Saturday, September 27, 2008

பனைநிலம் தமிழறிவியல் கருத்தரங்கம் 2008



"தமிழ் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி.....
"

"2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள்.....
"



நிறுத்துங்க நிறுத்துங்க!

எத்தன நாளைக்குத்தான் இந்த பெருமை பேசி வாழ்றது.
இதை பேசிப் பேசி இந்த நூற்றாண்டிலேயே தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள், ஆரியர்களாலும் மற்றவர்களாலும் தமிழ் உருக்கொழிந்ததைக் காட்டிலும் அதிகமாகவே தொலைத்து விட்டனர். தமிழ் எங்கள் உயிர் மூச்சு! தமிழ் இல்லையேல் நாங்கள் இல்லை!! என்று மேடையில் முழங்கிய திராவிடக் கட்சிகள் தமிழுக்கு செய்த தொண்டுதான் என்னவென்று உண்மையாகப் பார்த்தோமேயானால் - தமிழ் எழுதப் படிக்க, முறையாக பேசக்கூத் தெரியாத மற்றும் தமிழ் பேச கூச்சப்படகூடிய இளைய தலைமுறையினை உருவாக்கியது தான்.

இன்னும் கொஞ்சம் கசப்பான உண்மைகளையும் பார்ப்போமா!


இன்று உலகில் கிட்டத்தட்ட 6800 மொழிகள் இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளிலேயே பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து விடுமாம் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து கொண்டிருக்கிறது என்பது வேற விஷயம். சரி நமக்கு என்ன என்று பார்த்தால் இதில் தமிழ் மொழியும் ஒன்று என்று யுனெஸ்கோ மொழி ஆராய்ச்சி மையம் கூறுகிறது. உடனே எந்த மூடன் சொன்னான் தமிழ் என்றும் இறவா மொழி என்று கட்டியம் கூற கிளம்பி விட வேண்டாம். இன்றுள்ள நிலைமையைப் பார்த்தால் அது உண்மையாகி விடக்கூடிய நிலை உள்ளது. அடுத்த தலைமுறையில் என்ன, நம்ம வயசான காலங்களிலேயே தமிழ் வழக்கொழிந்த மொழியாகக் கூடிய அபாயம் உள்ளது.

இதை எப்பிடி சமாளிப்பது?.

அரசாங்கம் போன்ற அமைப்புகளில் நம்பிக்கை வைத்து பயனில்லை. அவர்கள் சமாதியில் தமிழை தள்ளி விட்டு செம்மொழியாக்கி விட்டோம் என்று மேடையில் வீர வசனம் பேசுவர். இதை நம்மைப் போன்ற எளியோர்களாலே இந்தப் பெரிய முயற்சியின் சிறிய தொடக்கத்தினை ஆரம்பிக்க முடியும்.
இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் உள்ள சார்லச்டன் எனும் ஒரு சிற்றூரில் உள்ள பனைநிலம் எனும் தமிழச் சங்கம்.

அதன் தலைவராக உள்ள
சுந்தர் அவர்களின் மிகச்சிறந்த இடைவிடா முயற்சிகளில் ஒன்று இது.


உலகத்தலைவர்களிடம் நேரம் கேட்டு ஒன்றாக அவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்துவது என்பது கூட பெரிய ஆச்சரியமில்லை. பனைநிலம் போன்ற அமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழகத்திலிருந்து வந்துள்ள இரவு பகலென்றும் பாராது வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள். அவர்களை ஒருங்கிணைத்து இதைபோன்ற தமிழிலேயே ஆராய்ச்சி மாநாடு நடத்துவது என்பது மிகப்பெரிய சவால் தான். சவாலே சாமாளி!

சுந்தர் பாட்டுக்கு தமிழ்ல ஆராய்ச்சி தொகுக்க ஆரம்பிங்கன்னு சொல்லிட்டாரு... ஆராய்ச்சியை விடக் கஷ்டமானது இந்த மாதிரி ரொம்ப முன்னேறிய ஆராய்ச்சியில இருக்கிற விசயங்கள தமிழ்ல மாத்துறது.....இத எப்படி பண்றதுன்னு நாங்க வேற சித்தம் கலங்கி போய்ட்டோம்.

முதல்ல ரெண்டு வாரத்துக்கு ஒரு மூச்சைக் காணோம். சரி ஆளுங்க அரண்டு போயி அமுங்கி போய்ட்டாங்கன்னு பார்த்தா, ஆளாளுக்கு தமிழ் அகராதி, அறிவியல் சொல்லகராதி, அறிவியல் தமிழ் அப்படி இப்படின்னு என்னனமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.நம்ம மக்கள் பக்கத்துல நெருங்கினாலே தூய தமிழ்ல ஆராய்ச்சிகளை பேசி நம்மள அசத்த ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி மாநாடு நாள் நெருங்க நெருங்க நம்மளுக்கு ஒரே பரபரப்பு.


மாநாட்டு நாள்.

மாநாட்டு மகால்ல நுழைஞ்சா பெரிய பரபரப்பு. நம்மாளுக அங்கங்கே அவசர கதியில் குறிப்பு எடுத்து கிட்டு இருக்காங்க. அதைப்பார்த்து நம்மளுக்கும் அந்த பரபரப்பு தொத்திகிச்சு.

தலைமை தாங்கியது திரு. கமலநாதன், சிறந்த எழுத்தாளர் . இவர் கேரளத்துக் கோயில் கலைகள், குறைகள் சாதனைக்குத் தடையல்ல, விண்வெளிப் பயணத்தைக் குறித்த நூல்கள் பலவற்றை எழுதியவர். இந்திய விண்வெளித்துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர். அறிவியலைத் தமிழில் கொண்டு செல்லும் இந்த ஒரு கருத்தரங்கிற்குத் தலைமை தாங்க மிகவும் பொருத்தமானவர். நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியது உமா மற்றும் ஆனந்தி.

முதல்ல வந்தாரு பருத்தி வீரன் கணேசு. பருத்தி உடை சார்ந்த தொழில்ல நிபுணத்துவம் பெற்ற அவரு பருத்தி துறை சார் நுணுக்கங்களை தெளிவா எடுத்து விளக்கினார். பருத்தி இழையிலிருந்து துணியாக மாறும் வித்தையை இழை இழையாக பிரிச்சி அலசி எடுத்தாரு.

அடுத்து நிறைய ஆளுக இருக்காக நம்ம மெல்ல போய்க்கிலாம்னு கொஞ்சம் அசந்தேன் பாருங்க.....நம்ம பேரக் கூப்பிட்டுடாங்க ...

நம்ம பேசுனது ஸ்டெம் செல் அப்பிடின்ற அற்புதத் தன்மை வாய்ந்த செல்களையும் மற்றும் அதன் மருத்துவ பயன்களைப் பற்றியது....எதோ சமாளிச்சி ஒரு வழியா முடிச்சாச்சு. கிளம்பலாம்னு பார்த்தா கேள்வி வேற கேட்போம்னு சொல்லிட்டாங்க..ஆஹா..இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு தான் சிக்கவச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது. அதையும் ஒரு வழியா முடிச்சு வந்தாச்சு.

அடுத்து மேலாண்மை மற்றும் பொருளாதரம் பற்றிய நுட்பங்களை எடுத்து விளக்கினார் நம்ம பாட்ஷா. அவரு ரெம்ப நாளா வேலை பார்க்கிற துறை...எல்லாத்தையும் நல்லா புரிய வச்சாரு. அடுத்தது ஆனந்தி. கணிதப்புலி. எளிய கணிதம் பயில்வது எப்பிடின்னு சொல்லிட்டு போயருவாங்கன்னு பார்த்தா நம்மூரு எட்டாவது கணக்கு ஆசிரியை மாதிரி நம்மாளுகளுக்கு அப்பப்ப வகுப்புப் பயிற்சி வேற கொடுத்தாங்க. எளிமையா இருந்ததால நம்ம மக்களுக்கு உபயோகமா இருந்தது.

மருத்துவத் துறையிலிருந்து பேசினார் பிரியா ராமன். குழந்தை நல மருத்துவர். குழந்தைகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகளை பற்றி அருமையா தெரிய வச்சாங்க. நம்ம தாய்மார்களுக்கு மிக்க பயனுள்ளதா இருந்தது.

இதயத்துறையிலிருந்து ஆராய்ச்சியாளர் ஹரி. இதயத்தின் இயக்கம் அதன் அதிமுக்கிய வேலைகளைப்பற்றி விளக்கியது நன்றாக இருந்தது.

வினு அடுத்ததாக வந்தாங்க. அவங்களும் பொது மருத்துவம் பற்றி சொல்லி புரிய வச்சாங்க. நோய் எதிர்ப்பு முறைகள் பற்றி விளக்கமா சொல்லி புரியவச்சாங்க.


அடுத்தது புரையத்திய நிபுணர் சீனிவாசன். எலும்பு மஜ்ஜையின் சிக்கலான செல்களைப்பற்றி அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.


அதே துறைசார் குமரன் கல்லத்தியம் பற்றி உரை நிகழ்த்தினார். எலும்பின் புதுச்செல் உருவாக்கத்தில் அதன் பயன்பாடுகளைபற்றி சொன்னது பயனுள்ளதா இருந்தது.


புற்று நோயில் ஒரு புரதம் - இது சிவாவினுடைய தலைப்பு. புற்று நோயையே புறந்தள்ளிவிடக் கூடிய அளவிற்கு மருந்தாக பேசினார்.

சாமுவேல் பேசியது நீரிளவு நோய் பற்றியது. நோய் காரணிகள் அதன் விளைவுகள் மற்றும் அதை தடுக்கும் காரணிகளைப் பற்றியது நன்றாக இருந்தது.

யுவராஜ் வந்து அகமும் புறமும் என்ற தலைப்பில் பேசினாரு. நம்ம உடம்பில உள்ள நுண்ணிய சுரப்பிகளின் செயற்பாடுகளைப் பற்றியும் அழகா எடுத்து பேசினார்.


இதெல்லாம் கேட்டு மக்கள் ரெம்ப உணர்ச்சி வசப்படக்கூடதுன்னு வந்து பேசியது தான் புதுமை அரசன். வாழும் கலை தலைப்பில் தியானம் பற்றி சொல்லி நம்மை தியானிக்க வச்சாரு.


அடுத்ததா வந்தது நம்ம சுந்தர். இதயச் செல் சட்டகத்தில் ஒரு புரதம். இது என்னான்னு பாக்குறீங்களா, அதான் நம்ம இதயசெல்களுக்குள்ள இருக்கிற ஒரு இழையின் புரத அங்கம். அதப்பத்தி நல்ல விளக்கி பேசினாரு.
பார்வையாளர்களில் ஒருவராய் இருந்த ஆனந்தகுமாரும் ஆர்வத்துடன் வந்து அனைவரையும் பாராட்டினார்.

அத்தனை மக்களும் சுந்தரத்தமிழில் அருமையாக தமிழ் அறிவியல் மாநாட்டை செய்து இருந்தாங்க. தமிழிலேயே புதிய கலைச் சொற்கள், அறிவியல் செய்திகள் மற்றும் அராய்ச்சித தகவல்களை அளித்து தமிழ் வீச்சில் அறிவியல் நடைபோடுவதைப் பார்க்க நம்ம மக்களுக்கு ஒரே பெருமை மற்றும் மனநிறைவுதான்.


இறுதி உரை கொடுத்த கமலநாதனும் இதையே சொல்லி ஆச்சரியப்பட்டதோடு அருமையாக உரையளித்த அனைவரையும் வெகுவா பாராட்டினார். கணேஷ் வந்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்து தமிழறிவியல் கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.


இவ்வளவு சிறப்பா கருத்தரங்கம் நடந்ததைப் பார்த்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஆசை வந்ததை யாராலும் மறுக்க முடியாது.


இது போல காலச்சக்கரத்தின் முன்னேற்றங்களை, அதன் பரிணாம வளர்ச்சிகளை மற்றும் அத்தோடு வளர்ந்து வருகின்ற அறிவியல் நுட்பங்களை தமிழில் புகுத்தி செம்மையாக்கினால் இப்பிரபஞ்சம் உள்ள காலத்தே தமிழ் வாழும் என்பது உறுதி.


தமிழ் வளர்ப்போம்!

அறிவியலால் தமிழ் வளர்ப்போம்! தமிழால் அறிவியல் வளர்ப்போம்!!


............................................

எல்லாருடைய ஒளிப்படங்கள் இல்லாததால், கிடைத்தவைகள் மட்டுமே இங்கு வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

........................................

சுந்தர் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்





......................................................................


செந்தில் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.............................................


சீனிவாசன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.........................................



குமரன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.................................................................


யுவராஜ் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்




.................................................................


புதுமை அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்












..................



கருத்தாக்கம் மற்றும் ஒளிப்படங்கள் உருவாக்கம்
கந்தன் - வள்ளி

14 comments:

Anonymous said...

கந்தன் - மிக்க நன்றி, சிறந்த தொகுப்பு! முக்கியமாக அந்த உரைக் கோப்புகளை அசைபடங்களாக்கியமைக்கு.
வள்ளி - மிக்க நன்றி! எதற்குச் சொல்கிறேனென்று உங்களுக்கே தெரியும் :)) இன்னும் அவர் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது :))
- பனையேறி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//இவ்வளவு சிறப்பா கருத்தரங்கம் நடந்ததைப் பார்த்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஆசை வந்ததை யாராலும் மறுக்க முடியாது.//

வருங்காலங்களில் இப்பணி தொடர வாழ்த்துகளும், ஆதரவுகளும்!
-பனையோலை.

Anonymous said...

// மேடையில் முழங்கிய திராவிடக் கட்சிகள் தமிழுக்கு செய்த தொண்டுதான் என்னவென்று உண்மையாகப் பார்த்தோமேயானால் - தமிழ் எழுதப் படிக்க, முறையாக பேசக்கூத் தெரியாத மற்றும் தமிழ் பேச கூச்சப்படகூடிய இளைய தலைமுறையினை உருவாக்கியது தான்.//

உண்மைதான். தவறு இரண்டு பக்கத்திலும் இருக்கிறது. ஆட்சியைப் பிடித்தவுடன், கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, வேக வேகமாக ஐந்தாண்டுகளுக்குள் சொத்து குவிக்கும் அவசரம் ஆட்சியாளர்களுக்கு. அது யாருடைய வேலையோ, நரி வலம் போனா நமக்கென்ன, இடம் போனா நமக்கென்ன, நம்ம மேல விழுந்து புரண்டாம இருந்தா சரி என்ற பயம் கலந்த அலட்சியம் மக்களுக்கு(நமக்கு).
கந்தன் வரிகளைப் படித்தவுடன் நினைவுக்கு வருவது நம் குல்லாய் வியாபாரி கதைதான். நம் குல்லாய்களை (தமிழ் ஆற்றல்களை) ஒரு கூடைக்குள் அடுக்க, ஒரு அறிவாளி அவசியம் தேவை (குரங்கிலிருந்து பிறந்தவர்கள்.....). ஒரு சிறி(ரி)யாராவது, தோன்றி தமிழ் காப்பாற்ற படவேண்டும்.


-பனையோலை

Anonymous said...

// இன்னும் சில ஆண்டுகளிலேயே பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து விடுமாம். இதில் தமிழ் மொழியும் ஒன்று என்று யுனெஸ்கோ மொழி ஆராய்ச்சி மையம் கூறுகிறது. //

இது கொஞ்சம் பழைய வசனமாகத் தெரிகிறது. இன்று பெருகி வரும் வலைப்பதிவர்களைப் பார்த்தால் அப்படி தோன்றவில்லை. இன்னும் ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று பதிவர்கள் இருப்பார்கள். "மாப்பிள்ளைப் பையன், எத்தனை ப்ளாக்கிள்(blog)
எழுதறார்" என்ற கேள்விகள் பெண்வீட்டார் கேட்கலாம். "ஒரு ப்ளாக்கரும்(blogger) இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டோம்" என சிலிர்த்துக் கொள்ள நேரிடலாம்.
இதனால் சொல்லிக் கொள்ளப்படுவது:
கொஞ்சமாவது எழுதி(&படித்து) நம்மையும், தமிழையும் காப்பாற்றலாம்.
-பனையோலை.

Anonymous said...

பனையோலையின் கருத்துகளுக்கு நன்றி....

வசனம் பழையதுதான், உண்மை பழசாகவில்லை.. அன்றைய காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தில் வணிக, மத, சமூக மற்றும் அறிவியல் அனைத்திலும் சர்வ வல்லமையோடு வலம் வந்து கொண்டிருந்த கிரேக்க மொழியின் இன்றைய நிலைமை என்ன? அலெக்சாண்டர் போன்ற மாவீரர்கள் தான் வென்ற நாடுகளிலெல்லாம் சென்று பரப்பியும் அது காலப்போக்கில் சிதைந்து போனதுதான் உண்மை.

லத்தீன் மொழியும் முடிசூடா சக்கரவர்த்தி போல திகழ்ந்த மொழிதான். முழுமூச்சாக எல்லா இடங்களிலும் அதை பரப்பியும் இன்று கேட்பாரற்று கிடப்பது உண்மைதான்.

இறைமொழி என்று வருணிக்கப்பட்ட சமஸ்கிருதத்தின் இன்றைய நிலை என்ன?

இவைகளெல்லாம் சொந்த மக்களிடத்திலே சர்வ சக்தியுடன் வலம் வந்து கொண்டிருந்த காலத்திலேயே உருக்கொழிந்த மொழிகள்...

தமிழ் அப்பிடியா...மற்ற மொழி, இன, மத, சமூக நெருக்கடிகள் நெருக்கினால் கூட சமாளித்துவிடும்....சொந்த மக்களிடத்திலே வலிவிழந்து, மதிப்பிழந்து, உருக்கொழைந்து, தொலைந்து போய்க்கொண்டிருக்கிறது.....ஆணி வேரே அரித்துப் போனபோது, வண்ணப்பூக்கள் வருட வருடம் கண்டிப்பாகப் பூக்கும் என்பதை போலுள்ளது....

வலையூட்டங்களினால் தமிழைத் தக்கவைப்போம் என்பது கோமாவில் உள்ள நோயாளிக்கு நேரம் தவறாமல் பிராண வாயுவு கொடுப்பது போல தான்....வலைப்பதிவாளர்கள் பெருகி வருவது, இன்றைய தேதியிலே பெருகி வரும் தமிழ் இணையப் பயனர்களோடு ஒப்பிடுகையில் பெருங்காயத்தை கடலில் கரைப்பது போலதான். மூட்டை மூட்டையாக கொட்டினாலும் கடலின் கரிப்பை மாற்றி விட முடியுமா?.....இணையத்திலும், அச்சிலும் வாழ்வதை வைத்து தமிழ் செம்மையாகவே உள்ளது என்று நமக்கு நாமே பெருமையாக சொல்லிக் கொள்வதைப் போல தோன்றுகிறது....

இரு தமிழ்ர்கள் பேசிக் கொள்வதற்கு ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் தேவைப்படும் போது...தமிழ்கத்தில் உள்ள ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் துணை மொழிப்பாடமாகக் கூட தமிழை தேர்ந்தெடுக்காத போது .... தமிழ்கத்தில் உள்ள ஆங்கில வழி பள்ளி மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டனை எனப்படும் போது....தமிழ்நாட்டில் தமிழிலே பேசினால் விசித்திரமாக ஏளனமாக அனைவரும் திரும்பிப் பார்க்கும் போது.....தமிழிலே படித்து வாழ்வை சிறிதும் ஒப்பேற்ற முடியாது என்ற போது....தமிழன் தன் பேச்சு வழ்க்கில் எவ்வளவு தமிழை எவ்வளவு குறைத்தால் அவ்வளவு அதிகமாக பெருமை கொள்ளும் போது.....தமிழ் சிதைந்து வருவதாகத் தெரியவில்லை, அதனால் நாம் மிகவும் பயப்பட தேவையில்லை என்பது, சீறி வரும் சுனாமியைப் பார்த்து கடல் அலை என்று காலை நனைத்து வர முயல்வதைப் போல உள்ளது.....

கந்தன்

Anonymous said...

உலக மொழி வரலாறுகளை புரட்டி போட்டு கண்டிப்பாக தமிழ் அழிந்துவிடும் என்று ஆறுடம் கூறும் கந்தன் அவர்களுக்கு.... முதலில் மிக பெரிய நன்றி. நம் தமிழ் கருத்தரங்கு சிறப்பாக நடந்திருந்தாலும், உலகிர்க்கு முக்கியமாக தமிழ் மக்களுக்கு வலையின் மூலமாக எடுத்துரைக்க பதிவு செய்ததற்கு தான் அந்த நன்றி. நீங்கள் எழுதிய விதமும், நடையும் அற்புதமாக இருந்தது. உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்... மெத்த படித்த உங்களை போன்றவர்கள் அறிவியல் தமிழ் கருத்தரங்குகளில் பங்கு கொள்வதும், அப்படி பங்கு கொண்டதை பதிவு செய்வதும், தங்களை போல் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணியை செய்யும் போதும், செய்து கொண்டு இருக்கும் போதும்.... கொஞ்சமாவது (எழுதி&படித்து) நம்மையும், தமிழையும் காப்பாற்றலாம் என்று பனையோலை சொன்ன செய்தியில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பனையோலைக்கு ஒரு கேள்வி!! ப்ளாக் (blog) என்பதை தமிழாக்கத்தில் எழுதி இருந்தால் இன்னும் கூட அதிகமான நம்பிக்கை வந்திருக்கும் தமிழ் வளரும் என்று. நீங்களும் தமிழ் வளர்க்கலாம் தவறில்லை....?????.


ஆனால் விவாதத்தை கூர்ந்து கவனித்தால் தமிழ் அழிந்துவிடும் என்னும் கந்தன், தமிழை கொஞ்சமாவது காப்பாற்றலாம் என்னும் பனையோலை எண்ணங்களில் தமிழ் வாழ வேண்டும் என்பதே தொக்கி நிற்கிறது. இந்த எண்ணம் எல்லோருக்கும்...... வேண்டாம் வேண்டாம் உங்களை போன்ற மெத்த படித்தவர்களிடம் இருந்தாலே போதும் தமிழை காப்பாற்றிவிடலாம். இந்த முயற்சி வெற்றி பெற தமிழ் உங்களை காப்பாற்றட்டும். வாழ்க தமிழ்.

இளமை அரசன்

Anonymous said...

கந்தன் மற்றும் இளமை அரசன் அவர்களுக்கு நன்றி. தமிழ் அழிந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கம் உங்களுக்கு (ஏற்புடைய கூற்றுதான்). இனியாவது வாழவேண்டும் என்ற ஆவல் எனக்கு. அடிப்படையில் நம் அனைவரின் எண்ணமும் ஒன்றுதான். இந்த ஆரோக்யமான விவாதங்களின் பயனால் நன்மை விளைந்தால் சரி.
பதிவர், பதிவு என நான் எழுதியிருக்க வேண்டும். இனிமேல், நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.
கந்தன் நீங்கள், இந்த பின்னூட்டத்திற்குப் பதில் ஒரு தனிப்பதிவே போட்டிருக்கலாம். தங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.

-பனையோலை.

Anonymous said...

பனையோலை ? வெளியில ஆளு அமுக்கமா இருந்துட்டு இப்பிடி இங்க விலாசுறீங்களே....இன்னும் நம்ம மக்களுக்கு நீங்க யாருன்னே தெரியல்ல ...கொஞ்சம் வெளிய வாரீகளா

Anonymous said...

வாரேன், வாரேன். இதுவரைக்கும், பின்னூட்டத்தில
பனையேறி அண்ணன் வந்திருக்காக,
கந்தன் வந்திருக்காக,
இளமை அரசன் வந்திருக்காக,
ஆனா, கடைசியா வந்த நீங்க யாருன்னு சொன்னீகன்னா சவுரியமா இருக்கும். அம்புட்டுதேன்!!!
-பனையோலை.

Anonymous said...

panaiyolai!.....vaammaa minnal!

Anonymous said...

பனையோலை ....நீங்க நல்லவரா கெட்டவரா ???....

Anonymous said...

உங்க‌ள் முய‌ற்சிக்கு வாழ்த்துக்க‌ள்.
க‌ட்டுரைக‌ளை வ‌ரிவ‌டிவில் த‌ந்திருந்தால் இன்னும் ப‌ய‌ன்மிக்க‌தாய் இருந்திருக்கும்.
தொட‌ருங்க‌ள், தொட‌ர்ந்து வ‌ருகிறேன்.

தோழ‌மையுட‌ன்,
செங்கொடி

நற்கீரன் said...

அறிவியல் தமிழில் பட்டறை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. உற்சாகம் தருகிறது. இவர்களில் ஒரு சிலராவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்தால் சிறப்பாக இருக்கும். அமெரிக்காவில் பயனர்கள் உள்ளார்கள். இணையம் ஊடாகவோ, முடிந்தால் நேரடியாகவோ பயிற்சியும் வழங்க முடியும் (தேவைப் பட்டால். http://ta.wikipedia.org/wiki/WP:tawiki_workshop