Sunday, August 2, 2009

பனைநிலத்தில் கோடை விழா!

கோடைக்காலம் என்றாலே மனதெல்லாம் பள்ளி நாட்களில் நாம் கழித்த கோடை விடுமுறைகளே நிறைந்திருக்கின்றன. தெருவிலே கூவி விற்கும் முந்திரிப் பழம், நாவற்பழம், இலந்தைப் பழம், பழைய இரும்பு தகரத்துக்குக் கிடைக்கும் பேரீச்சம்பழம், யார் வீட்டு மரத்திலேயோ கல்லெறிந்து விழுத்தும் மாங்காய், சாலையோரத்துப் புளியமரத்தின் செங்காய்...ம் நாவில் எச்சில் ஊறுகிறது! தெருப் பிள்ளைகள் போதாதென்று வேற்றூர்களிலிருந்து வந்து சேரும் விருந்தாளிப் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடித் திரியும் இனிய பொழுதுகள் அவை. வெய்யில் சுட்டெரிக்காத பருவம். தாகமெடுக்காத பருவம். ஓடித்திரிந்தால் களைத்துப் போகாத பருவம். கோயில் திருவிழாக்கள் வருவதும் இனிய கோடையில்தான். . குசலம் விசாரிக்கும் உறவுகள், யாரோ யாரையோ உரத்து அழைக்கும் ராகம், அழும் குழந்தைகள், மனதை அதிர்வித்து எழுப்பும் காவடிகளோடு போகும் மேளங்கள் எனப் பலவாகத் தெருக்களின் மூச்சில் திருவிழாவின் இசை ஒலிக்கும். மயக்கம் தரும் அந்தக் காற்றின் வாசம். அது மரிக்கொழுந்து சேர்த்துக் கட்டிய கதம்பப் பூக்களா, மாவிளக்கிலே கலந்திருக்கும் ஏலக்காயா, காற்றின் துகள்களில் அந்த வாசம் கோடையில் மட்டும்தான் வருகிறது. ஒவ்வொரு கோடையிலும் பிள்ளைகள் பள்ளிமுடித்துத் திரும்பும்போது பழைய கோடை விடுமுறைகளை எடுத்து மீண்டும் தடவிப் பார்த்துவிட்டுப் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்கிறது மனது. எல்லாம் ஒன்றாக இருக்க முடியாதல்லவா, அதைப் போலத்தான் அமெரிக்கக் கோடையும். இது சற்றே வேறுபட்டது. ஆனாலும் மனதுக்கு இதந்தருவது. அமெரிக்காவில் கோடையை அனுபவிக்கவேண்டுமென்றால், நீங்கள் வரவேண்டிய இடம் பனைநிலந்தான். அழகான சுத்தமான கடற்கரைகள், பசுஞ்சோலைகள், நீர்நிலைகள், எங்கெங்கிருந்தோ வந்துசேர்ந்து பறந்து திரியும் புள்ளினங்கள், சற்றே வலுப்பட்டிருக்கும் கழிமுகத்துவாரத்துச் சேற்று நாணல்வெளிகளின் வாசனை. பழங்களும், காய்கறிகளும் சாலையோரத்துக் கடைகளிலும், நகரத்து உழவர் சந்தைகளிலும் பொலியும். குழந்தைகள் எப்போதும்போல, எல்லாவிடங்களையும்போல விளையாடுகிறார்கள். உற்சாகம் பொங்க நண்பர்களோடு ஓடித் திரிகிறார்கள். உறவினர்களோடு ஒன்றுகிறார்கள். தங்களது புதிய பொம்மைகளைக் காட்டி மகிழ்கிறார்கள். கோடையென்றால் திருவிழா இருக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் எங்கள் கோடைவிழா!

ஆகஸ்டு 9 ஆக இருந்தது ஜூலை 26க்கு வந்தது. சிலர் வேலைமாற்றத்தால் ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். சிலர் விடுமுறைக்குத் தமிழகத்துக்குப் போய்விட்டிருந்தார்கள். சிலரால் வரமுடியாத சூழல். இருந்தாலும் ஒரு 75 பேர் வந்திருக்கக் கூடும். இதுவே நல்ல கூட்டந்தான். அன்றைய எல்லா நிகழ்வுகளையும் சொல்லிக் கொண்டிருக்கலாம். சென்றது முதல், ஒலிபெருக்கியைக் கட்டியது, அடுப்பு மூட்டிச் சோளம் சுட்டது என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லப் போனால் அது அடுத்த கோடை வரை நீளும் கதையாயிருக்கும். எனவே சுருங்க! கைப்பந்து ஒருபுறம் நடந்தது. சிறுவர்களுக்கோ பலூன்களில் தண்ணீரை நிரப்பி ஆளுக்காள் மாற்றி மாற்றி நனைத்துக் கொண்டிருந்தார்கள். அஷ்ரிதா என்றொரு குழந்தை பொறுப்பாக வந்தவர்களை வரவேற்று (அதாவது வழிமறித்து!) கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தது. சரி ஓடி விளையாடம்மா என்று பெரியவர்கள் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. உண்டிக்குக் குறைவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கூட்டம். அயலூரிலிருந்து சொந்தங்கள் வந்திருந்தன. அகஸ்டா நண்பர்கள் இவ்வாண்டும் வந்திருந்தார்கள், ஊர்த்திருவிழாவுக்கு வருவதைப் போல. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு நிகராக நமது கந்தன்தான் விளையாட்டுக்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். (படங்களை முழுமையாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்!)

சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி என்று கலகலத்துக் கொண்டிருந்தது கூட்டம். மின்னி மின்னி எல்லா வண்ணங்களையும் விழுங்கிக் கொண்டிருந்தது கண்ணனின் புகைப்படப் பெட்டி.

அன்றைய சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள், சிலம்பம் புகழ் ஆசான் ஜோதி செந்தில் கண்ணன் அவர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும். கரயுத்தத்தில் (arm wrestling) ஈடுபட்டிருந்த மகளிரை சிலம்பொலியாரின் பேச்சைக் கேட்பதற்காகக் கிளப்ப வேண்டியிருந்தது.

அவரது உரை அன்றைக்கு தமிழ் இலக்கிய வரலாற்றினைக் குறித்தது. பனைநிலத்து மக்கள் வழக்கம்போலவே தமது அரசியல் மற்றும் இலக்கியக் கேள்விக் கணைகளைச் சிலம்பொலியார் மீது தொடுத்துத் தமக்கிருந்த ஐயப்பாடுகளைக் களையும் முயற்சிகளில் இறங்கினார்கள். சிலம்பொலியாரும் தமக்கே உரிய பாங்கில் அனைவருக்கும் பதிலளித்தார்.

உரையினை முடித்தபிறகு அவரே அன்றைக்குப் போட்டிகளில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்கும், தமிழ் வகுப்பில் இவ்வாண்டு படித்த பிள்ளைகளுக்கும் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு வந்தது ஆசான் ஜோதியின் சிலம்பம்.

கடந்த ஒரு வாரமாக எங்களோடு இருந்து எங்களுக்குச் சிலம்பப் பயிற்சியினை அளித்து வந்தார்கள். காண்பதற்கரிய கலைஞர். இன்றைய சூழலில் சிலம்பத்தினைக் காத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் ஒரு ஒப்பற்ற வீரர். அவரது கரம் சுழற்றும் சிலம்பத்தினைக் காண்பது அத்தனை அழகாக இருந்தது.

எமக்காக அன்று சுருளையும் சுழற்றிக் காட்டினார். அவரது நிகழ்ச்சிக்கு நடுவே இன்னொரு காளையர் கூட்டம் வந்து சிலம்ப வித்தையைக் காட்டியது.

நான்கு நாட்கள் பயிற்சியின் பின்னர் நம் சங்கத்து மக்கள் இவ்வளவு சுற்றியதே ஆச்சரியந்தான். ஆசானின் பயிற்சி மேலும் சில தினங்களுக்கு ஆஷ்லி ஆற்றின் கரையிலும், கடற்கரைகளிலும் நடந்தது. இந்தச் சிலம்ப வகுப்பினை, அதில் கலந்துகொண்ட யாராலும் வாழ்நாளில் மறக்கவியலாது என்பதுமட்டும் உறுதி.

கோடைவிழாவின் இன்னொரு முக்கியமான அம்சம், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல். எல்லா ஊர்களிலும் தேர்தல் என்றாலே போட்டியிருக்கும் என்று கேள்வி. ஆனால் எங்கள் ஊரில் எனக்கு வேண்டாம், நீங்கள் இருங்கள் என்ற பெருந்தன்மைதான் ஒவ்வொரு முறையும். எப்படியோ இந்த முறையும் ஒரு குழுவைக் கண்டுபிடித்தாயிற்று. அதன் சிறப்பு என்னவென்கிறீர்களா? இதுவரையில் அமெரிக்கத் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்திராத அதிசயம்! இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் மகளிர்! போன குழு தமது இரண்டாண்டு சாதனைகளாக ஒரு பக்கப் பட்டியலைத்தான் வாசித்தார்கள், எங்களது பட்டியல் பல பக்கங்களுக்கு நீளும் என்ற சூளுரையோடு களமிறங்கியிருக்கிறது இப்புதிய அணி. அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!

பனைநிலத் தமிழர்களுக்கேயுரிய உயரிய பண்பு என்னவெனில், நிர்வாகக் குழுவில் யார் இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை, ஒரு திட்டத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதில் முனைப்பாக இருப்பதுதான். இந்தத் தன்முனைப்பே எங்களது ஒற்றுமைக்கும், சங்கத்தின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம்.

இவ்வாறாக எதிர்கால வெற்றிகளுக்குக் கட்டியம் கூறும் இன்னொரு நிகழ்வாக அமைந்தது எங்கள் கோடை விழா. வந்திருந்து சிறப்பித்த, வரவியலாது வாழ்த்திக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது அன்பும் நட்பும் என்றென்றும்!

எழுதியவர்: பனையேறி
படங்கள்: வேறு யார்? கண்ணனே!

Saturday, July 18, 2009

FeTNA 2009ல் நாங்கள் கட்டிய கூத்து

பேரவை விழான்னாலே எங்க ஊருலேருந்து ஒரு பதினஞ்சு, இருபது பேரு போறது வழக்கமுங்க. போன வருசம், அதுக்கு முந்தின வருசமெல்லாம் ஏதோ இந்தச் சின்னப் பிள்ளைகளைப் பாட வச்சு, ஆட வச்சு தமிழை வளத்தோமுங்க. சின்ன சங்கமுன்னாலும் எதையாச்சும் வித்தியாசமா செஞ்சுகிட்டே இருக்க கொணம் எங்க சங்கத்து ஆளுகளுக்கு இருக்குங்க. அதான் இந்த வருசம் எதையாச்சும் வித்தியாசமாச் செய்யணுமுன்னு நெனச்சமுங்க. அந்த நேரத்துலத்துலதான் ஒலகத் தமிழினத்துக்கு இடி விழுந்த மாதிரியான நேரம். ஈழத்துத் தாக்கத்தையே நடிக்கிறதுன்னு முடிவெடுத்தோம். ஒரு இருபது பேரு கூடுனோம். விழா மலர்ல 'தேவகி செல்வன், பரணி இடைக்காடர், பெரியண்ணன் சந்திரசேகரன்' எல்லாரும் தொகுத்திருந்த கேள்வி பதிலையே கதையோட கருவா வச்சிக்கிட்டோமுங்க. அதே வசனம் கூத்துல வருமுங்க. பாத்தீங்கன்னா தெரியும். வெளங்காத ஒருத்தரு கேள்வி கேப்பாரு, இன்னொருத்தரு பதில் குடுப்பாரு. பதில் சொல்லுறப்பவே அதப் பத்திப் பின்னாடி அந்தக் காட்சி விரியும். இதான் கூத்தோட வடிவமுங்க.

ரெண்டு வாரம் பயிற்சி எடுத்திருப்போம். அந்த ரெண்டு வாரமும் பாத்தீங்கன்னா, தினமும் கதையோட வசனம் மாறும். காட்சி மாறும். கடைசி நாள் வரைக்கும் மாறிக்கிட்டே இருந்துச்சுன்னா பாத்துக்கங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது. நடிச்ச ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு "யோசனை யோகராசா"வாக மாறி எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுவும் நல்லதுக்குத்தான். எல்லாம் சேர்ந்துதான் கூத்தை நல்லா இருக்கும்படி வச்சிச்சு. தம்பி இளவரசன் அற்புதமாப் பேசுனதை நீங்களே பாத்துக்கங்க. அப்புறம் மணி ஐயாவோட குரலும் நடிப்பும் அருமை. யாருமே 'நடிக்கலை'ங்கறதுதான் இன்னொரு சிறப்பு. கூத்து முடிஞ்சு வெளியில வரும்போது மேக்கப் ரூமுல இருந்து அடுத்த நிகழ்ச்சிக்காகத் தயார் செஞ்சுக்கிட்டிருந்தவங்க கட்டிப் புடிச்சு அழ ஆரம்பிச்சுட்டாங்க. எத்தனை பேரு கலங்கின கண்ணோட எங்களைப் பாத்து நன்றி சொன்னாங்கன்னு நெனப்பில்ல. பேரவை விழா நடந்த அந்த மூன்று நாட்களும், யாராவது ஒருத்தர் எங்கக் குழு ஆள் யார்கிட்டயாச்சும் கூத்தைப் பத்திப் பேசிக்கிட்டே இருந்தாங்க.

இலங்கை இனப்பிரச்சினையின் அத்தனை அம்சங்களையும் சொல்லிவிட இருபது நிமிடங்கள் போதாது. ஆனால் ஓரளவுக்கு ஒரு அறிமுகத்தை, அறியாதவங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னோம்ங்கற திருப்தி எங்களுக்கு இருந்திச்சு. தமிழங்களோட துக்கத்துல தமிழங்களே பங்கெடுக்கலைன்னா எப்படிங்க. நம்ம மேல திணிக்கப்பட்டிருக்க அடக்குமுறையை நாமளே மறைக்கலாமா? அதான் அந்தத் தெருக்கூத்து. ஏற்கெனவே பனைநிலத்தோட ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீங்க. அப்படி இல்லன்னா, பாத்துட்டுப் போங்க. பாத்துட்டு நண்பர்களுக்கும் அனுப்புங்க. யாரோ சொன்னாங்க, ஜூனியர் விகடன் பத்திரிகையில இதப் பத்தி வந்திருக்குன்னு. போயிப் பார்த்தா, படம் போட்டு "மகிந்தவைக் கிண்டலடித்து நாடகம்" அப்படின்னு படத்துக்குள்ள ஒரு வரி. பகீர்னு இருந்துச்சு. என்னடா அந்தப் பத்திரிகைக் காரங்க, நாடகத்தைப் பார்த்தபிறகுதான் எழுதினாங்களா, இல்ல நியூயார்க் அப்பார்ட்மெண்டு கதவைப் பூட்டிக்கிட்டு கனவு எதுனா கண்டு எழுதினாங்களான்னு தெரியல. ஏங்க, கிண்டலடிக்கப்படுறதுக்கும் ஒரு தகுதி வேணாமா? படத்தைப் பாத்த பிறகு நீங்களே சொல்லுங்க, இது மகிந்தவைக் கிண்டலடிக்கிற நாடகமா இல்ல, மக்களோட போராட்டத்தைப் பத்தின நாடகமான்னு. எந்த ஊடக தர்மத்தைக் கேள்வி கேட்டோமோ, அந்த ஊடக தர்மம் கேலிக்கூத்தானது ஜூனியர் விகடன் கட்டுரையில தெரியுமுங்க.

பெருமைக்காகச் சொல்லலீங்க. இதுல நடிச்ச அம்புட்டு பேரும் முனைவருங்க. அதான் டாக்டருங்க. இவுங்க ரெண்டு வாரம் பாடுபட்டாலே இப்படி ஒரு அருமையான கூத்தைக் கட்ட முடியுதுங்க. நீங்களும் ஏனுங்க முயற்சி செய்யக் கூடாது? எவ்வளவோ சொத்தை, கடி நாடகமெல்லாம் பார்க்கிறோமுங்க. அதை எல்லாம் பாத்துட்டு வயித்துலயும், வாயிலயும் அடிச்சுக்குறோம். ஏன் மாறமாட்டேங்குறாங்கன்னு கேக்குறோம். ஆனா, மாற்றம் அப்படிங்கறது நம்மகிட்டேயிருந்துதானுங்க பொறக்கணும். நீங்களே நாடகம் போடுங்க. கூத்து கட்டுங்க. கைதட்ட ஆளுங்க இருப்பாங்க. உணர்வு இருக்கவங்க இன்னும் உயிரோடதான் இருக்காங்க. உங்களுக்குப் பிடிச்ச கதையை, நீங்க மக்களுக்குச் சொல்ல நினைச்ச கதையை நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்!

கூத்துக் கட்டின அன்புக் கலைஞர்கள்: இன்பன், மணி ஐயா, இளவரசன், யசோதை, சுபத்திரை, இளையோன், அரிநாதர், பத்து, உதயன், பகலவன், சிபிச்சக்கரவர்த்தி, மாசிலாமணி, பனையேறி, திருமதி பனையேறி, நெல்லி, யாழிசை, பிரியம் மற்றும் உதவிய, ஆலோசனைகளை வழங்கிய வளர் அக்கா, தண்டபானி ஐயா ஆகியோர். இப்படத்தை எடுத்தவர் அன்பிற்குரிய நண்பர் அண்ணாதுரை.

ஒளிப்படம்:




எழுதியவர்: பனையேறி

Wednesday, March 4, 2009

தமிழினப் படுகொலையைக் கண்டித்து சார்லஸ்டனில் போராட்டம் !

அன்புடையீர்,
வணக்கம்!
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்படும் தமிழினப் படுகொலை, உலகத் தமிழர்களை உலுக்கியெடுப்பதைப் போல, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினரின் நெஞ்சங்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது. நாகரீகமடைந்த உலகில் நிகழும் இவ்வன்கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், அமெரிக்க அரசினை விரைந்து தலையிட்டு, தமிழர்களுக்கு விடியலையும் விடுதலையையும் வழங்கிட ஆவன செய்யுமாறு வலியுறுத்தவும் எங்களது தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் மார்ச் 7ஆம் நாள் சனிக்கிழமை, மதியம் 2 முதல் 5 மணி வரை, சார்லஸ்டன் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மரியன் சதுக்கத்தில் (Marion Square, Charleston, SC) யூத இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் அருகில் ஒரு அமைதிப் பேரணியை நடத்தவுள்ளோம். அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி!

Sunday, February 8, 2009

சார்லச்டன் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா 2009

இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.

நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை அனுபவிக்கிற, தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது. இந்த புத்தாண்டில, தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, பொங்கி வரும் பொங்கலை இயற்கைக்கு படையலிட்டு ஒரு பொங்கல் திருவிழாவாக கொண்டாட ஆரம்பிச்சு, அது தமிழ்சமுதாயத்தின் ஒரு பண்பாட்டு அடையாளமாக அமைஞ்சது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச சேதி.

அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு பார்க்கலாமா ?


இந்த மாதிரியான விழாக்கள்ல ஒரு சுவராசியமான விசயம் என்னன்னா - விழா அன்னைக்கு வந்து இரசிக்கிற பார்வையாளர்களுக்கு அந்த நாள் மட்டும்தான் திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி தூதுகலமாக பொஙகல் விழாவை எதிர்பார்த்துகிட்டு இருக்கிறது ஒரு சுகமான சுவராசியம்தான் - மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.

பிரபல திரைநட்சத்திரங்களைக்கூட கூட்டமா வேலை வாங்கி சமாளிச்சிடலாம்., ஆனா நம்ம ஆட்கள் இருக்காங்க பாருங்க – அவங்கள சமாளிச்சு, ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு ஒத்திகைக்கு வரவழைக்கிறதே ஒரு தனி கதையாகவே எழுதலாம். ஒரு அஞ்சு பேரு வந்தா மிச்சம் பத்து பேரு வரமாட்டாங்க! மதியம் சாப்பாட்டு நேரத்துக்கு வரச்சொன்னா இரவுச்சாப்பாட்டு நேரம் வரைக்கும் வராம நம்ம பரபரப்ப கிளப்பி விடுவாங்க. ஒத்திகையை பாருங்கன்னா, அசராம உக்காந்து ஊர்க்கதைய பேசி கலகலக்கச் செய்வாங்க. இதையெல்லாம் சமாளிச்சு, சங்கத்தலைவர் சுந்தர்தான் அவரோட அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல கலை நிகழ்ச்சிகள் உருவாகிற மாதிரி பார்த்துக்கிட்டார்.


இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.



ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.


குத்து விளக்கு ஏற்றிய பின்பு தமிழ்த்தாய் பாடப்பட்டது. கணேசு – சுந்தர் அவர்கள் வரவேற்புரை அளித்தனர். முனைவர் தண்டபாணி அவர்கள் சமூகவுரை அதற்கடுத்ததாக இருந்தது. இலங்கையில் போர்முனையில் இறந்த அப்பாவித்தமிழ் மக்களுக்கு சில நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.










விழாவை கீர்த்தி மற்றும் சண்முகம் அழகா தொகுத்து வழங்கினாங்க. பார்வையாளர்களுக்கு ஆரம்பத்திலேயே அருமையான நடன விருந்து காத்திருந்தது. சிறுமி இனியாவின் நாட்டியம் இருந்தது – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.



அடுத்ததா சார்லச்டன் தமிழ் சிறுவர் பள்ளி மாணவர்கள் அமிர்தா, ஆகாச், அசுரிதா, சிபி, மாசிலன் வழங்கிய திருக்குறள் பாடல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றது. சிறுவர்கள் சிறுவரி தவறாமல் குறள் பாடி மகிழ்வித்தனர்.



குழந்தைகளுக்கான இணையத் தளங்களை முனைவர் ஹரிநாத் அருமையாக தொகுத்து விளக்கிக்காட்டினார்.




நிகழ்ச்சியில அடுத்தது தனித்துவமான ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க நம்ம சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் அவங்க. குறிப்பா, மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களையும் நாட்டிய வடிவில் நடிச்சு காட்டிகிட்டிருந்தாங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிச்சது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா, குமரன் மற்றும் பத்மனாபன் நண்பர்கள். மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்த்து பார்வையாளர்கள் மனசு கலங்கிடுச்சு.






சென்னையிலிருந்து சார்லச்டன் வரை – இது நாடகத்தலைப்பு, நடிச்சவங்க சண்முகம், அமிர்தா, சந்தோசு, குமரன், மாரிமுத்து அய்யா மற்றும் லாவண்யா. புதிதா அமெரிக்கா வந்து கலாச்சார குழப்பத்திலிருக்கிற நபர்களைப் பற்றிய நாடகம் அருமையாக இருந்தது.



கும்மி நடனம் அடுத்து வருதுன்னு அறிவிப்பாளர் சொல்ல எங்களுக்கெல்லாம் ஒரே ஆர்வம் எப்படி இருக்கும்ன்றத பார்க்க, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு கும்மியடிச்சு நடனம் ஆட வந்திருந்தாங்க. பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் - நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல். இதப்பாத்து நம்ம மனசு ரெம்ப நேரமா கும்மியடிச்சுகிட்டே இருந்தது.




பொங்கல் விழாவில நடந்த ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்னன்னு கேட்டிங்கன்னா – அது திருக்குறள் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சிதான்.
சார்லச்டன் தமிழ்ச்சங்க நண்பர்கள் குழுவின் ஒரு கனவுத்திட்டம் தான் உலகப்பொதுமறையை இசைவடிவமாக ஓதி தமிழ்சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பிக்கும் ஒரு அரிய முயற்சி. இதற்காக பலமாதங்களாக பாடுபட்டு இசைவடிவமாக கொண்டு வந்து சாதனை பண்ணி இருப்பது பெருமையான ஒரு விசயம். இதப்பத்தி எல்லா விபரங்களையும் தனியாகவே சுந்தர் ஒரு பதிவு எழுதியிருக்கார். இசைத்தட்டை முனைவர் தண்டபாணி, முனைவர் சீனிவாசனுடைய அப்பா திரு. சண்முகராசனிடமும், முனைவர் சிவக்குமார் திரு. மாரிமுத்துவிடமும் அளித்தனர்.



அடுத்து, இப்படி இருந்தா எப்படி ஒரு நாடகம். வாழ்க்கையில அதிகாரவர்க்கத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சாமானியர்கள்கிட்ட அதிகாரம் சென்று சேர்ந்து, அதிகாரிகள் அவர்களுக்காக சேவை செய்யத்துடிக்கும் நிலமை இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை நாடகம். நம்ம நண்பர்கள் யுவராசு - செந்தில் எழுதி கவுசிக், விக்னெசு, சந்தோசு, பத்மனாபன், குமரன், சிவா மற்றும் உதய் நடித்திருந்தது அருமையான நாடகம். சாமானிய மக்களிடம் அதிகாரிகள் படும் விசித்திரமான கற்பனை உலகத்தை உருவாக்கிக் காட்டியிருந்தது சுவையாகவும் மற்றும் சுவராசியமாகவும் இருந்தது.




நவீன திருவிளையாடல் நாடகத்தில் அந்தக்கதாபாத்திரங்களை இக்காலத்தைய சூழலில் வைத்து கற்பனை கலந்த ஒரு சுவராசியமான நாடகமாக்கி நடித்திருந்தனர். தேவர்கள் மடிக்கணினிய்டன் நவீன சொரூபமாக காட்சியளித்தது பார்ப்போர் கவனத்தை கவர்வதாக அமைந்திருந்தது.




தமிழுணர்வுப்பாடல்களை திரு. அண்ணாமலையும், மாட்டுக்காரவேலா-ன்ற பாடலை சுபத்ராவோட அப்பா திரு. மாரிமுத்தும், முகுந்தா முகுந்தா பாடலை திருமதி. ஜோ-வும் அருமையாக பாடினாங்க.

அகா இது என்ன கலாட்டா?, யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து? “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”. அப்படிப்போடு! உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால இளமை ததும்பும் இந்த நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம் - பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.






இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு உதய் மற்றும் பத்மனாபன் நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.





தமிழ்மொழி வணக்கப் பாடல் பாடி நிகழ்ச்சி இனிதாக முடிந்தது. அடுத்து என்ன எல்லாரும் வீட்டுக்கும் கிளம்புவாங்கன்னு பார்க்கிறீங்களா. அதான் இல்ல.

கொஞ்சமா நஞ்சமா…பலப்பல விதங்கள், பலசுவை உணவுப்பதார்த்தங்கள். ஒவ்வொரு குடும்பமும் சரிக்கு சரியா அட்டகாசமா தயார் பண்ணி எடுத்து படையலிட்டு இருந்தாங்க. பந்திக்குள்ளே புகுந்து விளையாடலாம்னு முத வரிசையில நிக்கிறத என் வீட்டுக்காரம்மா பாத்துட்டு "சாப்பாடு எங்கயும் பறந்து போயிறாது! கொஞ்சம் பொறுமையாவே எனக்குப் பிறகு சாப்பிடுங்கன்னு 'பாசத்தோடு' சொல்லிட்டு அவங்க சாப்பாட்டு கச்சேரிய ஆரம்பிச்சுட்டாங்க. ஆகா சங்ககாலத் தமிழ் பொண்ணுகளும் இப்படித்தானா ? இல்ல இப்பத்தான் ஆம்பளைங்க கதி இப்பிடி ஆயிடுச்சா? இதைத்தான் பரிணாம வளர்ச்சியின் பக்க விளைவுன்னு சொல்லுறாங்களோ ? உணவுப்பந்தி முடிந்த பின்பும் பிரிய மனசில்லாம மக்கள் கொஞ்சம் கதையடிசுக்கிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் திருக்குறள் இசைத்தட்டு பரபரப்பா விற்பனை ஆகிட்டு இருந்தது.




விழா முடிஞ்சு வீட்டுக்கு திரும்பி வந்து கிட்டிருக்கோம், வழியில ரெண்டு பக்கமும் கூப்பர் நதி பரவிக்கிடக்குது. நதியோரத்தில இருபக்கங்களிலும் இந்த அமெரிக்க சமுதாயத்தின் வளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் அதன் அடையாளங்களைப் பார்க்கிறப்ப மனுச சமுதாயத்தில ஆற்றுவெளி அள்ளித்தந்த அரிய பங்களிப்பு மனசில மெலிசா நிறையுது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே நம்ம தமிழ்ச்சமுதாயம் உலகத்திலிருக்கிற மற்ற சமுதாயங்களுக்கு முன்னரே பல பண்பாட்டு முறைகளை கலாச்சார நிகழ்வுகளை தொடங்கி பெருமை சேர்த்திருக்காங்கன்னு நினைக்கிறப்ப
எங்க மனசு நிறைஞ்சிறுச்சு.

இத்தனை அருமையான நிகழ்ச்சிகளை அள்ளித்தந்த சார்லச்டன் தமிழ்த்திருநாள் கண்டு களிச்ச எங்க மனசுக்குள்ளேயும் தூதுகலமாகப் வழிஞ்சது பொங்கி பொங்கலோ பொங்கல் !

வாழ்க தமிழ் ! வளமுடன் வளர்க தமிழ்ப் பண்பாடு!! நீடூடி வாழ்க தமிழ் சமுதாயம்!!


* செந்தில்-வினு *

--------------------

(இங்குள்ள அருமையான் படங்கள் அளித்து உதவியவர் – முனைவர் கண்ணன் )

--------------------

Wednesday, February 4, 2009

திருக்குறள் - முதன்முறையாக 1330 குறட்பாக்களும் இசை வடிவில் !


திருக்குறளுக்கு விளக்கவுரைகள் எழுதியோர் பலர். ஆனால் எத்தனை பேருக்குக் குறளை முழுமையாகப் படிக்க முடிந்திருக்கிறது? நாம் திரைப்படப் பாடல்களை எவ்வாறு மனப்பாடம் செய்கிறோம்? பாட்டுப் புத்தகத்தை வாங்கியா படிக்கிறோம்? இல்லையே, கேட்பதனாலேயே பாடல்கள் நமக்கு மனதில் பதிகின்றன. அதனைப் போலவே பலவிதமான பாடல்களும் நாம் கேட்பதன்மூலமாகவே நன்கு மனதில் பதிகின்றது. படிக்கும் வரிகளை மனதில் பதிப்பதும், மீண்டும் நினைவுபடுத்தி எடுப்பதும் சற்றே கடினம். ஆனால் கேட்கின்ற வரிகளைச் சுலபமாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம், அதே போல மீண்டும் ஞாபகப்படுத்துவதும் சுலபம். குழந்தைகள் கற்பதற்கு வெகு முன்னமேயே கேட்கத் தொடங்கி விடுகின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதனாலேயே கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள். திருவள்ளுவரும் "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றார்.

அப்படிப் பார்க்கும்போது, எத்தனைத் தமிழ் நூல்களை நாம் இசை வடிவில் பதிவு செய்திருக்கிறோம்? தமிழ் நூல்களையும், இலக்கியங்களையும் பரப்ப முன்வரும் பலரும் அதனை ஏட்டிலும், எழுத்திலுமே பதிய முற்படுவதைக் காண்கிறோம். பத்திரிகையாக இருக்கட்டும், மின் பக்கங்களாக இருக்கட்டும் அவை பெரும்பாலும் எழுத்திலேயே முன்வைக்கப்படுகின்றன. மதுரைத் திட்டம் போன்றவை அரும்பெரும் முயற்சிகள். ஆனாலும் அவை இன்று எத்தனைத் தமிழர்களைச் சென்றடைந்திருக்கின்றன? கணினி இருந்தாலுமே அத்தகைய பக்கங்களை அடிக்கடி எடுத்துப் பார்க்கின்றோமா? அதே நேரத்தில்,திரைப்பாடல்களைப் பாருங்கள். அவை இசை வடிவில் வந்ததனாலேயே புகழ்பெறுகின்றன. இசையின் மூலமே நல்ல பல இலக்கியங்களை மக்கள் மத்தியில் பரப்ப இயலும். இந்த நோக்கில் தொடங்கப்பட்டதுதான் எங்களது பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறளை இசைவடிவில் பதியும் திட்டம்.



இத்திட்டத்துக்கான தொகைகளை அளித்து ஊக்குவித்த புரவலர்கள் அகஸ்டாவிலிருக்கும் முனைவர் சிவக்குமார் ஜெயபாலன்-மருத்துவர் ஜானகி நடராஜா மற்றும் சார்லஸ்டனிலிருக்கும் முனைவர் தண்டபானி குப்புசாமி-வளர்மதி குப்புசாமி ஆகியோர். இதில் பங்குகொண்ட அனைவரும் அமெரிக்காவின் தென்கரோலின மாநிலத்தில் இருக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள். இளைய தலைமுறையினர்!



ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியிருக்கிறோம். எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை அன்புகூர்ந்து வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த தமிழ்த்திரு அய்யா இளங்குமரனார் அவர்கள். இத்திட்டத்தில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திருக்குறள் மறைமொழியின் முதல் அதிகாரத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.



"திருக்குறள் மறைமொழி" என்ற இந்த MP3 குறுந்தகட்டினைக் கடந்த ஜனவரி 24ம் தேதி நிகழ்ந்த எங்களது தமிழ்ச்சங்கப் பொங்கல் விழாவில் வெளியிட்டோம். இக்குறுந்தகடு விற்பனைக்குத் தயாராக உள்ளது. எங்கள் வலைப்பதிவின் இடப்புறம் இருக்கும் "Buy Now! Thirukkural Maraimozhi MP3 CD" என்ற பொத்தானை அழுத்தி, Google Checkout மூலம் இதனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் விற்பனை முகவர்கள் தேவை! திருக்குறளை இந்தப் புதிய இசை வடிவில் பரப்ப முன் வாருங்கள்! ஒவ்வொரு குறுந்தகடும் 5 அமெரிக்க டாலர்கள். இதிலிருந்து வரும் தொகை முழுவதும், எங்களது அடுத்த இசைத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும்.



இக்குறுந்தகடு இலாப நோக்கில் தயாரிக்கப்பட்டதன்று. இதனை வாங்கிக் கேட்பதும், பரப்புவதும் தமிழரிடையே திருக்குறள் பரவ உதவும். திருக்குறளில் இருக்கின்ற எண்ணற்ற அரிய கருத்துக்களை இத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவராலும் பாட்டுப் பயிற்சிகளின்போதும், ஒலிப்பதிந்து திருத்தும்போதும் உணர்ந்துகொள்ள முடிந்தது. எங்கள் தமிழ்ச் சங்கத்தினரின் குடும்ப விழாக்களிலும், தமிழ்ப் பள்ளியிலும், சங்க விழாக்களிலும், கார்ப் பயணங்களிலும் திருக்குறள் ஒரு இனிய இசையாக ஒலிக்கப்படுகிறது, ஓதப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் தமிழர் கூடும் இடங்களிலெல்லாம் திருக்குறள் ஒலிக்க வேண்டும் என்பது எம் அவா. அது வாழ்க்கைக்கான அத்தனைப் பாடங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றது. அய்யா இளங்குமரனார் கூறியிருப்பதுபோல், திருக்குறளைப் படிப்போம், கேட்போம், சிந்திப்போம், சீர்த்தி பெறுவோம், பிறவிப் பயனை அடைவோம்! வாழிய நலனே, வாழிய நிலனே!