Sunday, August 2, 2009

பனைநிலத்தில் கோடை விழா!

கோடைக்காலம் என்றாலே மனதெல்லாம் பள்ளி நாட்களில் நாம் கழித்த கோடை விடுமுறைகளே நிறைந்திருக்கின்றன. தெருவிலே கூவி விற்கும் முந்திரிப் பழம், நாவற்பழம், இலந்தைப் பழம், பழைய இரும்பு தகரத்துக்குக் கிடைக்கும் பேரீச்சம்பழம், யார் வீட்டு மரத்திலேயோ கல்லெறிந்து விழுத்தும் மாங்காய், சாலையோரத்துப் புளியமரத்தின் செங்காய்...ம் நாவில் எச்சில் ஊறுகிறது! தெருப் பிள்ளைகள் போதாதென்று வேற்றூர்களிலிருந்து வந்து சேரும் விருந்தாளிப் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடித் திரியும் இனிய பொழுதுகள் அவை. வெய்யில் சுட்டெரிக்காத பருவம். தாகமெடுக்காத பருவம். ஓடித்திரிந்தால் களைத்துப் போகாத பருவம். கோயில் திருவிழாக்கள் வருவதும் இனிய கோடையில்தான். . குசலம் விசாரிக்கும் உறவுகள், யாரோ யாரையோ உரத்து அழைக்கும் ராகம், அழும் குழந்தைகள், மனதை அதிர்வித்து எழுப்பும் காவடிகளோடு போகும் மேளங்கள் எனப் பலவாகத் தெருக்களின் மூச்சில் திருவிழாவின் இசை ஒலிக்கும். மயக்கம் தரும் அந்தக் காற்றின் வாசம். அது மரிக்கொழுந்து சேர்த்துக் கட்டிய கதம்பப் பூக்களா, மாவிளக்கிலே கலந்திருக்கும் ஏலக்காயா, காற்றின் துகள்களில் அந்த வாசம் கோடையில் மட்டும்தான் வருகிறது. ஒவ்வொரு கோடையிலும் பிள்ளைகள் பள்ளிமுடித்துத் திரும்பும்போது பழைய கோடை விடுமுறைகளை எடுத்து மீண்டும் தடவிப் பார்த்துவிட்டுப் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்கிறது மனது. எல்லாம் ஒன்றாக இருக்க முடியாதல்லவா, அதைப் போலத்தான் அமெரிக்கக் கோடையும். இது சற்றே வேறுபட்டது. ஆனாலும் மனதுக்கு இதந்தருவது. அமெரிக்காவில் கோடையை அனுபவிக்கவேண்டுமென்றால், நீங்கள் வரவேண்டிய இடம் பனைநிலந்தான். அழகான சுத்தமான கடற்கரைகள், பசுஞ்சோலைகள், நீர்நிலைகள், எங்கெங்கிருந்தோ வந்துசேர்ந்து பறந்து திரியும் புள்ளினங்கள், சற்றே வலுப்பட்டிருக்கும் கழிமுகத்துவாரத்துச் சேற்று நாணல்வெளிகளின் வாசனை. பழங்களும், காய்கறிகளும் சாலையோரத்துக் கடைகளிலும், நகரத்து உழவர் சந்தைகளிலும் பொலியும். குழந்தைகள் எப்போதும்போல, எல்லாவிடங்களையும்போல விளையாடுகிறார்கள். உற்சாகம் பொங்க நண்பர்களோடு ஓடித் திரிகிறார்கள். உறவினர்களோடு ஒன்றுகிறார்கள். தங்களது புதிய பொம்மைகளைக் காட்டி மகிழ்கிறார்கள். கோடையென்றால் திருவிழா இருக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் எங்கள் கோடைவிழா!

ஆகஸ்டு 9 ஆக இருந்தது ஜூலை 26க்கு வந்தது. சிலர் வேலைமாற்றத்தால் ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். சிலர் விடுமுறைக்குத் தமிழகத்துக்குப் போய்விட்டிருந்தார்கள். சிலரால் வரமுடியாத சூழல். இருந்தாலும் ஒரு 75 பேர் வந்திருக்கக் கூடும். இதுவே நல்ல கூட்டந்தான். அன்றைய எல்லா நிகழ்வுகளையும் சொல்லிக் கொண்டிருக்கலாம். சென்றது முதல், ஒலிபெருக்கியைக் கட்டியது, அடுப்பு மூட்டிச் சோளம் சுட்டது என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லப் போனால் அது அடுத்த கோடை வரை நீளும் கதையாயிருக்கும். எனவே சுருங்க! கைப்பந்து ஒருபுறம் நடந்தது. சிறுவர்களுக்கோ பலூன்களில் தண்ணீரை நிரப்பி ஆளுக்காள் மாற்றி மாற்றி நனைத்துக் கொண்டிருந்தார்கள். அஷ்ரிதா என்றொரு குழந்தை பொறுப்பாக வந்தவர்களை வரவேற்று (அதாவது வழிமறித்து!) கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தது. சரி ஓடி விளையாடம்மா என்று பெரியவர்கள் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. உண்டிக்குக் குறைவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கூட்டம். அயலூரிலிருந்து சொந்தங்கள் வந்திருந்தன. அகஸ்டா நண்பர்கள் இவ்வாண்டும் வந்திருந்தார்கள், ஊர்த்திருவிழாவுக்கு வருவதைப் போல. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு நிகராக நமது கந்தன்தான் விளையாட்டுக்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். (படங்களை முழுமையாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்!)

சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி என்று கலகலத்துக் கொண்டிருந்தது கூட்டம். மின்னி மின்னி எல்லா வண்ணங்களையும் விழுங்கிக் கொண்டிருந்தது கண்ணனின் புகைப்படப் பெட்டி.

அன்றைய சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள், சிலம்பம் புகழ் ஆசான் ஜோதி செந்தில் கண்ணன் அவர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும். கரயுத்தத்தில் (arm wrestling) ஈடுபட்டிருந்த மகளிரை சிலம்பொலியாரின் பேச்சைக் கேட்பதற்காகக் கிளப்ப வேண்டியிருந்தது.

அவரது உரை அன்றைக்கு தமிழ் இலக்கிய வரலாற்றினைக் குறித்தது. பனைநிலத்து மக்கள் வழக்கம்போலவே தமது அரசியல் மற்றும் இலக்கியக் கேள்விக் கணைகளைச் சிலம்பொலியார் மீது தொடுத்துத் தமக்கிருந்த ஐயப்பாடுகளைக் களையும் முயற்சிகளில் இறங்கினார்கள். சிலம்பொலியாரும் தமக்கே உரிய பாங்கில் அனைவருக்கும் பதிலளித்தார்.

உரையினை முடித்தபிறகு அவரே அன்றைக்குப் போட்டிகளில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்கும், தமிழ் வகுப்பில் இவ்வாண்டு படித்த பிள்ளைகளுக்கும் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு வந்தது ஆசான் ஜோதியின் சிலம்பம்.

கடந்த ஒரு வாரமாக எங்களோடு இருந்து எங்களுக்குச் சிலம்பப் பயிற்சியினை அளித்து வந்தார்கள். காண்பதற்கரிய கலைஞர். இன்றைய சூழலில் சிலம்பத்தினைக் காத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் ஒரு ஒப்பற்ற வீரர். அவரது கரம் சுழற்றும் சிலம்பத்தினைக் காண்பது அத்தனை அழகாக இருந்தது.

எமக்காக அன்று சுருளையும் சுழற்றிக் காட்டினார். அவரது நிகழ்ச்சிக்கு நடுவே இன்னொரு காளையர் கூட்டம் வந்து சிலம்ப வித்தையைக் காட்டியது.

நான்கு நாட்கள் பயிற்சியின் பின்னர் நம் சங்கத்து மக்கள் இவ்வளவு சுற்றியதே ஆச்சரியந்தான். ஆசானின் பயிற்சி மேலும் சில தினங்களுக்கு ஆஷ்லி ஆற்றின் கரையிலும், கடற்கரைகளிலும் நடந்தது. இந்தச் சிலம்ப வகுப்பினை, அதில் கலந்துகொண்ட யாராலும் வாழ்நாளில் மறக்கவியலாது என்பதுமட்டும் உறுதி.

கோடைவிழாவின் இன்னொரு முக்கியமான அம்சம், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல். எல்லா ஊர்களிலும் தேர்தல் என்றாலே போட்டியிருக்கும் என்று கேள்வி. ஆனால் எங்கள் ஊரில் எனக்கு வேண்டாம், நீங்கள் இருங்கள் என்ற பெருந்தன்மைதான் ஒவ்வொரு முறையும். எப்படியோ இந்த முறையும் ஒரு குழுவைக் கண்டுபிடித்தாயிற்று. அதன் சிறப்பு என்னவென்கிறீர்களா? இதுவரையில் அமெரிக்கத் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்திராத அதிசயம்! இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் மகளிர்! போன குழு தமது இரண்டாண்டு சாதனைகளாக ஒரு பக்கப் பட்டியலைத்தான் வாசித்தார்கள், எங்களது பட்டியல் பல பக்கங்களுக்கு நீளும் என்ற சூளுரையோடு களமிறங்கியிருக்கிறது இப்புதிய அணி. அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!

பனைநிலத் தமிழர்களுக்கேயுரிய உயரிய பண்பு என்னவெனில், நிர்வாகக் குழுவில் யார் இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை, ஒரு திட்டத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதில் முனைப்பாக இருப்பதுதான். இந்தத் தன்முனைப்பே எங்களது ஒற்றுமைக்கும், சங்கத்தின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம்.

இவ்வாறாக எதிர்கால வெற்றிகளுக்குக் கட்டியம் கூறும் இன்னொரு நிகழ்வாக அமைந்தது எங்கள் கோடை விழா. வந்திருந்து சிறப்பித்த, வரவியலாது வாழ்த்திக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது அன்பும் நட்பும் என்றென்றும்!

எழுதியவர்: பனையேறி
படங்கள்: வேறு யார்? கண்ணனே!

3 comments:

பழமைபேசி said...

படங்களும் கட்டுரையும் நன்று நண்பா.... நான் உங்கள் ஊர்ப்பக்கம் வந்து விடலாமா என நினைக்கத் தோன்றுகிறது.... அவ்வ்வ்வ்.... சார்லத்தில் வறட்சி...

துபாய் ராஜா said...

அழகான பதிவு.

அருமையான படங்கள்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

காயத்ரி said...

மிகவும் அழகிய பதிவு! அழகிய தமிழ்!

பனைநிலத்திற்கு வாழ்த்துக்கள்!