வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24வது ஆண்டு விழா இங்கு நடந்தது. சிறப்பாக நடந்தது. இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. வந்திருந்த, தொலைவிலிருந்து ஒளிபரப்பைப் பார்த்திருந்த எல்லோரும் சொன்னது. இவ்விழாவினைப் பற்றிய ஒரு பதிவினைச் செய்வது எங்கள் சங்கத்துக்கு அவசியம். ஆனால் அதனை எங்கிருந்து தொடங்குவது என்றுதான் தெரியவில்லை. எத்தனையோ மணித்துளிகள், எத்தனையோ ஆயிரங்கள், அவ்வளவு பேருடைய வியர்வையிலும் துளிர்த்து, வளர்ந்து பூத்துக் குலுங்கியது அந்த விழா. யாருக்கு நன்றி சொல்வது, எல்லோரையும் உள்ளடக்கிவிட முடியுமா அந்த நன்றியுரையில் என்றெல்லாம் மலைப்பாக இருக்கிறது. சென்ற ஆண்டு 2010லேயே பனைநிலம் என்று முடிவாகிவிட்டது. அன்றிலிருந்து ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி அவர்களுடைய தலைமையில் வேலைகள் சிறுகச் சிறுகச் சீராக செய்துவரப்பட்டன. கனெக்டிகட் விழா முடியும் வரையில் அரங்கைப் பதிவு செய்ததைத் தவிர கனெக்டிகட் விழாவுக்கு எவ்விதக் குந்தகமும் ஏற்படாத வகையில் பணியாற்றினோம். 2010 கனெக்டிகட் விழாவுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் சுமார் 20 பேர் சென்றிருந்து பறையடித்து, சார்ள்ஸ்டன் நகர அலுவலகத்திலிருந்து நாங்கள் வாங்கிக் கொண்டு போயிருந்த நகரக் கையேட்டினை அனைவருக்கும் கொடுத்து வாருங்கள் வாருங்கள் என வரவேற்று வந்தோம். அதன் பிறகு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றன. அக்கம்பக்கத்துத் தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்று பேரவை விழாவைப் பற்றிக் கூறி வரவேற்பிதழைக் கொடுத்து வந்தோம். கிரீன்வில், சார்லெட், அட்லாண்டா, அகஸ்டா, கொலம்பியா ஆகிய ஊர்களுக்குச் சென்று சொந்த முறையில் அழைப்பினை விடுத்தோம். அழைப்பிதழைத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு அச்சகம் அன்பளிப்பாக அளித்தது. ஒவ்வொருவரும் தத்தம் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து, விழாவுக்கு வரும்படி கேட்டுக் கொண்டோம். பேரவையைப் பற்றியும், விழாவைப் பற்றியும் பலரும் அறிந்துகொள்ளும் வகையில் தொலைபேசி வழியாகவே பெருமளவில் பரப்புரையை மேற்கொண்டோம். எங்களது அன்பான அழைப்பினைப் பலர் ஏற்றுக் கொண்டதையும், வர இயலாதவர்கள் அன்போடு தங்கள் ஆசியைக் கூறிக்கொண்டதையும் கண்டோம். இன்னும் சிலர், வர இயலாமல் போனதை நினைத்து வருந்தி, தங்கள் நன்கொடையை விழாவுக்கு அளித்த கொடை மாண்பையும் கண்டோம். இவர்கள் அனைவருக்குமான நன்றியை மற்றவர்களோடு சேர்த்து இவ்விடுகையின் இறுதியில் சொல்வோம்.
ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் ஒரு குழு. உணவு, நிகழ்ச்சிகள், அலங்காரம், நிதி திரட்டல், மலர், பதிவு, உபசரிப்பு என்று பலவிதக் குழுக்கள். ஒவ்வொன்றிலும் உள்ளூர்த் தமிழ்ச் சங்கத்தவரும், வெளியூர்த் தமிழ்ச் சங்கத்தவரும் கலந்திருந்தனர். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கொருமுறை என தொலைஅழைப்பில் கலந்துகொள்வோம். ஒவ்வொரு குழுவிலும் இருந்த உழைப்பாளிகளை நினைக்கும்போதும், அவர்கள் ஈடுபாட்டுடன் தத்தமது கடமைகளை ஒழுங்குணர்வோடும், அர்ப்பணிப்போடும் செய்ததை நினைக்கும்போது நெஞ்சம் நிறைகின்றது. இத்தகைய தொண்டர்களின் அர்ப்பணிப்பால்தான் பேரவை என்கிற ஆலமரம் சிறிய ஊர்களில்கூட கிளைபரப்பி நிலைகொள்ள முடிகிறது. இந்த அர்ப்பணிப்பும் தொண்டுணர்வும் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. எத்தனையோ தடங்கல்கள், சவால்கள், எதிர்ப்புகள் என்று பலவற்றுக்கும் முகம் கொடுத்து விழாவை வெற்றிகரமாக நடத்த முடிந்ததற்குக் காரணம் இந்தத் தொண்டர்களும், அவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்து மகிழ்ந்த ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட தலைவர்களும், பேரவையின் முன்னோடிகளும், கூடவே தமிழ் என்ற சக்திவாய்ந்த மொழி தந்த பலமும்தான். இந்த பலமே பல்வேறு தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த நண்பர்களும் மனமுவந்து முன்வந்து இணையமாகட்டும், மேடை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதாக இருக்கட்டும், விழா அன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு விருந்து பரிமாறுவதாக இருக்கட்டும், அல்லது பல்வேறு செயற்பாடுகளை நடத்துகிறதாகட்டும், எந்த வேலையையும் பகிர்ந்துகொண்டு செய்தார்கள். அந்தத் தோழமைக்கு எங்கள் நன்றிகளையும் இறுதியில் சொல்வோம்!
உணவைச் சமைக்க இடம் கண்டுபிடித்தது, சமைப்பதற்கு உணவகங்களை ஏற்பாடு செய்தது, சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து அழைத்து விசா, பயண ஏற்பாடுகளைச் செய்தது, தமிழன்னைக்கு சாமிமலையில் சிலையைச் செய்தது (அதுவும் நன்கொடையே), அரங்கின் முகப்பில் வைக்க தஞ்சை பெரிய கோயிலைப் பெரிய அளவிலே அச்சிட்டது (நன்கொடையே), உள்ளரங்கிலே பாவை விளக்கு ஓவியங்கள் (நன்கொடை), காலங்காட்டி வடிவமைத்து அச்சிட்டது (நன்கொடை), விழாவுக்கான அன்பளிப்புப் பை, பொன்னாடை, சந்தனமாலை, பதக்கங்கள், பரிசுகள் (நன்கொடை), மலரைத் தயாரித்து அச்சடித்தது (நன்கொடை) என ஒவ்வொரு பகுதியிலும் வேலைகள் செம்மையாக நடந்தேறின. ஒவ்வொரு வேலையின்போதும் சந்திக்க நேரும் மக்கள் அனைவரும் பாராட்டியது அக்குழுவினரின், பேரவையின் மொழி மீதான நேசத்தையும், அதற்காக நாம் அன்போடு செலுத்தும் உழைப்பையும்தான். அரங்கத்தின் பணியாளர்கள் அனைவரும் அன்போடு நமக்குப் பணிவிடை செய்தார்கள். இறுதியில் அரங்கைக் காலி செய்துவிட்டுக் கிளம்பும்போது நம்மை ஆரத் தழுவிப் பாராட்டி விடை கொடுத்தனுப்பினார்கள். எளிமையான மக்களின் உழைப்பாலேயே பெரும் காரியங்கள் சாதிக்கப்படுகின்றன என்பதை இன்னொருமுறை நாம் உணர்ந்துகொள்கிறோம்.
முதல் நாள் மாலை தென் கரோலினா மீனகத்தில் நடைபெற்ற வரவேற்பானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உவப்பைத் தந்தது. அந்த அழகிய மாலை நேரத்தில் வெளியே கூப்பர் ஆறும், வாண்டோ ஆறும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் நீர்நிலையினருகே தமிழ்க் குடும்பங்கள் சங்கமித்திருந்த காட்சி அழகு. மீனகத்தினுள்ளே குழந்தைகள் ஓடியாடி ஆர்வத்துடன் பலவித மீன்களையும், இதர உயிரிகளையும் பார்த்து, கற்று, குலாவி மகிழ்ந்திருந்தனர். புதுமையான இவ்வரவேற்பு ஏற்பாட்டினைப் பலரும் மகிழ்ந்து பாராட்டினர்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் முதலானோர் தத்தமது குறித்த நேரங்களில் வந்திருந்து விழாவில் பங்களித்தது மட்டுமல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளையும் கண்டும், மக்களோடு கலந்தும் இன்புற்றிருந்தார்கள். அவர்களில் பலரும் பேரவையின் செயற்பாடுகளைப் பற்றிய பெருமிதமும், ஒருவித வியப்பும் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களே சொன்னார்கள். நல்ல வேளையாக, "பெரும்" நட்சத்திரங்கள் என்ற போர்வையில் எந்த கூட்ட இழுப்பானும் (crowd puller) வரவில்லை என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஏனெனில் கவர்ச்சிக்கான எந்த அம்சத்தையும் காட்டாமல், திரைப்பட நாயக/நாயகிகளின் "கண்காட்சி" இல்லாமல் தமிழ் மொழி, கலை, பண்பாடு என்ற அறிவுசார் குணநலன்களை மட்டுமே முன்வைத்து ஒரு விழாவை வெற்றிகரமாக நடத்திவிட முடியும் என்று காட்டியது இந்த விழா. கடந்த சில ஆண்டுகளில் அறிந்தோ அறியாமையினாலோ சிலருக்கு ஒருவித பயம் கலந்த புரியாமை உண்டாகியிருந்தது, அது என்னவெனில், திரையுலகில் "பெரிய நட்சத்திரங்கள்" யாரையாவது கொண்டுவந்து காட்டினால்தான் விழாவுக்கு மக்கள் வருவார்கள் என்ற அறியாமை. அந்த மாயையை உடைத்து, பேரவை விழாவைத் தமிழின் பலத்தோடு மட்டுமே நடத்திவிட முடியும் எனக் காட்டியது இந்த விழா. நாம் அழைத்த எந்தக் கலைஞரும், எந்த அறிஞரும் எந்தவொரு crowd pullerஐயும் விட அவரவரது துறையில் சிறப்பானவர்களே. இத்தகைய தகுதி வாய்ந்த சிறப்பு விருந்தினர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்து சிறப்பித்ததைக் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். வரும் ஆண்டுகளில் பேரவை விழாவை நடத்த முனையும் ஒவ்வொரு சங்கமும் பயில வேண்டிய நீதி இது, கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு இது.
பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்களும், வணிகப் பெருமக்களும், அன்பர்களும் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்து உதவினார்கள். பிறரறியாமல் சக்தி கலைக்குழுவுக்கென எங்கள் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் 5000 டாலர் மனமுவந்து கொடுத்த கொடையை என்னவென்று பாராட்ட? ஒவ்வொருவரும் செய்த பொருளுதவியும் எங்கள் சங்கத்தில் நன்றியோடு நினைவுகூரப்படுகிறது. ஏனெனில் பொருளீட்டுதல் எவ்வளவு கடினமென்பதை நாமனைவரும் அறிவோம். ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் தங்களது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்து படைத்தார்கள். அந்த உழைப்புக்கு நம் வந்தனங்கள். பல தமிழ்ச் சங்கங்களுக்கு ஆர்வமிருந்தும் தொலைவு காரணமாக வர இயலவில்லை. நிகழ்ச்சிக் குழு ஒரு தமிழ்ச் சங்கத்தின் கலைஞர்களிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்ட ஒரு நிகழ்வு மேடையின் பின்புறத்தே ஒருமுறை நடந்தது. அத்தகைய நிகழ்வுக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். நேரப் பற்றாக்குறை காரணமாக எங்கள் தமிழ்ச் சங்கம் மூன்று மாத காலமாகப் பயிற்சியெடுத்து அரங்கேற்ற நினைத்திருந்த "மருது பாண்டியர்" நாடகம் அரங்கேறாமலேயே போனது இன்னொரு வருத்தம். இருப்பினும் அதில் வரும் மங்கையரின் நடனத்தை மட்டுமேனும் நிகழ்த்திவிட முடிந்ததில் ஒரு சிறிய தேறுதல். யாரேனும் ஒருவர் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நல்ல விமரிசன நோக்குடன் எழுதினாரென்றால் நன்றாக இருக்கும், யாருக்கு அந்த நேரம் இருக்கப் போகிறது. கண்ணன் என்ற எங்களூர்க்காரர் சுமார் 5000 அருமையான படங்களை எடுத்திருந்தார். இப்படங்களை பேரவையின் இணைய தளத்தில் காணலாம். அவருக்கு உறுதுணையாக அய்யா சிவன் அவர்களும் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். மறுபுறம் ரவி, செந்தூரன், தீபன், பாக்கியராசன், விஜய் அணி நேரடி ஒளிபரப்பினைத் துல்லியமாகச் செய்துகொண்டிருந்தது. காணொளிகள் விரைவில் கிடைக்கும்.
பேரவை விழாவினை ஒழுங்கமைத்த அத்தனை குழுக்களின் நடவடிக்கைகளையும், அவை எதிர்கொண்ட சவால்கள் அவற்றைத் தீர்த்த விதங்கள் போன்றவற்றை எழுத முனைந்தால் அது ஒரு புத்தகமாக நீளும். இருப்பினும் விழாவினைப் பற்றிய பல்வேறு பதிவுகளையும் இந்த இடுகையின் கீழே நாம் சேர்க்க முயற்சிப்போம். உங்களுக்குத் தெரிந்த வகையில் பேரவை விழாவினைப் பற்றி நீங்கள் வாசித்தவற்றை அவற்றின் சுட்டிகளோடு "கருத்து" பகுதியில் சேர்க்குமாறு வேண்டுகிறோம்.
நன்றி நவிலல்! மேற்சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது உளப்பூர்வமான நன்றியையும், அன்பையும் தெரிவித்துக் கொள்வதில் பேருவகை அடைகிறோம். எவரையேனும், எதையேனும் குறிப்பிடாது விட்டிருப்போமாயின் அது தற்செயலாக நேர்ந்ததேயென்றும், சுட்டிக்காட்டப்படுமிடத்து திருத்திக் கொள்வோமென்றும் பணிவுடன் தெரிவிக்கிறோம். நாமனைவரும் இணைந்து இதனைப் போலவே தொடர்ந்தும் பேரவையின் பல்வேறு திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியோடு நிற்போம். நன்றி, வணக்கம்!
- பனையேறி