Tuesday, October 7, 2008

எங்கள் பாட்டு ஆசிரியையின் பயணக் குறிப்பு

முன்னுரை:
அமெரிக்கவாழ் தமிழர்களின் வீட்டுக்கு இந்தியாவிலிருந்து உறவினர்கள், குறிப்பாக பணி ஓய்வு பெற்ற பெற்றோர்கள், வருவது வழக்கம். இவர்கள் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் குடும்பத்துடனேயே கழிக்கிறார்கள். மகனோ மகளோ வேலைக்குப் போன பிறகு பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். சிலருக்கு நன்றாகப் பாடத் தெரியும், சிலருக்கு எழுதத் தெரியும், சிலருக்கு ஓவியம் வரும். சிலர் அருமையாகப் பேசுவார்கள். இப்படியாக. ஆனால் அவர்களது தமிழறிவையும் திறமையையும் பெரிதாக யாரும் பயன்படுத்திக் கொள்வார்களா என்பது ஐயமே. எங்கள் தமிழ்ச் சங்கத்தில், இவ்வாறு பயணத்தில் வரும் பெற்றோர்களையும் மற்றவர்களையும் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயல்கிறோம். பல நேரங்களில் நல்ல பலன் கிடைக்கிறது. விருந்தினர்களுக்குப் பொழுது போவதுடன், ஒரு நல்ல உதவியைச் செய்தோம் என்ற நிறைவும் கிடைக்கிறது. எங்களுக்கோ அரிய செல்வங்கள் வந்து சேர்கின்றன!

இந்த வகையில், ஒரு ஆராய்ச்சிப் பயிற்சிக்காக இந்தியாவிலிருந்து இங்கே ஓராண்டுக்கு வந்திருக்கும் திருமதி கீதா சூரியகுமார் அவர்களது அனுபவம் கீழே:

"புதுடில்லியில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் நான், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு வருடப் பயிற்சிக்காக சார்ல்ஸ்டனுக்கு வந்தேன். புது நாடு, புது விதமான மக்கள், புதிய வேலையிடம் என மிகவும் பயந்தேன். ஆனால் இங்கு வந்தால் ஒரே தமிழ் மயமாக இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கம், என்னை அவர்களது தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்குப் பாட்டு கற்றுக் கொடுக்க வாய்ப்பளித்தார்கள். நானே ஒரு சுமார் பாடகிதான். அதிலும் நான் பாட்டுப் பாடக் கற்றுக் கொண்டது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு! எனக்குச் சிறிது வியப்பாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் சொல்லிக் கொடுத்துதான் பார்ப்போமே என்று மூன்று மாதங்களுக்கு முன்பு, வாரம் ஒரு முறை என்று வாரயிறுதியில் வகுப்பெடுக்க ஆரம்பித்தேன். ஐந்திலிருந்து ஒன்பது வயது வரையில் உள்ள ஆறு சிறுவர், சிறுமியர் வகுப்பில் இருந்தார்கள். ஆங்கிலம் பேசும் சமூகச் சூழலில் இருந்தும் இவர்கள் தமிழ் கற்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் கர்நாடக இசையும், திருக்குறளும் அவர்களுக்கு நான் சொல்லித் தரப் போகிறேன், எழுந்து "it's boring" என்று வகுப்பிலிருந்து ஓடப் போகிறார்கள் என நினைத்தேன். ஆனால், இந்தச் சிறுவர் சிறுமியரோ மிகவும் அழகாகப் பாடக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இவர்களது பெற்றோர்களின் உழைப்புக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. வாரா வாரம் வகுப்பில் நான் சொல்லித் தரும் சரளி வரிசை மற்றும் திருக்குறள்களை, என் கணினியில் ஒலிப்பதிவு செய்து அவர்களது பெற்றோர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறேன். அதனால் பிள்ளைகள் வீட்டிலும் பாடிப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பிள்ளைகளின் ஆர்வம், பாட்டுப் படிக்கும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. பிள்ளைகள் அனைவரும் அருமையாகப் பாடுகிறார்கள். அவர்களைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த வகுப்பெடுக்கும் வலையில் சிக்கியதால், நானும் திருக்குறளைக் கற்றுக் கொண்டு பாட வேண்டியதாகிவிட்டது. டெல்லியிலேயே பிறந்து வளர்ந்த தமிழச்சியான எனக்கு இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு என் அமெரிக்கப் பயணத்தில் கிடைத்தது மிக அபூர்வம்தான். என் குடும்பத்தைப் பிரிந்து நான் தனியாக இருப்பது மிகக் கடினமாக இருந்தாலும், வகுப்பு நடத்தும்போது குழந்தைகளோடு செலவிடும் மதிப்புமிக்க கணங்கள் எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகின்றன. அவர்களின் சிரிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம், பேச்சு, எவற்றைச் சொல்வது, குழந்தைகளின் உலகமே ஒரு சொர்க்கம்தான். இந்தச் சின்ன வயதில் இந்தப் பிள்ளைகள் இவ்வளவு ஈடுபாட்டுடன், கடின உழைப்பும் திறமையும் கொண்டு இருக்கிறார்கள். இவர்களது திறன்களையெல்லாம் வெளிக் கொணர்வது பெற்றோர்களின் கைகளில்தான் இருக்கிறது. இன்னும் ஆறேழு மாதங்களில் நான் டெல்லிக்குத் திரும்பிவிடுவேன். ஆனால் இவர்களோடு நான் செலவிடும் இந்த இன்பமான நாட்களை நான் ஒரு போது மறக்கவியலாது.

அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் திருக்குறள்களையும், அவற்றின் பொருளையும் என்னால் படிக்க முடிகிறது. திருக்குறள் எத்தனை அருமையான நூல் என்று வியக்கிறேன். இந்த மிகச் சிறந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த பனைநிலத் தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமெரிக்கப் பயணத்தினால் என் தமிழ் ஆர்வமும், பாட்டுப் பயிற்சியும் மிகவும் கூடிவிட்டது. டெல்லிக்குத் திரும்பியவுடன் அங்கும் இதனைப் போன்ற பயிற்சியையும், கற்றுக் கொடுப்பதையும் செய்யவேண்டும் என்ற ஊக்கம் பிறக்கிறது."

எழுதியவர் - கீதா சூரியகுமார்
தட்டச்சு உதவி - பனையேறி

7 comments:

Unknown said...

We are very proud as in-laws of Mrs. Geetha.Also I am very impressed upon the name of the school "Panai Nilam" and the author of the blog "Panaieri" which are very much associated with me and take me to my younger days."Hats off"to the team and individuals associated with the program
- G. Ramachandran & Family members

Panainilam said...

Dear Thiru Ramachandran and Family, It is very kind of you for the nice comments. It is a great opportunity for people in Panai Nilam Tamil Sangam to have a person like Geetha! Please visit us and our blog when you get a chance!
Anbudan
Panainilam Members

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக நல்ல ஏற்பாடு .. கீதாவுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

//இன்னும் ஆறேழு மாதங்களில் நான் டெல்லிக்குத் திரும்பிவிடுவேன். ஆனால் இவர்களோடு நான் செலவிடும் இந்த இன்பமான நாட்களை நான் ஒரு போது மறக்கவியலாது.//

பல திறமைகளுடன் கூடிய பாட்டு ஆசிரியை மிகச் சரியான நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது, மிகப் பெரிய பரிசு. உங்களுடன் இருக்கும் இத் தருணங்களை எங்களாலும் மறக்க முடியாது. நம் தமிழ்ச் சங்கத்திற்கான உங்கள் பங்களிப்பு மகத்தானது.

Anonymous said...

//இந்த அமெரிக்கப் பயணத்தினால் என் தமிழ் ஆர்வமும், பாட்டுப் பயிற்சியும் மிகவும் கூடிவிட்டது. டெல்லிக்குத் திரும்பியவுடன் அங்கும் இதனைப் போன்ற பயிற்சியையும், கற்றுக் கொடுப்பதையும் செய்யவேண்டும் என்ற ஊக்கம் பிறக்கிறது.//
எதிர்காலத்தில் செம்மையுடன் நம் தமிழ் வாழ, இது போன்ற முயற்சிகள் மிகுந்த பயனளிக்கும். இது போல் பல நல்ல உள்ளங்களின் ஈடுபாடும், முயற்சியும் இருந்தால் நாம் அனைவரும் ஒரு சேர நின்று பெரிய அளவில் சாதிக்க முடியும்.

Anonymous said...

//புது நாடு, புது விதமான மக்கள், புதிய வேலையிடம் என மிகவும் பயந்தேன். ஆனால் இங்கு வந்தால் ஒரே தமிழ் மயமாக இருக்கிறது.//

ஒரு பெரிய உண்மை என்னவென்றால், அயல் நாடுகளுக்கு வந்த பிறகு, நம்மில் பெரும்பாலானோருக்கு, நல்ல தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேச வேண்டும் மற்றும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கிறது. அவ்வுணர்வைச் சற்று அதிகமாகவே இங்கு நீங்கள் காணலாம்.

Raman said...

Hats off to you for your wonderful service in upbringing Tamil and rich Tamil literature and inculcating in your minds of America. Keep up your good work!!!