
வாட்மலாவ் தீவில், 48 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இத்திராட்சைத் தோட்டத்தில் "மஸ்கடைன்" வகை திராட்சை விளைகிறது. இனிப்பு சுவை அதிகமான இவ்வகை பழங்கள், வெதவெதப்பான சீதோஷணம் காரணமாக வட அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளிலேயே அதிகமாக காணப்படுகின்றன. "இர்வின்-கவுஸ் வைன்யார்டு" (Irvin-House Vineyards) சார்ல்ஸ்டனின் ஒரே ஒரு மதுபானம் தயாரிக்கும் சிறுதொழிற்சாலை ஆகும்.






ஐவகை மஸ்கடைன் திராட்சைப் பழங்கள் கொடிகளிள் கொத்துக் கொத்தாக பழுத்து தொங்குவதை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காணலாம். இச்சமயங்களில் நம் விருப்பப்படி பழங்களை பார்க்கவும் ருசிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பிறகு பழங்கள் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு இரசாயன முறைகளில் நொதிக்கப்பட்டு, இறுதியில் அனைவரும் விரும்பும் வகையில் அழகான கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு, கடைகளின் கண்ணாடி அலமாரிகளை அலங்கரிக்கின்றது. உயர்தர மக்கள் மட்டுமன்றி அனைத்துவகை மக்களும் மதுபானத்தை அலங்காரக் கோப்பைகளில் நிரப்பி உறிஞ்சும் காட்சி மேலை நாடுகளில் சகஜமான விஷயமாகும். 






தோட்டத்திலிருந்து வெளியேறுகையில் குளம் ஒன்றையும், பண்ணை மிருகங்கள் பலவற்றையும், "ஐரிஷ் மாஸ்" கொடிகள் படர்ந்த ஓக் மரங்களையும் அழகான புல் வெளிகளையும் காணலாம். கடைசியாக பரிசுப் பொருள் விற்கும் கடையில் சுவைப்பதற்கும் சிறிது மது அளிக்கப்படுகிறது. திராட்சை அறுவடைக் காலமான ஆகஸ்ட் மாத இறுதியில் மது தயாரிக்கும் திருவிழா ஒன்று வருடந்தோரும் நடத்தப்படுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த இவ்விழாவின் போது, மரத்தொட்டிகளில் கனிந்த பழங்கள் நிரப்பப்பட்டு, காலால் மிதித்து பழரசத்தை வெளிக்கொணர்ந்து சிறுவர்கள் விளையாடினர். முகத்தில் படம் வரைதல், சோளப்பொறி விற்பனை, மது விற்பனை, பார்-பி-க்யூ, மேற்கத்திய சங்கீதம், பண்ணை மிருகங்களுடன் விளையாடுதல் ஆகியவை இவ்விழாவின் மற்ற முக்கிய பொழுதுபோக்குகளாகும். 

மது அருந்துவோர் மட்டுமன்றி, அருந்தாதவரும் (திராட்சைகள் சாப்பிட்டு) மகிழ்ச்சியாக சுற்றி வர தோதான இடம். அறுவடை காலத்தில் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு அமைதியான அழகான இடம் இந்த தோட்டம். 
மாயோன் ராதை




மாயோன் ராதை
2 comments:
Beautiful pictures and post, Mayon and Radhai!
-Panaiyeri
மிகவும் சுவையான செய்தி. பழ ரசங்களில் என்றுமே திராட்சைக்கு சிறப்பிடம் உண்டு. உங்கள் செய்திகளில் போதையேறி தள்ளாடி நிற்கிறோம். வாழ்த்துக்கள். - வை.
Post a Comment