Monday, July 2, 2007

சைப்ரஸ் பூந்தோட்டம்

ஒரு அழகான தோட்டம், இல்லை இல்லை, மிகவும் அழகான தோட்டம் நம்ம சார்லஸ்டன்க்கு மிக அருகிலேயே உள்ளது. என்ன நுழைவு கட்டணம் $10 செலுத்த வேண்டும். பிறகு உள்ளே படகு சவாரி செய்யலாம், மீன் காட்சியகம், வண்ணத்துப் பூச்சி கூடம், முதலை, ஆமை வீடு மற்றும் அழகிய பூந்தோட்டம் என எல்லாம் பார்க்கலாம். இந்த இடம் முன்பு சைப்ரஸ் மரங்கள் அடர்ந்த நெல் பயிரிடும் தோட்டமாக இருந்தது. பிறகு தான் அழகிய சைப்ரஸ் பூந்தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

வண்ணத்துப் பூச்சி கூடம்: இங்கு சார்லஸ்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பல விதமான வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவகையில் இங்கு பல்வேறு விதமான வண்ணத்துப் பூச்சிகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். வண்ணம் என்றால் வண்ணம் அப்படி ஒரு அழகுவண்ண வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டம், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியில் சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிட்டனர். நம்ம மாயோன் அண்ணன் மட்டும் சுமார் 500 படங்கள் எடுத்துத்தள்ளியிருக்கின்றார் என்றால் பாருங்களேன். (அவர் வீட்டுச்சுவற்றில் பல வண்ணத்துப்பூச்சி படங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, உங்களுக்கும் வேண்டும் என்றால் மாயோனை தொடர்புகொள்க). நம்ம பனையேறி அண்ணன் மட்டும் வத்திருந்தால் பல கவிதைகளை எழுதித்தள்ளியிருப்பார். இங்கு வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்படுகின்றது. வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்கை சுழற்ச்சி பற்றிய விளக்கப்படமும் உள்ளது. மேலும் உள்ளேயே தேனீ கூடு ஒன்றும் உள்ளது.





































மீன் காட்சியகம்: இது 1998ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பல வகையான சிறிய மற்றும் பெரிய வகை மீன்களும், பறவைகளும், பாம்பு இனங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பேசும் கிளி ஒன்றும் உள்ளது.
படகு சவாரி: அடர்ந்த சைப்ரஸ் மரங்களுக்கு இடையே கருப்பு நிற நீரில் நீங்களாகவும் படகு சவாரி செய்யாலாம் அல்லது அங்கு உள்ள ஒரு படகோட்டி துணையுடனும் சவாரி செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஓட்டலாம். ஆனால் எச்சரிக்கை: தண்ணீரில் கை வைத்து செல்ல வேண்டாம், முதலைகள் உள்ளது. மேலும் ஆமைகளும் பல வகை மீன்களும் உள்ளன, கரைகளில் அழகிய மலர்களை பார்த்துக்கொண்டே படகுசவாரி செய்யலாம்.
இங்கு உணவு அருந்துவதற்கு என்றே மிகவும் அருமையான இடம் உள்ளது. ஆனால் உணவு விற்பது கிடையாது. நாம் சமைத்து எடுத்து சென்ற உணவை அங்கே சாப்பிடலாம். பத்து டாலர் செலவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்து மகிழ சிறந்த இடம்.
முகவரி: 3030 சைப்ரஸ் கார்டன் சாலை, மாங்க்ஸ் கார்னர்,தென் கரோலினா.

எழுதியவர்: இன்பம், இனியாழ்.
படம்: மாயோன், ராதை.