Sunday, September 21, 2008

நளபாகம்

ஹெய்தி, கெய்கோ தீவுகள், பஹாமாஸ் தீவுகள், மயாமி, ஜாக்சன்வில், சவானா, சார்ல்ஸ்டன் போன்ற கடலோர பிரதேசங்களுக்கான விசேஷ வானிலை அறிக்கை: அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இவ்விடங்களில் பலத்த, மிகபலத்த இடி மழை பெய்யக்கூடும். ம்ணிக்கு 20 முதல் 120 மைல் வேகத்தில் பலத்த காற்று, சூறாவளிக் காற்று (ஹரிக்கேன் ஹானா, Hannah) வீச வாய்ப்புள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஆராய்ச்சி கூடத்திற்கு போகவேண்டாமென்றும், காற்று மழை ஆதலால் இல்லத்தரசிகள் யாரும் சமையலறைக்குள் சென்று சமையல் செய்து, தண்ணீரில் கை வைத்து ஜலதோஷம் பிடித்து அவதிப்பட வேண்டாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதக் கேட்டப்பறமும், யாரு போய் சமச்சு, சளி புடிச்சு கஷ்டப்ப டறதுனு பயந்து, கால மடக்கிட்டு சோபாவுல உட்கார்ந்து, மெல்ல புருஷங்காரங்களை கெளப்பிவிட்டு சமைக்கச் சொல்லி வலியுறித்தினோம். புருஷன் பொஞ்சாதிகளுக்கு நடுவே நடந்த இந்த உறையாடல்கள் தற்செயலா பெரியவர் (வாத்தியார்) காதுல விழுந்து விடவே, அவர் ஆண்கள உற்சாகப்படுத்தி, நம்பிக்கையூட்டி ஒருவழியாய் ஒத்துக்கொள்ள வைத்தார். பெரியவர் வார்த்தையை மதித்து, காளையர் கரண்டி தூக்கிவிட்டனர்.

தனியா நின்னாதன திண்டாட்டம். கும்பலோட கோவிந்தா போட்டா கஷ்டமென்னனு எல்லா ஆம்பளைங்களும் வேட்டிய வரிஞ்சி கட்டிக்கிட்டு, தலைல முண்டாசோட, தடதடனு, ஜேம்ஸ் தீவிலுள்ள அந்த ஆயிரம் சதுரடி அபார்ட்மெண்டில் ஆஜரானார்கள். இனியன் பட்டியல் போட, மாயோன் மறுநிமிடம் காய்கறிகளுடன் காணப்பட்டார். கூத்தும் கும்மாளமுமாய் அந்த ரயில்வே கம்பார்ட்மெண்ட் போன்ற அடுக்களைக்குள் ஆண் சாம்ராஜ்யம் அழகாக சமைத்தது. அட நம்புங்களேன். ……. ஆண்கள். ஆண்களேதான். நல்லா கண்ண கசக்கிகிட்டு பாருங்க. சனிக்கிழமை தூக்கத்த விட்டு பனிரெண்டு மணி மதிய நேரம் முழிச்சு பார்த்திருந்தாதன உங்களுக்குத் தெரிய............ போர்வைக்குளேந்து பூலோகத்துக்கு வாங்க.

பல்லு வெளக்கறவங்களுக்குத்தான் பருப்புப் பொடியோட சாப்பாடு. சுத்தமா குளிக்கிறவங்களுக்குத் தான் சூடான சூப், சில்லுனு சாலட். கண்டிப்பானார்கள் ஆண்கள் இந்த விஷயத்தில். இப்படி ஆண்கள் கண்டிப்பா சொல்லாட்டா பெண்கள் சுறுசுறுப்பா ஒன்றரை மணிக்கெல்லாம் எங்கேந்து பல்லு வெளக்குறது?

“குளிச்சு முழுவி, ….சீவி முடிச்சு, சிங்காரிச்சு,
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு,
பாத்திரத்த உருட்டும் புருஷங்காரன பாக்க வந்த பொண்டுகளே பசியும் எனக்கு தாங்கலியே,
பிஸ்கட் சாப்பிட்டா பத்தலியே”னு
வள்ளியும் நானும் புலம்பல் பாட்டு பாடவே, எல்லா பெண்களும் வந்தாதான் சாப்பாடுனு இனியன் கண்டிப்பா சொல்லிட்டாரு. சரிதான். இனியாளுக்காக இவர் காத்திருப்பதால் தான் அப்படிச் சொல்லியிருப்பாருன்னு, எங்களை நாங்களே சமாதானப் படுத்திக்கொண்டோம்.

திடீரென கும்முனு செண்ட் வாசம் பாலத்திலேந்து வந்தது. சரி. சரி. நம்ம பொண்டுக கோஷ்டி வர்ர காரு வீட்ட நெருங்குது. இன்னும் செத்த நாழியில வாசல் மணி அடிக்குமென தெரிஞ்சிகிட்டோம். (பெண்கள் வரும் பின்னே. செண்ட் வாசம் வரும் முன்னே). சொன்னபடியே வாசல் மணி அடித்தது. திறந்தேன். ஜிலுஜிலுன்னு ஜோராய் அலங்காரம் செய்துகொண்டு குழந்தைகளோடும், கைப்பைகளோடும் வந்து நின்ற தோழிகளை வரவேற்றேன்.

அப்பாடா, ஒரு வழியா எல்லாரும் வந்தாச்சு. இனியாவது சாப்பாடு கிடைக்கும்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். சற்று நேரம் சுடிதார்கள், சேலைகள் யார் யார் எங்கெங்கேந்து வாங்கினாங்க, என்ன விலை, ரவிக்கை எங்கே தைத்தார்கள் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம். ரொம்ப முக்கியமான விஷயமாச்சே……..

"யூ டியூப் (you tube)"ல பாட்டு கேட்டோம். சீட்டு விளையாட்டு. சுவாரஸ்யமான சிறுவயது கதைகள் பேசியபடி கல்லாங்கா விளையாட்டு. நேரம் போய்க் கொண்டேயிருந்தது……. லேசாய் பசித்தது.

பலவித வாசனைகள் சமையலறையிலேந்து வந்தபடி இருந்தது. அறைத்தல், வதக்குதல், கிண்டுதல், கிளருதல், உருட்டுதல், உடைத்தல், வெடித்தல்..... அடாடா………. அப்படி என்னதான் சமைக்கிறாங்க ரெண்டு மணி நேரமா என வியந்தபடியே பெண்கள் கூட்டம் பெரியவரிடம் பசிக்குது, பசிக்குதுனு தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

ஆட்டத்தை முடித்துக் கொண்டு அமைதியா சாப்பிட தயார் ஆகுமாறு, பெரியவர் மணி அடித்து அறிவித்தார். ஆடிச் சோர்ந்த அம்மணிகளுக்கு ஆஹாவென்ற ருசியான ரசம். சுர்ரென்று நாக்கை சுண்டி உசுப்பும் சற்றே காரமான பருப்புப் பொடி சாதம் உருண்டைகளாக்கப்பட்டு தலா ஒரு உருண்டை அளிக்கப்பட்டது. கடித்துக்கொள்ள சாலட் மற்றும் அஸ்பாரகஸ். பலத்த உபச்சாரம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி. வெந்த அஸ்பாரகஸ் வேம்பின் தங்கச்சி போலும் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டோம். தண்ணீர், கை துடைக்க தாள், பல் குத்த குச்சி முதற்கொண்டு கணவன்மார்கள் சகல சிஷ்ருஷைகளும் செய்தார்கள்.

ஹானா (Hannah) வந்தாலும் வந்தது. இவங்க ஜாதகத்திலேயே கிரகநிலை மாற்றம் எற்படுத்திடுச்சா? ……………….

எங்களுக்கு ஏதோ நல்ல நேரம அன்னிக்கு! எல்லா பணிவிடைகளும் செஞ்சாங்க. இனிமேல் தான் விருந்து.

முதலில் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் வேலுடையானின் கைவண்ணம். பின் பெரியவர் மணக்க மணக்க செய்த உருளை கிழங்கு பொரியல், தக்காளி போட்ட பருப்பு, டாக்டரம்மா வீட்டுக்காரர் கந்தன் செய்துவைத்த கடலை பருப்புக்குள் கண்சிமிட்டும் காலி பிளவர், வினோதனின் அஸ்பாரகஸ், இளவரசு மற்றும் ஷ்வா மாமாவின் சிறப்பான உதவி மற்றும் மேற்பார்வையில் அனைத்தும் அமர்க்களமாய் தயாராகி சாப்பாட்டு மேசையில் சுடச்சுட வந்து நின்றது. என் வீட்டுக்காரர் போட்டோ எடுத்ததோடு சரி.

கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பில் ஜிலுஜிலுத்த கொத்தமல்லி, கரிவேப்பில்லை மிதக்கும் நீர்மோர் சகிதம் பாஸ்மதி சோறு வடிக்கப்பட்டு நெய், அப்பளம், ஊறுகாயுடனும், உபசாரங்கள் பலவோடும் அறுசுவை அமுது படைத்த ஆம்படையான்கள் அனைவருக்கும் "முதல் ஆய்வர் (first author)" தகுதி கொடுத்து சிறப்பித்தோம்.

பூரித்துபோன புருஷன்மார்கள் எங்களுக்கு சமைக்கத்தெரியாதுன்னு நெனைச்சீங்களா, நீங்க என்ன சமைக்கிறது, எங்களாலயும் முடியும்னு நிரூபித்து காட்டினரே தவிர, இனி நாங்களே சமைக்கிறோம் என்று மட்டும் சொல்லாதது ஒன்றே குறையாக முடிந்தது மதிய உணவு.

மகிழ்ந்து போன மங்கையர் கூட்டம் மனமார்ந்த நன்றிகளுடன், அடுத்த முறை சமைக்க நேர்ந்தால் இன்னும் சிறப்பாய் சமைக்க ஆலோசனைகள் வழங்கியது.
மதிய உணவோடு மட்டும் நிறுத்தி விடாமல், பகல் தூக்கம் முடிந்து மாலையில் எழும் மனைவியருக்கு சுவையான ஸ்வீட், காரம், காபி வழங்கலாம் என்றும், பஜ்ஜி சொஜ்ஜி செய்தால் கூட போதுமென்றும், இரவில் அது இதுனு அலட்டிக்காம லைட்டா பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, மசாலா பாலோடு நிறுத்திக்கொண்டால் போதுமென்றும் ஆலோசனை வழங்கியது.

நிறைவாக அடுக்களைக்குள் புகுந்து அசத்திவிட்ட ஆண்களுக்கு நூற்றி ஒன்று மார்க்குகள் அளித்து தீபாவளிக்கு தம் செலவில் ஜிகுஜிகுவென்று மின்னும் நல்ல சட்டை வாங்கித்தரப்படும் என்றும் உறுதி அளிக்கபட்டது. அனைத்துக்கும் மேலாக “அசத்தல் புருஷன்” என்ற உயர்வான பட்டத்தையும் வழங்கி கௌரவப்படுத்தியது மாதர் சங்கம்.

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை.

- ராதை

படங்கள்: மாயோன்

9 comments:

Anonymous said...

//ஜிகுஜிகுவென்று மின்னும் நல்ல சட்டை// :))

கலக்கல்! புயலோடு புயலாக நடந்த கூத்தில் பனையேறியை விட்டுவிட்டதை மென்மையாகக் கண்டிக்கிறேன்;) அடுத்த முறை ஒரு துண்டு போட்டு வைக்கவும், என் முண்டாசுக்கு!
-பனையேறி

Anonymous said...

//குளிக்கிறவங்களுக்குத் தான் சூடான சூப், சில்லுனு சாலட். கண்டிப்பானார்கள் ஆண்கள் இந்த விஷயத்தில்.//


அப்படியாவது குளிப்பாங்களான்னு ஒரு நப்பாசைதான்.

Anonymous said...

//சூறாவளிக் காற்று (ஹரிக்கேன் ஹானா, Hannah) வீச வாய்ப்புள்ளதால்,

புருஷங்காரங்களை கெளப்பிவிட்டு சமைக்கச் சொல்லி வலியுறித்தினோம்.//

சூறாவளிக்குதான் அசைவாங்க போல தெரியுது.

Anonymous said...

கலக்கலா எழுதிட்டீங்க.....அன்னிக்கி சமைச்ச சாப்பாடு போல எழுத்தும் கமகமக்குது ......ஒவ்வொரு படத்துக்கும் கீழ விளக்க வரிகள் இருந்தா சொந்தக்காரங்களுக்கு அனுப்ப சவுகரியமா இருக்கும். இந்த கூத்து அடிக்கடி நடக்காதபடி இருந்தால் புருஷர்களுக்கும் நல்லதா இருக்கும்! (ஏன்னா இப்பவே பழக்க தோசத்தில சில புருஷர்கள் சமையக்கட்டில்ல கரண்டியோட போயி நிக்கறதா ஒரு தகவல்....எல்லாம் கலி காலமய்யா !!)


ஆஹா! பனையேறி பின்னூட்டத்தில வந்து துண்டு போட பாக்குறாரே மனுஷன்...அவர் வீட்டுல தான் தினமும் சமைக்கிறாரே..இங்கயும் வந்து மறுபடியும் சமைக்க கூடாதென்ற ஒரு நல்ல எண்ணத்தில தான் அவரை கூப்பிடவில்லை என்பதை
மிக்க வருத்தம் கலந்த மகிழ்வுடன் (?!!!) சபையோருக்கு தெரிவுபடுத்திகொள்ள விரும்புகிறோம்....

க க க க க கந்தன்!

Anonymous said...

ராதை மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்..
அனைத்து விஷயங்களையும் ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள்..
இன்னொரு தடவை ஹன்னா வருமா என்று காத்து கொண்டிருக்கிறேன் ..
இரவும் அங்கேயே இருந்து சுட சுட இட்லி சாப்பிட்டதை எழுத மறந்து விட்டீர்களே ..


வ வ வ வ வ வள்ளி

Anonymous said...

//இனி நாங்களே சமைக்கிறோம் என்று மட்டும் சொல்லாதது ஒன்றே குறையாக முடிந்தது ...//

இது குறிஞ்சி அவ்வளவு சுலபமா பூக்காது.... மங்கையர்களே....

இளமை அரசன்

Anonymous said...

arumai

காயத்ரி said...

எனதருமை ஆண் நண்பர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று எதை கற்று தேர்ந்தீர்களோ இல்லையோ நன்றாக சமைக்க கற்று கொண்டீர்கள் போலும்.....சமைத்தவை அனைத்தையும் பதிவில் காண்பித்திருந்தால் இன்னமும் அழகாக(?!) இருந்திருக்கும்!

Anonymous said...

கலக்கல் பதிவு :)