Friday, October 10, 2008

மற்றுமொரு மழை நாள்

இன்னைக்குச் சாயங்காலம் கன மழை வரும்னு அறிவிப்பு வந்ததால, வேகமா வெளி வேலையெல்லாம் முடிச்சுட்டு, வீட்டுக்குள்ள வந்து அடங்கிட்டோம். சொன்ன மாதிரியே, சிலு சிலுன்னு ஆரம்பிச்ச தூறல், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் 'சோ'ன்னு கொட்ட ஆரம்பிச்சது. சன்னலோரமா நின்னு, என் பிள்ளை மழையை வேடிக்கைப் பார்த்திட்டிருந்தார். நானும் கையில சூடாக பானத்தை(தேநீர்தாங்க) எடுத்துட்டு வந்து, ஒன்றாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தோம்.

வீடு முழுக்க நிசப்தமாயிருந்ததால், மழை ஒரு இசையருவியாய் கேட்டது. பாதுகாப்பான வட்டத்திற்குள் வாழ்கிறவரை, எதுவுமே அழகு, ஆனந்தம். எங்கள் வீட்டின் கூரையிலிருந்து வழிந்து கொண்டிருந்த மழையில் மனம் கரைந்து கொண்டிருந்தது. சில்லென்று முகத்தில் படர்ந்த காற்றோ, இயற்கையின் கருணையை இன்னுமொரு முறை நினைவு படுத்தியது.

மழையைப் பார்த்துக்கொண்டே, மனம் பயணித்துக் கொண்டிருந்தது. இயற்கையின் துவக்கம் எது? ஆரம்பம், முடிவு இல்லாததுதான் இயற்கையா? எதுவாக இருப்பினும், இயற்கையே ஆழ் மனதின் தேடல், ஆறுதல், குதூகலம், மகிழ்ச்சி, எல்லாமும்.

மழை வேகமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. இயற்கையோடு இணைந்த எதுவுமே அழகுதான். தோல்வியெனத் தெரிந்தும், இயற்கையை விஞ்சத் துடிக்கும் மனது. இந்த விசயத்தில் மட்டும் ஏன் மனம் வேறாக, புத்தி வேறாகச் செயல்படுகிறது?

மழை நாளில் கப்பல் விட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரில் தாவிக் குதித்து, முகத்தில் சிலீரென மழைநீர் பட்டவுடன் மனதில் பரவசம் அடைந்த அக்குழந்தைப் பருவ நாட்கள் இணையில்லாதது. மூழ்காதக் கப்பல்களின் சொந்தக்காரர்களாய் பெருமையோடு, அந்நாட்களில் நண்பர் பட்டாளங்களுடன் சென்று, மழை நின்றபின், சிறு மரக்கிளைகளைப் பிடித்து உலுக்கி, தலை மேல் விழுந்தத் துளிகளைத் தடவி உள்ளம் ஆர்ப்பரித்திருக்கிறது. ஈரமான குடையின் ஒவ்வொரு முனையிலிருந்தும் சொட்டும் மழைத்துளியை உள்ளங் கையிலேந்தி மனது ரசித்திருக்கிறது.

நினைவலைகளுக்கு நேரம் போதுவதேயில்லை. ஒவ்வொரு மழை நாளிலும், தேநீருடன் குழந்தையோடு, குழந்தையாய் என் நினைவுகள் தொடர்கிறது.

-எழுதியவர் பனையோலை.

4 comments:

Anonymous said...

மிகவும் அழகிய பதிவு. மழை நாட்களில்தான் மகிழ்வுக்கும் நமக்குமான தூசிகள் கழுவுபடுகின்றதான தோற்றம். பனைநிலத்தின் மழை நனைவதற்கும் உகந்தது. குளிர்வதில்லை. வீட்டுக்குச் செல்லும் பாதி வழியில் கொட்டிய மழைக்கு நிற்காது வீட்டிற்குப் போகின்றபோது முகத்தில் வழியும் மழை நீர் எத்தனையோ வரிகளை எழுதிச் செல்கிறது. கொண்டாடுங்கள் பனையோலை!
-பனையேறி

Anonymous said...

மிக அருமை.நம் தாய் நாட்டில் மழைத்தூறலுக்கு பின் எழும் மண்வாசனையை சுவாசித்து குதூகலித்த மனம், இன்று
பனைநிலத்தில், உங்கள் மழைத்துளியான பதிவை படித்தபின் எழுந்த தமிழ் மணத்தை ரசித்து மகிழ்ச்சி அடைந்தது.

நன்றி.
இனியாழ்.

Anonymous said...

பனையேறி & இனியாழ் இருவரின் கருத்துக்களுக்கும் நன்றி. இயற்கை எழில் கொஞ்சும் நம் பனைநிலத்தில் எதுவுமே அழகு.

Anonymous said...

//மழை நின்றபின், சிறு மரக்கிளைகளைப் பிடித்து உலுக்கி, தலை மேல் விழுந்தத் துளிகளைத் தடவி உள்ளம் ஆர்ப்பரித்திருக்கிறது. ஈரமான குடையின் ஒவ்வொரு முனையிலிருந்தும் சொட்டும் மழைத்துளியை உள்ளங் கையிலேந்தி மனது ரசித்திருக்கிறது.//

அப்பாடி எத்தனை முறை ரசித்தாலும் சலிக்காத மழைத் துளிகள்....அழகாக எழுதியிருக்கிறீர்கள்...
அன்புடன் அருணா