Monday, October 6, 2008

நாங்க யாரு!

எல்லோருக்கும் வணக்கமுங்க!
தனியொரு ஆளா நின்னு பல நட்சத்திரங்க பட்டையைக் கிளப்பிக்கிட்டிருக்க இந்த இடத்துல, இந்த வாரம் நாங்க ஒரு கூட்டுக் கச்சேரி நடத்தப் போறோம். நாங்க எல்லாரும்னா யாரு? எங்க தமிழ்ச் சங்கம்தான். பனைநிலத் தமிழ்ச் சங்கம் (பநிதச). இது என்னடா கேள்விப்படாத சங்கமா இருக்கேன்னு பாக்குறீங்களா? இது அமெரிக்காவுல இருக்க, தென் கரோலின மாநிலத்துல, சார்ல்ஸ்டன் அப்படிங்கற இடத்துல இருக்க தமிழ்ச் சங்கம். எங்க மாநிலத்துக்கு Palmetto State அப்படின்னு பேரு. ஏன்னா இங்க பனைமரம் மாதிரியா இருக்க ஒரு மரம் இருக்கும். அதுக்கு Palm அப்படின்னுதான் பேரு. அதனாலதான் பனைநிலம் அப்படின்னு வச்சோம். சங்கம் ஆரம்பிக்கிறப்ப இருந்தது என்னவோ மொத்தம் 30-40 பேருதான். இப்ப எங்க ஊரைச் சுத்தி ஒரு 100 தமிழ்க் குடும்பங்கள் இருக்கு.

எங்கள் சங்கத்தில் பல மதத்தினரும், பல நாட்டினரும், பல மொழி பேசும் இனத்தவரும் தமிழ் மொழியின் மேலுள்ள பற்றினால் கூடியிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் எங்களது பெரிய நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள், இன்னொன்று கோடை விழா. இவை தவிர சிறு சிறு நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்படுவதோடு, மக்களும் ஆங்காங்கே குழுக்களாகப் பயணம் செய்வதும், விருந்துண்பதும், வேலை செய்வதுமாகக் களிக்கின்றோம். இவ்வாரத்தில் எங்களது ஊரைப் பற்றியும், சங்க நடவடிக்கைகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் எவ்வளவோ தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ்ச்சங்கத்துக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனாலும் வேற்று மண்ணில் தமிழைக் காப்பதும், நம் இளையர்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் அனைத்து சங்கங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு பெரும்பணி. அனைத்து சங்கங்களும் தொடர்பற்று இருக்கும்போது ஒருவரது பிரச்சினை இன்னொருவருக்குத் தெரியாமல் போகும். ஆனால் இன்றைய இணைய உலகில், அனைத்துச் சங்கங்களும் ஒன்றோடொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் செயற்திட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பது எங்களது கருத்து.

எங்க ஊர் அழகான ஊர். ரொம்ப நட்பான ஊர் அப்படின்னு பல முறை பேர் வாங்கியிருக்கு. ஊரைச் சுத்தி வித விதமான கடற்கரைகள். ஊருக்குள்ள நிறைய பூங்காக்கள், குளங்கள், ஆற்றங்கரைகள். சுற்றுலாதான் எங்க ஊரோட பெரிய வருமானம். அந்தக் காலத்துல நிறைய பண்ணைகள் (பஞ்சு, நெல்) இருந்துச்சு. அடிமைத் தொழிலாளர்களை வைத்துப் பராமரிக்கப்பட்ட பண்ணைகளை இன்று கண்காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். ஆண்டு முழுவதும் எங்காவது ஏதாவது விழா நடந்துகொண்டே இருக்கும். பிக்கலோ ஸ்பொலெட்டோ (Piccolo Spoleto), புகழ்பெற்ற மகளிர் டென்னிஸ் (Family Circle Cup) போட்டிகளும் இவற்றில் அடக்கம். நாங்க வெளியூருக்குப் போகும்போதெல்லாம் அங்கிருக்கும் யாராவது எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கும்போது, நாங்கள் சார்ல்ஸ்டன் என்றால், அவர்கள் வாவ்வ்! அழகான ஊராச்சே என்பார்கள்! ஆமாம், அவ்வளவு அருமையான ஊராக்கும் எங்கள் ஊர்! ஆமா, நீங்கள் எப்போது வருகிறீர்கள்?! ஆனா என்ன, அப்பப்ப கொஞ்சம் புயல் அடிக்கும், சூறாவளி வரும். அப்பதான் கொஞ்சம் கடற்கரையைவிட்டுத் தள்ளி வரணும். ஆனா அந்த அமளியையும் நாங்க கொண்டாடுவோம்ங்கறது உங்களுக்குத் தெரியலன்னா முந்தைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க!

எங்கள் ஊருக்கு வரும் நண்பர்கள் ஏதேனும் உதவி, விபரங்கள் வேண்டுமெனில் எங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

எழுதியவர் - பனையேறி

7 comments:

ஆயில்யன் said...

/இணைய உலகில், அனைத்துச் சங்கங்களும் ஒன்றோடொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் செயற்திட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பது எங்களது கருத்து.///

உங்களின் எண்ணங்களுக்கு ஏற்றம் அளிக்கும் வகையில் இன்னும் பல குடும்பங்கள் உறுப்பினர்களாவதுடன் பல சங்கங்களின் உறவுகளும் கூடியிருக்க,நட்சத்திர வாரம் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்ற வாழ்த்துக்களுடன்...!

Balaji-Paari said...

ஆஹா!
இது மகிழ்ச்சியான நிகழ்வு. இந்த மாதிரி எழுத்துக்கள் ஒரு குமுகாயத்தின் பொதுவான பண்புகள முன் வைக்கும்-னு நினைக்கிறேன். அதுவும்
"நாடுகளையும், மதங்களையும் கடந்து, தமிழால் இணைந்திருக்கும் ஒரு சங்கம்" என்பதால் இன்னும் சுவாரசியமா இருக்கும்-னு எதிர்பார்க்கின்றேன்.

Anonymous said...

வாழ்த்துகள்

அறிவகம் said...

மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின ஒவ்வொரு மூனையிலும் தமிழ்ஓங்காரமாய் ஒலிப்பது தமிழுக்கே உள்ள பெருமை.

தங்களுக்கு தெரிந்த தமிழ் சங்க இணையத்துக்கெல்லாம் இணைப்பு கொடுங்கள்.

//ஒவ்வொரு தமிழ்ச்சங்கத்துக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனாலும் வேற்று மண்ணில் தமிழைக் காப்பதும், நம் இளையர்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் அனைத்து சங்கங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு பெரும்பணி.//

இந்த பொதுப்பணியில் அனைத்து சங்கங்களும் நிச்சயம் ஒன்றிணையும். நாம் ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த இணையத்தில் உலகதமிழ் மாநாடு நடத்தலாம். நேரில் சந்தித்து தமிழ் அன்பை பகிர்ந்துகொள்ள இயலாவிட்டாலும் இணையத்தில் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா.

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். முயற்சி எடுங்கள். ஏற்கனவே இதுபோன்ற இணைய ஏற்பாடுகள் இருந்தாலும் அது குறித்து தெரியப்படுத்துக்கள். இந்த முயற்சிக்காக இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

அன்புடன் அறிவகம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா சொல்லி இருக்கீங்க..உங்க சங்கத்துக்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

//அந்தக் காலத்துல நிறைய பண்ணைகள் (பஞ்சு, நெல்) இருந்துச்சு. அடிமைத் தொழிலாளர்களை வைத்துப் பராமரிக்கப்பட்ட பண்ணைகளை இன்று கண்காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.//

வரலாற்றில் நாம் சற்று பின் சென்றுபார்த்தால், அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்க இன மக்கள் இந்த ஊரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். கடினமான சூழ்நிலைகளிலும் கூட தங்கள் மொழியான Gullahவை அவர்கள் வளர்த்தது இன்றளவும் பேசப்படுகிறது. எல்லா வசதிகளும் நிறைந்த, சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும் நாம் இன்னும் முழு வீச்சில் செயல்பட வேண்டும்.

தருமி said...

இப்படி ஒரு கூட்டமா அங்க? நல்லது .. நல்லது ... ரொம்ப மகிழ்ச்சி