத்துவிட்டுச் சென்றார். மொழிக்காகவும், இனத்துக்காகவும், மனிதவுரிமைக்காகவும் நம் உழைப்பும், நேரமும், நிதியும் பயன்படுதலே நம் வாழ்விற்கு நிறைவையும், அழகையும், அர்த்தத்தையும் தரும் என்பது இவர் சொன்ன செய்தியாக இருந்தது.

நிதி திரட்டல்

பேரவை விழாவுக்கு நிதி திரட்டுதலும் இக்கூட்டத்தில்தான் தொடங்கியது. கொடையினை முனைவர் முத்துவேல் செல்லையா முதலில் வழங்க, பலரும் வள்ளல், கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல் என்ற நிலைகளில் தத்தமது நன்கொடைக்கான உறுதியை வழங்கினார்கள். சன் பிக்சர்ஸ் மற்றும் மருத்துவர் அரசி ஆகியோர் ஆதரவில் நிகழ்ந்த எந்திரன் திரையிடலின் மூலமாகக் கிடைத்த $1300க்கான காசோலையைத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் இப்பேரவை விழாவுக்காக அன்பளித்தார்கள். வெளியூர் நண்பர்கள் பலரும் நிதி வழங்கும் படிவத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார்கள். இத்தனை கொடையுள்ளங்களையும் கண்டபோது, முனைவர் பழனி சுந்தரம் கூறிய திருக்குறள் நினைவுக்கு வந்தது
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"


பல செயல்திட்டங்களுடனும், நிறைவுடனும், பணிபுரிந்திடத் துடிக்கும் ஊக்கத்துடனும் அனைத்து நண்பர்களும் அமைந்த மனநிலையில், திருமதி வளர்மதி நன்றி நவில, மணம் மிக்க காபியுடன் விழா இனிது நிறைவு பெற்றது. இனிவரும் நாட்களில், உங்களுக்குப் பேரவைத் திருவிழாவினைக் குறித்த செய்திகளை வழங்கிக் கொண்டே இருப்போம். வருகைதரத் தவறாதீர்கள்! 


நமது நண்பர் பழமைபேசி இக்கூட்டத்தைப் பற்றிச் சுடச் சுட எழுதிய இடுகையை இங்கே காணலாம். 
நண்பர் கண்ணன் எடுத்த படங்களில் சிலவற்றை இங்கே காணலாம். 
நன்றி!

எழுதியவர்: பனையேறி